பொன்னியின் செல்வன்; ரயில் பயணத்தில் மணிரத்னம், ரகுமான்
ADDED : 1501 days ago
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், ரகுமான், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடிக்க ஏஆர் ரகுமான் இசையில், மணிரத்னம் இயக்கி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. கல்கியின் சரித்திர நாவலான இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ஜெயம் ரவி முடித்துக் கொண்டு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றைப் பதிவிட்டார். தற்போது ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகியோரும் அவர்களது படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்போது படத்தின் படப்பிடிப்பு மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகருக்கருகில் நடைபெற்று வருகிறது. அதற்காக ரயில் பணத்தை மேற்கொண்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
அது குறித்து படத்தில் நடிக்கும் நடிகர் ரகுமான் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோவில், 20 வருடங்களுக்குப் பிறகு ரயில் பயணம் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு முன்னால் சிவப்பு டீ ஷர்ட் போட்டு நடந்து செல்வது இயக்குனர் மணிரத்னம் என்ற தகவலையும், காட்சியையும் வெளியிட்டுள்ளார்.
“குவாலியரிலிருந்து இந்தூருக்கு ரயில் பயணம். நான் ரயிலில் பயணித்து 20 வருடங்களாகிவிட்டது. பழைய நினைவுகள் மீண்டும் வந்தது. மணிரத்னம், ரவிவர்மன் ஆகியோரிடம் எனது குறும்புத்தனமான சில கதைகளைச் சொன்னேன். எங்களது பயணம் மகேஷ்வர் நோக்கி. இங்கிருந்து இன்னும் இரண்டு மணி நேரம் சாலை வழிப் பயணம், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காக,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.