உள்ளூர் செய்திகள்

ராபர்

தயாரிப்பு - இம்ப்ரஸ் பிலிம்ஸ் மற்றும் மெட்ரோ புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - எஸ்.எம்.பாண்டி
நடிகர்கள் - சத்யா, டேனி போப், ஜெயபிரகாஷ், தீபா சங்கர், சென்ராயன், ஸ்டில்ஸ் பாண்டியன்
இசை - ஜோகன் சிவனேஷ்
வெளியான தேதி - 14.03.2025
நேரம் - 1 மணி நேரம் 58 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

கதைகளம்
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தது. இதில் ஈடுபடுபவர்கள் மக்களோடு மக்களாக இருந்ததால் அவர்களை அடையாளம் காண போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். இதை அடிப்படையாக வைத்து 'ராபர்' படத்தை இயக்குனர் எஸ்.எம். பாண்டி இயக்கி உள்ளார்.

கிராமத்திலிருந்து படித்துவிட்டு சென்னைக்கு வரும் சத்யா, இங்குள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். மற்றவர்களைப் போல் பெண்களிடம் தாமும் ஜாலியாக சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக முகமூடி அணிந்து கொண்டு பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதே போல் ஐடியில் வேலை செய்து கொண்டு ராபரி தொழில் செய்து வரும் டேனி கூட்டாளியிடம், வழிப்பறி செய்த நகைகளை கைமாற்றி பணம் வாங்குகிறார். இதனால் சத்யாவுக்கு உதவ மற்றொருவரை அனுப்பி வைக்கிறார் டேனி. இவர்கள் இருவரும் சேர்ந்து பல இடங்களில் செயின் அறுக்கும் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு பெண்ணிடம் சங்கிலியை அறுத்துவிட்டு தப்பித்து செல்லும்போது, அந்தப் பெண் துரத்திக் கொண்டு வரும்போது சாலையில் விழுந்து இறந்து விடுகிறார். அந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் போலீஸ் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அதோடு அந்தப் பெண்ணின் தந்தையான ஜெயபிரகாஷ் தன் மகளின் சாவுக்கு காரணமானவனை கண்டுபிடித்து தன் கையால் கொலை செய்ய வேண்டுமென நினைக்கிறார். அவருக்கு போலீஸான ஸ்டில்ஸ் பாண்டியன் உதவுகிறார். இந்த நிலையில் இவர்களிடம் சத்யா சிக்குகிறார். அவரை இவர்கள் இருவரும் சேர்ந்து கடத்துகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது? சத்யா எப்படி இவர்களிடம் சிக்கினார்? சத்யாவுக்கும் டேனிக்கும் என்ன தொடர்பு? போலீசில் சத்யா சிக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படம் எப்படி?
சென்னை போன்ற பெரு நகரங்களில் இன்றளவும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் செயின் பறிப்பு சம்பவங்களை அப்படியே திரையில் காட்டியுள்ளார் இயக்குனர் எஸ்.எம்.பாண்டி. ராபரி சம்பவங்கள் எப்படி நடக்கிறது? அதை செய்பவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்ற புள்ளி விவரங்களுடன் கரெக்டாக இயக்குனர் சொல்லி இருப்பது பாராட்டிற்குரியது. 'மெட்ரோ' படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனின் கதை, திரைக்கதை, வசனம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

மெட்ரோ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ள சத்யா, இதில் ஹீரோவாக களமிறங்கி அசத்தியுள்ளார். ஒருபுறம் பிபிஓ வேலை, மறுபுறம் கொள்ளை என இரண்டு முகங்களோடு சிறப்பான நடிப்பை தந்துள்ளார். இவரா இந்த வேலையை செய்தார் என்று கேட்கும் அளவிற்கு அவருடைய அப்பாவித்தனமான முகம் அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது. அடுத்ததாக டேனி போப் தனது பங்கிற்கு சிறப்பான நடிப்பை தந்துள்ளார். வழக்கமாக காமெடியில் கலக்கும் அவர், இதில் வில்லத்தனம் கலந்து சூப்பராக நடித்துள்ளார். ஜெயிலில் கைதியாக இருக்கும் சென்ராயன், ஸ்கோர் செய்கிறார். இவர்களுடன் ஜெய்பிரகாஷ், தீபா சங்கர், பாண்டியன் ஆகியோரும் தங்கள் வேலைக்கு சிறப்பாக செய்துள்ளனர்.

என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவில் சென்னை மற்றும் புறநகர் பகுதி அழகாக தெரிகிறது. திரையில் காட்சிகளும் பளிச்சிடுகிறது. ஜோகன் சிவனேஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் மிரட்டி இருக்கிறார்.

பிளஸ் & மைனஸ்
சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் 2 மணி நேரம் படம் ரசிக்கும் படியாக இருந்தாலும், ஏற்கனவே இதே போன்று மெட்ரோ படம் இருப்பதால் பல காட்சிகள் அதை நினைவுபடுத்துகிறது. மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

ராபர்- ரியாலிட்டி



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !