ரணம் - அறம் தவறேல்
தயாரிப்பு - மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஷெரிப்
இசை - அரோல் கொரேலி
நடிப்பு - வைபவ், தன்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன்
வெளியான தேதி - 23 பிப்ரவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
தமிழ் சினிமாவில் அடையாளம் தெரியாத குற்றவாளியைக் கண்டுபிடிக்க, பார்த்தவர்கள் சொன்ன விவரங்களை வைத்து, ஒரு ஓவியர் குற்றவாளி இப்படித்தான் இருப்பார் என படம் வரைந்து காட்டுவார். அந்த ஓவியர் கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு இடத்தில் வந்து போகும். அந்த ஓவியர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஷெரிப்.
ஓவியம் நன்றாக வரையும் திறமை வாய்ந்தவர் வைபவ். முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு கொல்லப்பட்டு, சிதிலமடைந்த முகத்தை வைத்து இறந்து போனவர்களின் முகம் இப்படித்தான் இருக்கும் என வரைந்து கொடுப்பவர். அது மட்டுமல்ல கொலை நடந்ததற்கான காரணம், யார் குற்றவாளி என்பதையும் ஒரு ஸ்கிரிப்ட் ஆகவும் எழுதிக் கொடுப்பார். சென்னை, மாதவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லையில் கை ஒரு இடத்தில், கால்கள் ஒரு இடத்தில், உடலின் மேற்பகுதி ஒரு இடத்தில் என மூவரது உடல் பாகங்கள் கருகிய நிலையில் வைக்கப்படுகிறது. அந்த வழக்கை விசாரித்து வந்த இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். அங்கு வேலைக்கு மாற்றலாகி வரும் பெண் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப் விசாரணையை ஆரம்பிக்கிறார். அவருக்கு வைபவ்வும் உதவி செய்கிறார். கொலைகளுக்கான காரணம், கொலையாளி யார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
க்ரைம் கதைகள் எடுப்பதற்கென தனி கவனம் வேண்டும். திரைக்கதையில் எந்த ஒரு இடத்திலும் தடுமாற்றம் வந்துவிடக் கூடாது. இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் க்ரைம் நிகழ்வுகளுக்கான கதை, திரைக்கதை எழுதியதில் இயக்குனர் ஷெரிப் அதிக கவனத்துடன் இருந்திருக்கிறார்.
விபத்தில் காதலியைப் பறி கொடுத்த சோகத்தில் இருப்பவர் வைபவ். அதனால், திடீரென மூளை பாதிப்பு ஏற்பட்டு ஒரு நிமிடம் 'ப்ரீஸ்' ஆகவும் நின்றுவிடுவார். மிக அமைதியாக காவல் துறையினருக்கு உதவி செய்கிறார். எந்த இடத்திலும் கதாபாத்திரத்தை விட்டு விலகாமல் அந்த எல்லைக்குள்ளேயே சிறப்பாகவே நடித்திருக்கிறார் வைபவ். இம்மாதிரியான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பவருக்கு நல்லதொரு வெற்றி இன்னும் கிடைக்காமல் இருப்பது ஆச்சரியம். இந்தப் படம் அதைக் கொடுக்கட்டும்.
படத்தில் மூன்று கதாநாயகிகள். இன்ஸ்பெக்டராக தன்யா ஹோப். அதற்கான உடல் மொழி, கம்பீரம் ஆகியவற்றில் தன் கதாபாத்திரத்தில் தடுமாற்றமில்லாமல் நடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பிறகான திரைக்கதையில் நந்திதா ஸ்வேதா ஸ்கோர் செய்கிறார். அவரது கதாபாத்திரம் அழுத்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வைபவ் காதலியாக பிளாஷ்பேக்கில் கொஞ்ச நேரமே வந்து மறைந்து போகிறார் சரஸ் மேனன்.
படத்தில் அத்தனை கொலைகளைச் செய்யும் குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸை கடைசி வரை காப்பாற்றியிருக்கிறார்கள். இவர்தான் குற்றவாளி எனத் தெரிய வரும் போது அதிர்ச்சியாகவே உள்ளது. அத்தனை கொலைகளை அவர் செய்வதற்கான காரணத்தையும் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
அரோல் கொரேலி பின்னணி இசை சத்தமாய் ஒலிக்கிறது. சில இடங்களில் கதாபாத்திரங்கள் என்ன வசனம் பேசுகிறார்கள் என்பது கூட தெளிவாகக் கேட்கவில்லை. திரில்லர் படங்களுக்கே உரிய லைட்டிங்கில் ஒளிப்பதிவாளர் பாலாஜி கே ராஜா கவனம் செலுத்தி பதிவு செய்திருக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகான சில கிளைக் கதைகள் மட்டும் ஓவர் டோஸ் ஆகி கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதைச் சரி செய்திருந்தால் சிறப்பான படமாக வந்திருக்கும். காவல் நிலையத்தின் நுழைவாயிலில் 'மாதவரம்' என்பது 'மாதாவரம்' என இருப்பதைக் கூட படம் முழுவதும யாருமே கவனிக்கவில்லை.
ரணம் அறம் தவறேல் - சினம்..