உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / மிஸஸ் அண்ட் மிஸ்டர்

மிஸஸ் அண்ட் மிஸ்டர்

தயாரிப்பு : வனிதா பிலிம் புரடக் ஷன்ஸ்
இயக்கம் : வனிதா விஜயகுமார்
நடிப்பு : வனிதா, ராபர்ட், ஷகிலா, ஆர்த்தி, கணேஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீமன்
இசை : ஸ்ரீகாந்த்தேவா
வெளியான தேதி : ஜூலை 11, 2025
நேரம் : 2 மணிநேரம் 21 நிமிடம்
ரேட்டிங்: 2 / 5

40 வயதான வனிதாவும், 45 வயதான ராபர்ட்டும் பாங்காக்கில் சந்தோஷமாக வாழ்கிறார்கள். ''இப்ப, குழந்தை பெற்றுக் கொள்ளாவிட்டால் பின்னால ரொம்ப கஷ்டம், வயசாகிவிட்டதே''னு சிலர் வனிதாவை உசுப்பேற்ற, அவரும் உடனே அம்மாவாக நினைக்கிறார். ஆனால், குழந்தை வேணாம் என்கிறார் ராபர்ட். அம்மாவாகியே தீருவேன் என்று வனிதா பல ரொமான்ஸ் முயற்சிகள் செய்ய, அடுத்து என்ன நடக்கிறது என்பதை அடல்ட் கன்டன்ட்டில் சொல்லும் படம் மிஸஸ் அன்ட் மிஸ்டர். படத்தை இயக்கி இருப்பவரும் வனிதா தான். அவர் மகள் ஜோவிகா படத்தின் தயாரிப்பாளர்.

நாற்பது வயது பெண்ணின் குழந்தை கனவு, கரு உருவாக ஏற்படும் சிக்கல், அதனால் கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்னைகள், சுற்றி இருப்பவர்களின் அட்வைஸ், கடைசியில் குழந்தை பிறந்ததா என்பது நல்ல கரு. ஆனால், அதில் அடல்ட் கன்டன்டை கலந்து கொடுத்து இருப்பதால் கதை வேறு மாதிரி செல்கிறது. பாங்காக் சம்பந்தப்பட்ட காட்சிகள் கண்களுக்கு அழகாக இருப்பது படத்தின் பிளஸ்.

அம்மாவாகும் ஏக்கம், அதற்காக போடும் திட்டங்கள், கணவருடன் சண்டை, ரொமான்ஸ் காட்சிகளில் வனிதா நடிப்பும் ஓகே. என்ன, கதை நாயகியாக நடிப்பதால் வெயிட் குறைத்து, அதற்கேற்ப காஸ்ட்யூமுடன் நடித்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். பல சீன்களில் அவரின் கவர்ச்சி காஸ்ட்யூம் செட்டாகவில்லை. சில குளோசப் காட்சிகளில பயமுறுத்துகிறார்.

ராபர்ட் தன் கேரக்டர் அறிந்து ஓரளவு நன்றாகவே நடித்து இருக்கிறார். அவர் நண்பராக வரும் கணேஷ், வனிதாவுக்கு ஐடியா கொடுக்கும் ஆர்த்தியும் மனதில் நிற்கிறார்கள். தெலுங்கு கலந்து பேசி ஓவர் ஆக்டிங் செய்து இருக்கிறார் அம்மாவாக வரும் ஷகிலா. அவர் டீமில் இருக்கும் ஆன்ட்டிகளின் அட்டகாசம் இன்னும் ஓவர். ஆமாம், வனிதா, ஷகிலா, பாத்திமா பாபு, கும்தாஜ், சர்மிளா, வாசுகி என படத்துல பலர் நடித்துள்ளனர்.

பாங்காக், சித்துார் என 2 இடங்களில் கதை நடக்கிறது. பாங்காக் காட்சி ஆறுதல் என்றால், சித்துார் காட்சிகள் ரொம்பவே சுமார். ஸ்கிரிப்ட் இருக்கிறதா? டைரக்டர் ஆக் ஷன் கட் சொன்னாரா என்று கேட்கும் அளவுக்கு சித்துார் காட்சிகள் நீளம், குழப்பம். படத்தின் பெரிய மைனஸ் அதுதான். இதில் அவ்வப்போது ஆபாச, டபுள்மீனிங் விஷயங்கள் வேறு. படத்திற்கும், அதற்கும் சுத்தமாக செட்டாகவில்லை.

கணவரை தன் வழிக்கு கொண்டு வர வனிதா உருவாகும் திட்டங்கள் ஓகே என்றாலும், அதை அடல்ட் கன்டன்ட்டில் சொல்லி இருப்பது முகம் சுளிக்க வைக்கிறது. அதிலும் சில காட்சிகள் ஓவரோ ஓவர். சென்சார் புரிந்து விட்டார்களா, புரியாமல் விட்டார்களா என்று கேட்கும் அளவுக்கு ஒரு சில சீன்கள் உள்ளன. வனிதா, ராபர்ட்டிற்கு பதில் வேறு இளம் நடிகர்கள் நடித்து இருந்தால் வேறு மாதிரி இருந்து இருக்கலாம்.

இவர்களுக்கு இடையில் டாக்டர் சீனிவாசன் அவ்வப்போது வந்து இம்சை கொடுக்கிறார். அவரை நடிக்க வைத்தது ஏன் என்றே புரியவில்லை. இரண்டாம்பாதியில் ஒரு வீட்டில் அந்த குடும்பத்தினர் காமெடி என்ற பெயரில் அடிக்கும் லுாட்டிகளை செல்போன் பார்க்காமல், டென்ஷன் ஆகாமல் பட ஸ்கிரீனை மட்டும் பார்ப்பவர்களுக்கு பரிசே தரலாம். கிளைமாக்சில் உயிர் இல்லை. வனிதா உறவினராக வரும் ஸ்ரீமன் நடித்து தள்ளுகிறார். இதில் அந்த கால ஷகிலா சம்பந்தப்பட்ட காட்சிகள் வேறு. இயக்குனர் படக்குழுவை நடிக்க சொல்லிவிட்டு, வேறு வேலைக்கு போய்விட்டாரா?

கதை, திரைக்கதை விஷயத்தில் இயக்குனராக வனிதா ஓகே. ஆனால், நடிப்பு, நடிகர்கள், கதையை சொல்லும் விதத்தில் பெயிலாகிறார். படத்தில் எடிட்டர் ஒருவர் இருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு தேவையில்லாத சீன்கள் நிறைய. இந்த கதைக்கு அடல்ட் கன்டன்ட் திணிப்பு ஏன், அப்படியே யோசித்து இருந்தாலும் அதை வேறு மாதிரி கொடுத்து இருந்தால் ஓரளவு ரசித்து இருக்கலாம். ரொம்பவே ராவாக கொடுத்து பெண்களை திட்ட வைக்கிறார். ஆண்களை வெறுப்பேற்றுகிறார் வனிதா.

ஸ்ரீகாந்த்தேவா இசை ஓகே. படத்தில் சரியான இடத்தில் வரும் கிரணின் ராத்திரி சிவராத்திரி ரீமிக்ஸ் பாடல், அந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் ஓகே. என்ன கிரண் இப்படி ஆகிவிட்டாரே என்று பலருக்கும் ஏமாற்றம். வனிதாவிற்கு படம் தயாரிப்பு, இயக்கம், கதைநாயகியாக நடிப்பு இதெல்லாம் நல்ல கனவு, அதற்காக உழைக்க வேண்டாமா? எந்த தைரியத்தில் இந்த படத்தை மக்கள் ரசிப்பார்கள் என தெரியவில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

மிஸஸ் அண்ட் மிஸ்டர் - அடல்ட் கன்டன்ட் அட்டகாசங்கள்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !