உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / பன் பட்டர் ஜாம்

பன் பட்டர் ஜாம்

தயாரிப்பு : ரெயின் ஆப் ஆரோஸ் என்டர்டெயின்ட்மென்ட்
இயக்கம் : ராகவ் மிர்தாத்
நடிப்பு : ராஜூ ஜெயமோகன், ஆதியா, பாவ்யா, சரண்யா பொன்வண்னன், தேவதர்ஷினி, மைக்கேல், பப்பு
இசை : நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு : பாபுகுமார்
வெளியான தேதி : ஜூலை 18, 2025
நேரம் : 2 மணிரேநம் 27 நிமிடம்
ரேட்டிங் : 3.25 / 5

இன்றைய இளம் தலைமுறையினர் காதல், நட்பு, குடும்பம் போன்ற விஷயங்களை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், வாழ்க்கையை எப்படி பார்க்கிறார்கள், அவர்கள் அகராதி படி பிரண்ட்ஸ் யார்? பெஸ்டி யார்? லவ்வர் யார்? அவர்களின் உறவுமுறை எல்லை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? ‛பன் பட்டர் ஜாம்' பார்க்கணும். ராகவ் மிர்தாத் இயக்கி இருக்கிறார்.

இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரான ராஜூ (பிக்பாஸ்), தன்னுடன் படிக்கும் பாவ்யாவை காதலிக்கிறார். ஆனால், அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் இன்னொரு ஹீரோயின் ஆதியாவை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார் ராஜூ அம்மாவான சரண்யா பொன்வண்ணன். ஆனால், ஆதியா பப்புவை காதலிக்கிறார். இதற்கிடையில், ராஜூ உயிர் நண்பனான மைக்கேல் காதலிலும் பிரச்னை. இவர்கள் வாழ்க்கையில் இந்த ரிலேஷன்ஷிப்பால் என்ன பிரச்னைகள் வருகிறது. கடைசியில் யார் காதல் ஜெயித்தது? யாருடன் யார் ஜோடி சேர்நதார்கள் என்பது பன் பட்டர் ஜாம் படக்கரு.

2 கே கிட்ஸ், ஜென் ஸீ தலைமுறையினர் போன்றவர்கள் வாழ்க்கையை, கல்லுாரி, குடும்பம் பின்னணியில் கலர்புல் காதல், காமெடி கலந்த படமாக பன் பட்டர் ஜாமை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அதனால், சீனுக்கு சீன் புதுமையாக, விறுவிறுப்பாக இருக்கிறது. இப்படிதான் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்கிறார்கள் என்று அழகாக சொல்லப்பட்ட திரைக்கதை படத்தை ரசிக்க வைக்கிறது. புதுப்புது கேரக்டர் அறிமுகம், காமெடி, திருப்பங்கள் என கதையே பாதி வெற்றியை தந்து விடுகிறது. மீதியை நடிகர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

காமெடி கலந்த நடிப்புடன் கதையில் அறிமுகம் ஆகும் பிக்பாஸ் வின்னர் ராஜூக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவரின் அப்பாவிதனமான சேட்டைகள், காதல் சீன்கள், பல கேள்விகள், கடைசியில் நட்புக்காக மாறுவது ஆகியவை பக்கா. ராஜூ காதலியாக வரும் பாவ்யா அவ்வளவு அழகு. பல சமயங்களில் நன்றாகவும் நடித்து இருக்கிறார். இன்னொரு ஹீரோயினான ஆதியா அதை விட ஒருபடி மேல். அவரின் துறுதுறு நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள், அந்த கிளைமாக்ஸ் நடிப்பும், அந்த மூக்குத்தியும், அவரின் பாடிலாங்குவேஜூம் சூப்பர்.

இவர்களை தவிர, ஹீரோ அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணனும், ஹீரோயின் அம்மாவாக வரும் தேவதர்ஷினியும் பல்வேறு ஐடியாக்களால் சிரித்து ரசிக்க வைக்கிறார்கள். அன்பாக அட்வைஸ் செய்கிறார் ஹீரோ அப்பாவாக வரும் சார்லி. இன்னொரு நடிகரான பப்பு அப்பா கேரக்டரும், அவர் துரத்துவதும் செம இன்ட்ரஸ்ட்டிங். விக்ராந்த் கவுரவ தோற்றத்தில் வருகிறார். பப்பு வரும் சீன்கள் படத்தை கலகலப்பாக்குகின்றன. அந்த ஹீட்டர், பீட்சா சாப்பிடுகிற சீன்கள் அடடே.

நிவாஸ் கே பிரசன்னா இசையும், பாடல்களும், பாபு குமாரின் ஒளிப்பதிவும் படத்தை இன்னும் இளமையாக்கி விடுகின்றன. காதல் கதையில் காமெடியை புகுத்தியது இயக்குனரின் புத்திசாலிதனம். ஒரு கல்லுாரிக்கு சென்று வந்த, கல்லுாரி நண்பர்களை சந்தித்த பீலிங்கை பல இடங்களில் தத்ரூமாக கொடுத்து இருக்கிறார்.

கல்லுாரி, வீடு சம்பந்தப்பட்ட சீன்களும், காதல் சீன்களும், கிளைமாக்ஸ் வசனங்களும் 'இது யூத்புல்' படம் என்பதை சொல்லாமல் சொல்கிறது. அந்த ராகிங் சீன், கிரிக்கெட் மட்டையுடன் அடிக்கிற வருகிற சீன்களை இன்னும் எத்தனை படத்தில்தான் காண்பிப்பார்களோ? அந்த டிஷ்யூ பேப்பர் சீன் தேவையா ராஜூ? படம் முழுக்க ஏகப்பட்ட இடங்களில் சிகரெட் பிடிக்கிற சீன். அனைத்து மாணவர்களும் இப்படியா என்ன? அந்த ஓவர் பில்டப் காலேஜ் பாடல் ரொம்ப ஓவர். நண்பனுக்காக அவர் டக்கென மாறுவதை பலராலும் ஏற்க முடியவில்லை. விக்ராந்த் சீனையும் குறைத்து இருக்கலாம். கிளைமாக்ஸ் இயக்குனரின் கருத்து. அதில் கொஞ்சம் இடிக்கிறது. சிலர் ஏற்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனாலும், பாக்யராஜ் படம் மாதிரியான மாறுபட்ட கிளைமாக்ஸ். இளம் தலைமுறை, ஜென் ஸீ தலைமுறையினர் வாழ்க்கையை படம் பிரபலிக்கிறது. அந்த வயதினர் கொண்டாட்டமாக பார்க்கலாம். மற்றவர்கள், அட, நமக்கு இப்படி அமையலையே என பொறாமையுடன் ரசிக்கலாம். 16 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் படம் பார்க்க முடியும்.

பன் பட்டர் ஜாம் - பெயரை போலவே டேஸ்ட்டான படம், ருசித்து, ஸாரி ரசித்து பார்க்கலாம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !