ரஜினி கட் அவுட்க்கு ரத்த அபிஷேகம் செய்த ரசிகர்கள்
ADDED : 1483 days ago
ரஜினி நடித்த படங்கள் வெளியாகும் போதெல்லாம், அவரது, கட் அவுட்க்கு பாலாபிஷேகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்த ரசிகர்கள், தற்போது ஆடு வெட்டி பலி கொடுக்க துவங்கி உள்ளனர். ரஜினி நடித்த, அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசம் கானல் நீரான நிலையில், அண்ணாத்த படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். விநாயகர் சதுர்த்தியன்று அண்ணாத்த படத்தின் முதல் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியானது.
இதை ரசிகர்கள் சிலர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆடு பலி கொடுத்து கொண்டாடி உள்ளனர்.அண்ணாத்த படத்தின் ரஜினி, கட் அவுட் முன் ஆட்டை வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர். இந்த காட்சிகள், சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.சமீபத்தில், தெலுங்கு நடிகர் கிச்சா சுதீப்புக்காக அவரது ரசிகர்கள், எருமையை வெட்டி பலி கொடுத்திருந்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ரஜினிக்காக ஆடு வெட்டியது சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே, 2.0 படத்திற்காகவும் ரஜினி ரசிகர்கள் சிலர் பலி கொடுத்திருந்தனர். அதற்கு, பீட்டா விலங்குகள் நல அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.