உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிர்ச்சி : ஹிந்தி நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் திடீர் மரணம்

அதிர்ச்சி : ஹிந்தி நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் திடீர் மரணம்

மும்பை : ஹிந்தி பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான சித்தார்த் சுக்லா(வயது 40) திடீர் மாரடைப்பால் காலமானார். அவரின் மரணம் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையை சேர்ந்தவர் சித்தார்த் சுக்லா. மாடலிங் துறையில் அசத்தி வந்த இவர் ஹிந்தியில் சின்னத்திரையில் நடிகராக ஜொலித்து வந்தார். பாலிகா வத்து என்ற சீரியல் மூலம் பிரபலமான தொடர்ந்து தில் சே தில் தக் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 13 சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னரும் ஆனார். அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் தொடர்ந்து மாடலிங், வெப்சீரிஸ், ஆல்பம் என பிஸியாக இருந்தார். ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா என்ற படத்தில் நடித்தும் உள்ளார். அதோடு 2005ல் உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.

பாலிகா வத்து என்ற சீரியலில் தமிழில் மண்வாசனை என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு இங்கும் ஒரு டிவியில் ஒளிபரப்பானது. இதன்மூலம் இங்கும் அவருக்கு ரசிர்கள் உள்ளனர்.


இந்நிலையில் இன்று காலை திடீரென சித்தார்த்திற்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இளம் வயதில் சித்தார்த் சுக்லா மரணத்தை தழுவியது ஹிந்தி சின்னத்திரை மற்றும் ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கும் நடக்கும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !