சரண்டர்
தயாரிப்பு : அப்பிட்பிக்சர்ஸ்
இயக்கம் : கவுதம் கணபதி
நடிப்பு : தர்ஷன், லால், சுஜித்குமார், பாடினி குமார் மற்றும் பலர்
இசை : விகாஷ்
ஒளிப்பதிவு : மெய்யேந்திரன்
வெளியான தேதி : ஆகஸ்ட் 1, 2025
நேரம் : 2 மணிநேரம் 23 நிமிடம்
ரேட்டிங்: 3 / 5
மாநில தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, பயிற்சி எஸ்.ஐ ஆக ஹீரோ தர்ஷன் பணியாற்றும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ஒரு துப்பாக்கி காணாமல் போகிறது. அதேபோல், ஒரு தொகுதி பணப்பட்டுவாடாவுக்காக கொண்டு செல்லப்படும் 10 கோடி பணம் திருடுபோகிறது. துப்பாக்கியை தேடி ஏட்டு லால், தர்ஷன் டீம், பணத்தை தேடி தாதா சுஜித் சங்கர் டீம் அலைகிறது. இரண்டையும் திருடியது யார்? என்ன காரணம்? இந்த இரண்டு கதைகளுக்கு என்ன தொடர்பு என்பதை துப்பறியும் திரில்லர் பாணியில் ‛ஈரம்' அறிவழகன் உதவியாளரான கவுதம் கணபதி சொல்லும் படம் சரண்டர்.
இன்னும் சில மாதத்தில் ஓய்வு பெறப்போகும் நேர்மையான ஏட்டு லால், தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு சரண்டர் செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் துப்பாக்கியை ஸ்டேஷனிலேயே தொலைக்கிறார். ஸ்டேஷனில் உள்ளவர்கள், வெளியே இருந்து வந்தவர்கள் அதை திருடினார்களா என ஹீரோ தர்ஷன், லால் டீம் தேடுகிறது. தேர்தலுக்குள் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் என்குயரி என இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விடுக்கிறார். இதற்கிடையில், ஏட்டு லால், வில்லன் சுஜித் தம்பிக்கும் இடையே ஒரு பிரச்னை. அதனால், பல பிரச்னைகள். இன்னொரு , மாவட்ட செயலாளர் கொடுத்த 10 கோடி பணத்தை, ஒரு விபத்தை பயன்படுத்தி யார் திருடியது என்று தேடுகிறார் தாதாவான வில்லன் சுஜித். அப்போது பல சம்பவங்கள் நடக்கின்றன. பலர் மீது அவருக்கு சந்தேகம் வருகிறது. அவரையும் கொல்லவும் ஒரு டீம் துரத்துகிறது. இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அடுத்து என்ன என்பதை விறுவிறு திரைக்கதையில் செல்வது படத்தின் பலம்
வயதான ஏட்டுவாக நடித்திருக்கும் லால், பயற்சி சப் இன்ஸ்பெக்டர் தர்ஷன், வில்லன் சுஜித், போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.சங்கர் ஆகிய நால்வரை சுற்றியே கதை நடக்கிறது. அதிலும் கதையை தாங்கிப்பிடிப்பவர் லால்தான். வயது, பதவி காரணமாக அவர் அவமானப்படுகிற காட்சிகளில், துப்பாக்கி காணாமல் போகும்போது தவிக்கும் காட்சிகளில், வில்லன் தம்பியால் டார்ச்சர் அனுபவிக்கும்போது கலங்குகிற காட்சிகளில் நடிப்பில் கலக்கி இருக்கிறார். அந்த இயல்பான நடிப்பு, மெதுவாக பேசும் டயலாக் சூப்பர் சாரே. போலீசாக வரும் தர்ஷன், லாலுக்கு நீதி கிடைக்க பொங்குகிற காட்சியில், வில்லனுடன் மோதுகிற காட்சியில், போலீஸ் என்றால் யார் என வில்லன் டீமுக்கு காட்டுகிற காட்சியில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் மாஸ். என்ன, ஹீரோயினை சில நிமிடம் பார்த்துவிட்டு, ஓரிரு டயலாக் மட்டும் பேசி, ரொமான்ஸ் செய்யாமல் துப்பாக்கி தேட போகிறார். இந்த படத்துக்கு ஹீரோயினே தேவையில்லை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் டி.சங்கர் நடிப்பில் கம்பீரம், செம்மலர் அன்னம் சம்பந்தப்பட்ட சீனில், கிளைமாக்சில் அவரும் மிரட்டி இருக்கிறார். மலையாள நடிகரான, ரசவாதி போன்ற படங்களில் நடித்தவரான வில்லன் சுஜித், அதிகம் பேசாமல் கண்களால், உடல் மொழியால் தனித்து தெரிகிறார்.
பெரும்பாலான காட்சிகள் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கிறது. அந்த அட்மாஸ்பியர், அங்கே நடக்கும் சம்பவங்கள் பரபர. ஈகோ சப்இன்ஸ்பெக்டராக வரும் ரம்யா கொஞ்சம் வந்தாலும் மனதில் நிற்கிறார். செம்மலர் அன்னமும் அப்படியே. வில்லன் டீமில் இருக்கும் அவர் தம்பி, ஆலோசனை சொல்லும் ஒருவர், கருப்பு நம்பியார் ஆகியோர் நல்ல கேரக்டர்கள். சில சீன்களில் வந்தாலும் மன்சூர் அலிகானும் அலப்பறை செய்கிறார். மெய்யேந்திரன் கேமரா வொர்க்கை பாராட்டலாம். சண்டைகாட்சிகளும் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன.
ஒரு விறுவிறு திரைக்கதையில் காமெடி என்ற பெயரில் முனிஸ்காந்த் அன் கோ செய்யும் அலப்பறைகள், சீரியசான காட்சிகளில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் சலிப்பு ஏற்படுத்துகிறது. கொஞ்சமும் யோசிக்காமல் முனிஸ்காந்த் காட்சிகளை வெட்டி எறிந்தால் படம் இன்னும் வேகமாக நகரும். சில சமயம் ஹீரோ தர்ஷன் எங்கே என தேட வேண்டியது இருக்கிறது. கதைக்காக அவருக்கான சீன்களை குறைத்து இருக்கிறார்கள். கிளைமாக்சில் இவ்வளவு கொலை செய்யப்பட்டாலும் யாரும் கேட்க மாட்டார்களா? நிறைய லாஜிக் மீறில். கதையும் ஏகப்பட்ட இடங்களில் சுற்றி, நம்மையும் டயர்டு ஆக்குகிறது. அதேபோல் போலீஸ் டிபார்ட்மென்டை, அரசியல்வாதிகளுக்கு, தாதாக்களுக்கு பயப்படும் அடியாட்கள் போல காண்பித்து இருப்பதும், ஏட்டு லால் மீதான டார்ச்சர்களும் ரொம்பவே ஓவர். இப்படி சீன் வைத்தால் நிஜத்தில் போலீசை மற்றவர்கள் மதிப்பார்களா. போலீஸ் துறை மீது ஏனிந்த கோபம் இயக்குனரே?
துப்பாக்கி விஷயத்தை யாரும் எதிர்பாராத பாணியில் முடித்து இ ருப்பது இயக்குனரின் டச். லால், தர்ஷன் இடையேயான அந்த அன்பு, ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இவ்வளவு பாலிடிக்ஸ், இவ்வளவு விஷயங்கள் நடக்கும் என்று டீடெயிலாக சொன்னது பிளஸ். பல இடங்களில் அறிவழகன் சிஷ்யர் என்பதை நிரூபித்து இருக்கிறார் இயக்குனர். இன்னும் கொஞ்சம் எடிட் செய்து, இன்னும் கொஞ்ம் போகஸ் செய்திருந்தால் பெரிய ஹிட்டாகி இருக்கும்.
சரண்டர் - நல்ல துப்பாக்கி, தோட்டா ஸ்பீடு குறைவு