மேலும் விமர்சனம்
இட்லி கடை
2882 days ago
பல்டி
2882 days ago
ரைட்
2882 days ago
அந்த 7 நாட்கள்
2882 days ago
கிஸ்
2882 days ago
நடிகர்கள் - உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ்
இயக்கம் - கௌரவ் நாராயணன்
இசை - டி.இமான்
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
தமிழ் சினிமாவில் முடிந்து போன வெடிகுண்டு வைக்கும் த்ரில்லர் படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கௌரவ் நாராயணன்.
வெடிகுண்டு கலாச்சாரம் என்பது தமிழ்நாட்டிலும் அதிகமாக இல்லை, தமிழ் சினிமாவிலும் அதிகமாக இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னால் அப்படிப்பட்ட படங்களுக்கு இயக்குனர்களும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். அப்ப சீசன் முடிந்து போன ஒரு கதையை இப்போது வந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு படத்தைப் பொதுவாக நாயகன் மீது தான் ஆரம்பிப்பார்கள். அல்லது நாயகன் பற்றிய பிளாஷ்பேக் ஆக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் வில்லனிடமிருந்துதான் கதையை ஆரம்பிக்கிறார்கள். அதுவே சுவாரசியத்தைக் குறைத்து விடுகிறது.
நாயகன் உதயநிதி ஸ்டாலின், ஒரு கந்துவட்டி அடியாட்களிடமிருந்து தப்பிப்பதற்காக ரோட்டில் ஓடும் போது சாலையில் குறுக்கே வருபவற்றின் நீள, அகலம், உயரம், வேகம் ஆகியவற்றைக் கணக்கிட்டு மூளையைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாகத் தப்பிக்கிறார். ஆனால், அந்த புத்திசாலித்தனம் அதன்பின் படத்தில் வேறு எங்குமே வராதது தான் ஆச்சரியம்.
உதயநிதி, மஞ்சிமா மோகன் இருவரும் காதலர்கள். இந்தக் காதலுக்கு மஞ்சிமாவின் அண்ணன் காவல் துறை அதிகாரியான ஆர்.கே.சுரேஷ் எதிர்ப்பாக இருக்கிறார். சென்னையில் வெடிகுண்டு வைக்க வரும் டேனியல் பாலாஜியை ஒரு இரவில் காரில் இடித்துவிட்டு அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார் உதயநிதி. கையில் பணம் இல்லாததால் அவரை மருத்துவமனையில் விட்டுவிட்டு ஓடிவிடுகிறார். டேனியல் பாலாஜியும் அங்கிருந்து தப்பிக்கிறார். விஷயம் காவல் துறை வரை செல்கிறது. டேனியல் பாலாஜியின் கூட்டத்தைச் சேர்ந்தவர் தான் உதயநிதி என காவல் துறை முடிவு செய்கிறது. டேனியலுக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த சூரியும், உதயநிதியும் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் பிடியிலிருந்து தப்பிக்கும் இருவரும், தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை எப்படி நிரூபிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
உதயநிதி வழக்கம் போல அதே ஸ்டீரியோ டைப் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யாரிடம் பேசினாலும் ஒரே மாதிரியே பேசுகிறார். காதலியிடமும், அம்மாவிடமும், நண்பனிடமும், வில்லனிடமும் என எதிலும் ஒரு வித்தியாசம் இல்லை. ஒரு நல்ல இயக்குனரின் படத்தில் நடித்தால் மட்டுமே உதயநிதிக்கு ஒரு மாற்றம் கிடைக்கும். அதை விரைவில் செய்தால் நல்லது.
மஞ்சிமா மோகன், ஏன் முகத்தில் அப்படி ஒரு சோகம் எனத் தெரியவில்லை. பாடல் காட்சிகளில் கூட ஒரு சோகத்துடனேயே இருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே இவரும், உதயநிதியும் காதலர்கள் எனக் காட்டிவிடுவதால், இவர்களின் காதல் காட்சிகளைப் பார்க்க வேண்டிய நிலைமை நமக்கு இல்லை. இருந்தாலும், காதலன் உதயநிதிக்கு உதவியாக படம் முழுவதும் வருகிறார்.
சூரி, தனக்கென ஒரு நகைச்சுவை எழுத்துக் கூட்டணியை வைத்துக் கொள்வது நலம். ஒரு சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். அதிலும், அப்படியே வடிவேலுவின் பாடி-லாங்வேஜ் வந்துவிடுகிறது, குறிப்பாக மருத்துவமனையில் உதயநிதியுடன் இருக்கும் போது வடிவேலுவை அப்படியே காப்பியடித்திருக்கிறார். சிறுநீர் கழிப்பதையெல்லாம் காமெடி என சொல்லிக் கொண்டு காட்சிகளை வைத்திருப்பது சிறுபிள்ளைத் தனம்.
பொதுவாக, வெடிகுண்டு வைப்பவர்களை வேறு மதத்தினராகக் காட்டுவதுதான் சினிமாவில் வழக்கம். இந்தப் படத்தில் வித்தியாசமாக ஒரு இந்து வெடிகுண்டு வைக்கிறார் என்பது எதற்கு என்று தெரியவில்லை. இப்படி வெடிகுண்டு வைப்பவராக சோட்டா என்ற கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி. தனி வில்லனாக இந்தப் படத்தில் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.
சிறப்புத் தோற்றத்தில் ராதிகா, பேருந்து ஓட்டும் பெண்மணியாக நடித்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷ், காவல் துறை அதிகாரி, அலட்டலான, அதிகப்பிரசங்கித்தனமான நடிப்பு. வேறு யாருடை கதாபாத்திரங்களும் அவ்வளவு முக்கியமானதாக இல்லை.
ஒரே ஒரு டூயட் பாட்டில் மட்டும் இசை இமான் எனத் தெரிகிறது. அதிகப் படங்களை ஒத்துக் கொள்வதை இமான் குறைத்துக் கொண்டால் அவருக்கும் நல்லது. வர வர ஐந்து பாடல்களில் ஒன்றுதான் ஹிட் ஆகிறது அவருக்கு.
உதயநிதியும், மஞ்சிமாவும் நினைத்த நேரத்தில் மற்றவர்களிடமிருந்து எளிதில் உதவிகளைப் பெறுகிறார்கள். உதயநிதி, செல்போன் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பனுக்கு போன் செய்கிறார், உடனே அவருக்கு வில்லனின் போன் பேச்சுக்கள் பற்றிய விவரங்கள் தெரிய வருகின்றன. மஞ்சிமா, காவல்துறையில் இருக்கும் அண்ணனின் நன்பனைச் சந்திக்கிறார், வில்லன் எங்கிருக்கிறார் எனக் கண்டுபிடித்துவிடுகிறார். இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்ப்பதோ.
கோடம்பாக்கத்தில் பல திறமைசாலியான இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நல்ல, பெரிய தயாரிப்பாளர்கள் கிடைக்கப் பெறும் இயக்குனர்கள் சரியான படங்களைக் கொடுக்காமல் திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிடுகிறார்கள்.
இப்படை வெல்லும், பெயரை மட்டும் வைத்துவிட்டால் போதுமா...?.
2882 days ago
2882 days ago
2882 days ago
2882 days ago
2882 days ago