கிங்டம்
தயாரிப்பு : நாகவம்சி
இயக்கம் : கவுதம் தின்னனுாரி
நடிப்பு : விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ, வெங்கடேஷ், சத்யதேவ்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : ஜோமோன் டி ஜான், கிரிஷ் கங்காதரன்
வெளியான தேதி : ஜூலை, 31.2025
நேரம் : 2 மணிநேரம் 40 நிமிடம்
ரேட்டிங்: 2 / 5
இலங்கையில் உள்ள ஒரு தீவில் அடிமையாக இருக்கும் ஒரு கூட்டம், சூழ்நிலை காரணமாக அங்குள்ள பெரிய மனிதர்களின் கடத்தலுக்கு உதவுகிறது. ''நீ அங்கே சென்று உளவு பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு விஷயம் கப்பலில் அங்கே வருகிறது. அது குறித்து தகவல் அளிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து வெள்ளைக்காரன் காலத்தில் சென்ற அந்த கூட்டத்தின் இப்போதைய தலைவன் உன் அண்ணன். சின்ன வயதில் உன் அப்பாவை கொன்று விட்டு அங்கே ஓடிப்போனவன்' என்று போலீசான விஜய் தேவரகொண்டாவுக்கு அசைன்மென்ட் கொடுக்கிறார் உளவுத்துறை உயர் அதிகாரி. அண்ணன் மீதான பாசத்தால் இலங்கை சென்று அந்த கூட்டத்தில் சேருகிறார் விஜய் தேவரகொண்டா. அங்கே இருக்கும் கடத்தல் கும்பல் தலைவனோ அந்த மக்கள் கூட்டத்தை அழிக்க நினைக்கிறான். அண்ணனுடன் சேர்ந்து விஜய் தேவரகொண்டா என்ன செய்கிறார் என்பது கிங்டம் கதை. தெலுங்கில் ஹிட்டான ஜெர்சி படத்தை இயக்கிய கவுதம் தின்னனுாரி இயக்கி உள்ளார். தமிழில் டப்பாகி உள்ளது.
கிங்டம் கதை 1990களில், இலங்கையில் உள்நாட்டு போர் நடக்கும் கால கட்டத்தில் நடக்கிறது. ஆனாலும், அந்த போருக்கும் இந்த கதைக்கும் சம்பந்தமில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா கடற்கரை பகுதிகளில் இருந்து அடித்து துரத்தப்பட்ட ஒரு கூட்டம், இலங்கையில் தஞ்சமடைகிறது. சொந்த மண்ணில் மீண்டும் குடியேறுவோம். தங்களை மீட்க ஒரு அரசன் வருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறது. அப்போது வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் எப்படி தலைவன் ஆகிறார் என்ற ரீதியில் நகர்கிறது. இதற்கிடையே, அண்ணன் தம்பி பாசத்தை சேர்த்து இருக்கிறார்கள்.
விஜய் தேவரகொண்டா இருக்கிறார். அனிருத் இருக்கிறார். ஜெர்சி டைரக்டர் படமாச்சே என்று நம்பி சென்றால், படம் முழுக்க சண்டை, அடிதடி, சேசிங், வெட்டு, குத்து, ரத்தம். ஆம், இது பக்கா ஆக்ஷன் கதை. பாக்யஸ்ரீ என்ற அழகான ஹீரோயின் இருக்கிறார். அவர் டாக்டராக வந்து, சில வசனம் பேசுகிறார். அவருக்கு ஒரு பாடல் கூட இல்லை என்பது சோகமான விஷயம். லவ் என்ற பெயரில் 2 டயலாக் அவ்வளவுதான். அட, போங்கப்பா, ஒரு தெலுங்கு படத்தில் கலர்புல் பாடல், குத்துபாட்டு கூட இல்லையா?
படத்தை துாக்கி பிடிப்பது விஜய் தேவரகொண்டா தான். அறிமுக காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை அவ்வளவு எனர்ஜி. கோபப்படுகிறார், துரத்துகிறார், அடிக்கிறார். ஆக்ரோசமாகிறார். சிலசமயம் அதுவே ஓவர் டோஸ் ஆகி, மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு மாதிரி தெரிகிறது. தவிர, தமிழில் அவர் டயலாக் டெலிவரியில் நிறைய தெலுங்குவாடை. காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைலில் கூட தனி கவனம் செலுத்தவில்லை. ஹீரோயிச பில்டப் ஆக பல சீன்கள் இருக்கிறது. அது அவர் ரசிகர்களுக்கு பிடிக்கலாம். குறிப்பாக தங்கம் கடத்தும் ஒரு சீன், இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கிறது. ஒரு பெண்ணாக அவர் பரிந்து பேசுவது, சில தடைகளை நீக்குவது பீலிங். ஆனால், இடைவேளைக்குபின் அவர் கேரக்டரிலும் நிறைய மாற்றங்கள், வில்லனாக வரும் வெங்கடேசுக்கு அவ்வளவு பில்டப். அவரே அதிக காட்சிகளில் வருகிறார். விஜய் தேவர கொண்டா அண்ணனாக வரும் சத்யதேவ் நன்றாக நடித்து இருக்கிறார்.
மற்றபடி, ஏகப்பட்ட வில்லன்கள், அவர்கள் டீம், அவர்கள் மீட்டிங், சண்டை என படம் செல்கிறது. அந்த தீவில் வசிப்பவர்கள் ஏனோ ஆதிவாசிகள் மாதிரி இருக்கிறார்கள். அவர்கள் ஆபரணம், உடை, டாட்டூ அந்த காலம் மாதிரி இருக்கிறது. 1990களில் இப்படி யாராச்சு இருப்பாங்களா, இயக்குனரே. இடையிடையே ஒரு சாமியார் மாதிரியான குரு வந்து ஓவர் பில்டப் கொடுக்கிறாார். அதை விட கொடுமை, கடைசியில் விஜய் தேவரகொண்டா பில்டப் ஆக வைக்கப்பட்டுள்ள பல நிமிட சீன்கள், தனி ஆளாக ஒரு பெரிய படகை இழுக்கிறார். ராஜாவாக மாறி, ஏதேதோ செய்கிறார். ஒரு வித்தியாசமான கூட்டத்தில் அமர்ந்து போஸ் கொடுக்கிறார். யப்பா, முடியலை என்று பார்வையாளர்கள் பதறுகிறார்கள். இந்த காலத்தில் இப்படியொரு படமா. படத்தின் நீளமும் அதிகம், பிற்பாதி ரொம்பவே போர்
அண்ணன், தம்பி பாசம் பரவாயில்லை ரகம். உளவுத்துறை அதிகாரி, கோட் வேர்டு, கடத்தல் கும்பல் கூட்டம் இதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை. கிளைமாக்ஸ் முந்தைய சண்டையில் ரத்தம் ஓடுகிறது. ஹீரோ எங்கேயோ படுத்து துாங்கிட்டு இருக்கிறார். மக்களை, அண்ணனை காப்பாற்றாத ஹீரோ மீது நமக்கே கோபம் வருகிறது. வில்லன் சம்பந்தப்பட்ட சீன்கள் ஓரளவு ஆறுதல். வில்லன் வெங்கடேஷ் தனித்துவமான நடிப்பில் ஜொலிக்கிறார்.
இலங்கையை, அதன் கடற்பகுதியை, நிலபரப்பை அவ்வளவு அழகாக காண்பிக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள். அனிருத் பின்னணி இசை ஓகே, பாடல்கள் சுமார். மற்றபடி கதையும் புரியலை, திரைக்கதையும் சரியில்லை. கிளைமாக்ஸ் பிடிபடலை. மொத்தத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு நேரம் சரில்லை என்று சொல்லிவிட்டு கிளம்ப வேண்டியதாக இருக்கிறது. இதில் அடுத்த பாகமும் உண்டு. அந்த மக்கள் கூட்ட ராஜாவாக மாறிவிட்டார் விஜய் தேவரகொண்டா என முடிக்கிறார்கள். தேவுடா! அடுத்த பாகத்திலாவது எல்லாரையும் காப்பாற்று!
கிங்டம் - சாம்ராஜ்யம் சரிய, கிங் தத்தளிக்கிறார்