மாறா
நடிப்பு - மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா, மௌலி
தயாரிப்பு - பிரமோத் பிலிம்ஸ்
இயக்கம் - திலீப்குமார்
இசை - ஜிப்ரான்
வெளியான தேதி - 8 ஜனவரி 2021 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 29 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
2015ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி மற்றும் பலர் நடித்து வெளிவந்த சார்லி படத்தின் ரீமேக்தான் மாறா. ஒரிஜனல் மலையாளப் படத்திலிருந்து சில பல மாற்றங்களைச் செய்து தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் திலீப்குமார் படத்தை அழகியலுடன் கொடுக்கவே அதிக ஆசைப்பட்டுள்ளார். உணர்வுபூர்வமாக, அழுத்தமாக அமைய வேண்டிய பல காட்சிகள் அப்படியே கடந்து போகின்றன. கிளைமாக்சில் மட்டும் அவற்றைச் சரியாகக் காட்டிவிட்டு, அதை நோக்கி பயணிக்கும் காட்சிகளில் பரபரப்பு இல்லாதது படத்திற்குப் பெரும் இழப்பு.
மாதவன் சிறந்த ஓவியர், கலா ரசிகர். பழங்கால கட்டிடங்களை அதன் தன்மை மாறாமல் மறுசீரமைப்பு செய்து அவற்றைப் பாதுகாக்கும் வேலையைச் செய்பவர் ஷ்ரத்தா. பணிநிமித்தமாக செல்லும் ஊரில் மாதவன் வீட்டிற்குச் சென்று தங்க வேண்டிய சூழல் கிடைக்கிறது. வீட்டைவிட்டு எங்கோ வெளியூர் சென்றுள்ளார் மாதவன். அவரது வீட்டில் ஒரு ஓவிய புத்தகத்தைப் பார்க்கிறார். களவாடிய பொழுதுகள் என்ற தன் திருட்டு அனுபவம் ஒன்றை ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறார் மாதவன். ஆனால், அந்த ஓவியக் கதை பாதியிலேயே நிற்கிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார் ஷ்ரத்தா. அந்தப் பயணம் எங்கு, எப்படிப் போய் முடிகிறது என்பதுதான் மாறா.
படத்தில் மாதவனை கதாநாயகன் என்று சொல்வதைவிட கௌரவ கதாநாயகன் என்று வேண்டுமானால் சொல்லலாம். மொத்தமாக பத்து காட்சிகளில் அவர் வந்திருந்தாலே அதிகம். நடுத்தர வயதுக்காரராக தாடி, மீசை நரைத்த மாறாவாக மாதவனைப் பார்ப்பது மாற்றமாகவே இருக்கிறது. அவரைப் பார்க்காமல் மனதாரக் காதலிக்கும் ஷ்ரத்தாவின் கதாபாத்திரம் கொஞ்சம் நெருடல்தான்.
சென்னையிலிருந்து கொச்சிக்குச் (?) சென்றதுமே யதேச்சையாக மாதவன் வீட்டிற்குச் சென்று தங்குகிறார் ஷ்ரத்தா. கலைநயம் மிக்க அந்த ஊர், அந்த ஊரில் அவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு கதை, ஓவியமாக வரையப்பட்ட சுவர்கள். மாதவன் வீட்டிலிருந்து மட்டுமே அவை முழுவதுமாகத் தெரிவது என ஆரம்பக் காட்சிகளில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குனர் ஒரு மாபெரும் ரசனையை நமக்குக் காட்டுகிறார்கள். அடடா, என ரசித்து மகிழ்ந்தால், அந்த மகிழ்ச்சியை நீடிக்க வைக்காமல் செய்துவிட்டார்கள்.
படத்தில் நாயகன் மாதவனைவிட நாயகி பாருவுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். பார்வதி என்று சொன்னால் பாருக்குக் கோபம் வருமாம். படத்தின் கதையைக் கேட்டு படத்தில் நமக்குத்தான் முக்கியத்துவம் அதிகமிருக்கும் என ஷ்ரத்தா ஸ்ரீநாத் உணர்ந்திருப்பார் போலிருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும், உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் ரசித்து ரசித்து செய்திருக்கிறார். கிளைமாக்சில் கூட ஒரு முக்கியமான விஷயத்தை ஷ்ரத்தா தான் செய்து முடிக்கிறார். ஷ்ரத்தாவுக்கு இந்த மாறா படம் ஒரு மறக்க முடியாத படமாகவே இருக்கும்.
மற்ற கதாபாத்திரங்களில் அபிராமியா இது என ஆச்சரியப்பட வைக்கிறார் அபிராமி. ஷிவதா ஒரு பாந்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மௌலி வழக்கம் போல இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். கடைசி அரை மணி நேரம் அவர்தான் படத்தின் ஹீரோ என்றால் அது மிகையில்லை. குரு சோமசுந்தரம், கிஷோர், அலெக்சாண்டர் பாபு வந்து போகிறார்கள்.
பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் பல காட்சிகள். அதை உணர்ந்து செய்திருக்கிறார் ஜிப்ரான். சித் ஸ்ரீராம் பாடும் முதல் பாடல் மட்டும் மயக்குகிறது.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துக்குமார், படத்தொகுப்பாளர் புவன் சீனிவாசன், கலை இயக்குனர் அஜயன் சலிசெரி ஆகியோர் தங்கள் உழைப்பை முழுவதுமாகக் கொட்டியிருக்கிறார்கள்.
டிரைலரைப் பார்த்ததுமே அடடா, ஒரு அழகான காதல் பயணக் கதையைக் உணர்வுபூர்வமாய் காட்டப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு வந்திருக்கும். அது முழுமையாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்து நமக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.
மாறா - ஏன் மாறா ?