கவுண்டமணி - சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு
தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் கவுண்டமணி. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் இடத்தில் இருக்கின்றன. அவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்து கொண்டு தான் வருகிறது. ரஜினி, கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில காலமாக உடல்நிலையை கருத்தில் கொண்டு படங்களில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார் கவுண்டமணி. இறுதியாக 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஓரிரு நிகழ்வுகளில் பங்கேற்றார். அதன் பின்னர் அவரை வெளியில் கூட காண முடிவதில்லை.
இந்நிலையில் கவுண்டமணியை அவரது இல்லத்திலேயே சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், இது மகிழ்ச்சியான, சிறப்பான தருணம், என்றும் நினைவில் இருக்கும் நாள் ஆல் டைம் பேவரைட் என்று பதிவிட்டுள்ளார்.