மேலும் விமர்சனம்
இட்லி கடை
2345 days ago
பல்டி
2345 days ago
ரைட்
2345 days ago
அந்த 7 நாட்கள்
2345 days ago
கிஸ்
2345 days ago
நடிப்பு - கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி
தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் - முத்தையா
இசை - நிவாஸ் கே பிரசன்னா
வெளியான தேதி - 1 மே, 2019
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
அடிதடியில் யோசிக்காமல் இறங்கும் நாயகன், நாயகனால் வில்லன் பாதிக்கப்பட, நாயகனைக் கொல்லத் துடிக்கும் வில்லன், அவர் குடும்பத்தில் ஒருவரைக் கொன்றுவிடுகிறார். பதிலுக்கு வில்லனை பழி வாங்கத் துடிக்கும் நாயகன் கிளைமாக்சில் வில்லனை எப்படிக் கொல்கிறார் என தமிழ் சினிமாவில் ஓராயிரம் முறை பார்த்த அதே டெம்ப்ளேட் கதையை இந்தப் படத்திலும் வைத்திருக்கிறார் இயக்குனர் முத்தையா.
தேவராட்டம் என்பது ஒரு கிராமியக் கலை, அதற்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. கொலவெறி ஆட்டம் என்று வேண்டுமானால் பெயர் வைத்திருக்கலாம். வில்லன் தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் கத்தியால் குத்திக் கொலை செய்கிறார். வில்லன் கும்பலை பதிலுக்குப் பதில் வஞ்சமில்லாமல் தீர்த்துக் கொலை செய்கிறார் நாயகன். படம் முழுவதும் ரத்தம் தெறிக்கிறது.
முழுவதுமாக ரத்தம் தெறித்தால் விமர்சிப்பார்கள் என்று அக்கா, தம்பி பாசம் என மறுபக்கம் சென்டிமென்ட் பாசத்தையும் சேர்த்து சமாளிக்கிறார் இயக்குனர். ஒரு அக்கா மட்டுமல்ல ஆறு அக்காக்கள், ஒரு தம்பி. அதிலும் பெரிய அக்காவை அம்மாவுக்கு ஈடாகக் காட்டி நெகிழ வைக்கிறார் இயக்குனர் முத்தையா. பெண்களைக் கொடுமைப்படுத்துபவர்களைக் கருவறுக்க வேண்டும் என்கிறார். அந்த ஒரு விஷயத்தை வன்முறையாகக் கொடுப்பதற்குப் பதிலாக வரைமுறையாகக் கொடுத்திருக்கலாம்.
கௌதம் கார்த்திக் வக்கீலுக்குப் படித்தவர். அப்பா, அம்மாவை பிறந்ததுமே இழந்தவரை ஆறு அக்காக்கள் எடுத்து வளர்க்கிறார்கள். மதுரையை தன் ரவுடியிசத்தால் ஆட்டிப் படைக்கும் பெப்சி விஜயனின் மகனை, ஒரு பெண் விவகாரத்தில் கொலை செய்கிறார் கௌதம் கார்த்திக். பதிலுக்கு கௌதம் கார்த்திக்கைக் கொல்லத் துடிக்கிறார் பெப்சி விஜயன். இந்த மோதலில் கௌதம் கார்த்திக் குடும்பம் சிக்கித் தவிக்கிறது. அதிலிருந்து அவர்கள் மீள்கிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
கௌதம் கார்த்திக்கை ஒரு அக்ஷன் ஹீரோவாக உயர்த்தும் படம் இது. ஆறடி உயரமும், ஆஜானுபாகுவான தோற்றமும் அவர் அடித்தால் அதை நம்ப வைக்கிறது. முந்தைய படங்களில் பார்ப்பதற்கு விளையாட்டுப் பிள்ளையாகத் தெரிந்தவர், இந்தப் படத்தில் வீரமான இளைஞனாகத் தெரிகிறார். சாக்லெட் பாய் இமேஜிலிருந்து கௌதம் கார்த்திக்கை மாற்றியிருக்கும் படம் இது.
படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன். நடிப்பை வெளிப்படுத்த பெரிய காட்சிகள் இல்லை. இருப்பினும் மதுரைப் பெண் போலவே பாந்தமாக இருக்கிறார். காதல் காட்சிகளைக் கூட படத்தில் காணவில்லை. ஆறு அக்காக்கள் கூட ஆளுக்கு ஆறு வசனம் பேசியிருப்பார்கள் போலிருக்கிறது. நாயகி மஞ்சிமாவுக்கு ஆறு வசனம் இருந்தாலே அதிகம்தான்.
மூத்த அக்காவாக வினோதினி. அக்கா என்பவர் ஒரு அம்மாவுக்கும் ஈடானவர் என்பதை தன் பாசமான நடிப்பின் மூலம் புரிய வைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அக்காவுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். அவரது கணவராக போஸ் வெங்கட். மற்ற அக்கா, மாமாக்களில் சூரிக்கு மட்டும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு திடீரென அவருக்கு மட்டும் தனியாக ஒரு நகைச்சுவைக் காட்சி எதற்கு வந்து போகிறது எனத் தெரியவில்லை.
பெப்சி விஜயன்தான் படத்தின் மெயின் வில்லன். இதற்கு முன் தமிழ் சினிமாவில் பார்த்து பழகிப் போன அதே முறைப்பு, விறைப்பு என அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். இவர் கதாபாத்திரத்திற்கு வேறு யாரையாவது நடிக்க வைத்திருந்தால் கொஞ்சமாவது வித்தியாசமாக இருந்திருக்கும். வில்லத்தனம் என்றால் இப்படித்தான் என ஒரு கிராமருக்குள்ளேயே வலம் வருகிறார் விஜயன்.
படத்தின் ஆரம்பத்தில் அடிக்கடி பாடல்களும், நீ...ளமான சண்டைக் காட்சிகளும் வருகின்றன. டூயட் வைக்க வேண்டுமென்றபதற்காக இடைவேளைக்குப் பின் இடைச்செருகலாக ஒரு பாடல்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் மதுரை பளபளக்குது பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் சிறப்பு. சக்தி சரவணன் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடிந்த திரைக்கதை படத்தின் மைனஸ் பாயின்ட். முந்தைய படங்களில் எதையும் ஒரு அழுத்தத்துடன் கொடுப்பார் முத்தையா. கூடவே சாதிப்பாசமும் இருக்கும். இந்தப் படத்தில் அழுத்தமும் இல்லை, சாதிப்பாசமும் இல்லை. எடுத்து முடிக்க வேண்டும் என்று ஏதோ கடமைக்கு எடுத்து முடித்தது போலிருக்கிறது.
தேவராட்டம் - அடிதடி ஆட்டம்...
2345 days ago
2345 days ago
2345 days ago
2345 days ago
2345 days ago