கதிர்
தயாரிப்பு - துவாரகா ஸ்டுடியோஸ்
இயக்கம் - தினேஷ் பழனிவேல்
இசை - பிரசாந்த் பிள்ளை
நடிப்பு - வெங்கடேஷ், பாவ்யா ட்ரிக்கா
வெளியான தேதி - 29 ஏப்ரல் 2022
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
தமிழ் சினிமாவில் சில படங்களைப் பார்க்கும் போது நமக்கு ஒரு ஆச்சரியம் கிடைக்கும். அப்படி ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ள படம் இது.
வழக்கமான சினிமா போல இல்லாமல் ஏதோ ஒருவரது வாழ்க்கையை நேரில் பார்ப்பது போன்ற இயல்பான ஒரு சினிமாவைப் பார்க்கும் ரசனையைக் கொடுத்திருக்கிறது இந்தப் படம்.
ஒரு யதார்த்த சினிமாவைக் கொடுத்ததற்காக இயக்குனர் தினேஷ் பழனிவேல், கதாநாயகன் வெங்கடேஷ், பாட்டியாக நடித்த ரஜினி சாண்டி ஆகியோரை மனதாரப் பாராட்டலாம்.
அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு, கோயம்பத்தூரில் இருந்து சென்னைக்கு வேலை தேடிச் செல்கிறார் கதாநாயகன் வெங்கடேஷ். இஞ்சினியரிங் முடித்திருந்தாலும் ஆங்கிலம் சரியாகப் பேச வராததால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. சென்னையில் நண்பன் அறையில் தங்குபவருக்கு, அந்த வீட்டின் உரிமையாளரான பாட்டி ரஜினி சாண்டியுடன் ஒரு பாசப் பிணைப்பு ஏற்படுகிறது. பல இன்டர்வியூக்களில் கலந்து கொண்டு வேலை கிடைக்காத நிலையில் மாற்றத்திற்காக சொந்த ஊருக்குச் செல்கிறார் வெங்கடேஷ். அங்கு நெருங்கிய கல்லூரி நண்பன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார். தனக்காக யோசிப்பதை விட மற்றவர்களுக்காகவும் யோசிக்க வேண்டும் என பாட்டி ரஜினி சொல்ல, ஊரிலேயே சொந்த தொழில் ஒன்றை நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பிக்கிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கதாநாயகன் கதிர் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ். கதாநாயகனாகத் தெரியாமல் கதையின் நாயகனாகத் தெரிகிறார். எந்த இடத்திலும் அவர் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவிற்கு அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் கல்லூரி மாணவராக, காதலனாக அதிரடி காட்டுகிறார்.
படத்தில் கதாநாயகியை விட பாட்டி ரஜினி சாண்டி கதாபாத்திரத்திற்கத்தான் முக்கியத்துவம் அதிகம். படம் முழுவதுமே வருகிறார் ரஜினி. யார் இவர், இதுவரை இவரை தமிழ் சினிமாவில் பார்த்ததில்லையே என்று கூகுள் செய்தால் மலையாளத்தில் நடித்திருக்கிறாராம். ஒரு வீட்டின் உரிமையாளர் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு முக்கியத்துவத்தை எந்த தமிழ் சினிமாவிலும் கொடுத்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பிளாஷ்பேக்கில் வெங்கடேஷ் காதலியாக பாவ்யா டிரிக்கா. கொஞ்சம் கோபக்காரப் பெண் கதாபாத்திரம். திடீரென வெங்கடேஷை வேண்டாமென்று சொல்லி அவரை விட்டுப் போவதுதான் இடிக்கிறது.
மற்றொரு பிளாஷ்பேக் காதல் கதையும் படத்தில் உண்டு. அது பாட்டி ரஜினி சாண்டி, சந்தோஷ் பிரதாப் சம்பந்தப்பட்டது. 40 வருடங்களுக்கு முன்பு விவசாய கூலிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்கிறது அந்தக் காட்சிகள். அதில் இளமைக் கால ரஜினியாக நடித்திருக்கும் நடிகை சிரிப்பாலேயே கவர்கிறார்.
படத்தில் வெங்கடேஷ் நண்பர்களாக சிலர் நடித்திருக்கிறார்கள். சினிமாத்தனமில்லாத இயல்பான முகங்கள். அதில் நட்பு, சோகம், கலகலப்பு, பாசம் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தில் சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், இப்படியான திரைப்பட உருவாக்கங்களுக்கு தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் ஆதரவு தர வேண்டும்.
கதிர் - நண்பேன்டா