உசுரே
தயாரிப்பு : ஸ்ரீகிருஷ்ணா புரடக்சன்ஸ்
இயக்கம் : நவீன் டி கோபால்
நடிப்பு : டீஜே அருணாசலம், ஜனனி, மந்த்ரா, கிரேன்மனோகர், செந்தி
இசை : கிரண்ஜோஷ்
ஒளிப்பதிவு : மார்க்கிசாய்
வெளியான தேதி : ஆகஸ்ட் 1, 25
நேரம் : 2 மணிநேரம் 20 நிமிடம்
ரேட்டிங்: 2.5 /5
தமிழக, ஆந்திர எல்லையான சித்துார் பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அடிப்படையில், ஒரு காதல் கதையை உசுரே படத்தின் மூலம் சொல்கிறார் இயக்குனர் நவீன்.டி.கோபால். கிரேன் மனோகர், செந்தி மகன் ஹீரோ டீஜே அருணாசலம். குவாரியில் வேலை, நண்பர்களுடன் ஜாலி , ஊர் திருவிழா என வாழ்க்கையை அனுபவிக்கிறார். அவர் எதிர் வீட்டுக்கு குடியேறுகிறார் கல்லுாரி மாணவியான பிக்பாஸ் ஜனனி. சின்ன வயதிலேயே கணவரை பிரிந்ததால் மகளை ரொம்பவே கண்டிப்புடன் வளர்கிறார் மந்த்ரா. மகளை சுற்றி வரும் இளைஞர்களை திட்டி, துரத்துகிறார். ஹீரோவுக்கு ஜனனி மீது காதல் வர, அதை மந்த்ரா எதிர்க்க, என்ன நடந்தது என்பதை சித்துார் பேக்கிரவுண்டில் விவரிக்கிறார் இயக்குனர்.
இது தமிழ் படமா? தெலுங்கு படமா என்ற சந்தேகம் முதலில் வருகிறது. காரணம், பல கேரக்டர்கள் தமிழும், தெலுங்கு கலந்து பேசுகிறார்கள். அது சித்துார் மக்களின் வாழ்வியல் என்பதால் அப்படியே வைத்து இருக்கிறார் இயக்குனர். அப்புறம் முழு தமிழுக்கு மாறி விடுகிறார்கள். சித்துார் சுற்றுவட்டாரம், கிராமத்து திருவிழா, பால் வியாபாரம், நண்பர்கள் அரட்டை என அந்த மக்களின் வாழ்க்கையை லைவ் காண்பித்து இருப்பது படத்தின் சிறப்பு. இப்படி எந்த படத்திலும் சித்துாரை காண்பித்தது இல்லை.
அந்த ஊர் இளைஞனாக வெகு இயல்பான நடித்திருக்கிறார் டீஜே அருணாசலம். பாடல்களில் அவர் டான்சும் அசத்தல். தடைகளை மீறி ஜனனியை காதலிப்பது, மந்த்ராவுடன் மோதுகிற சீன்கள் ஓகே. பார்க்க அழகாக இருக்கும் பிக்பாஸ் ஜனனி, ரொம்பவே அமைதியாக வந்துபோகிறார். சில காட்சிகளில் மட்டுமே சிரிக்கிறார். இவ்வளவு சோகம் ஏன், கேரக்டருடன் ஒன்றிவிட்டாரோ?
ஹீரோவின் நண்பர்கள் குறிப்பாக தங்கதுரை, ஆதித்யா கதிர் அடிக்கும் ஒன்லைன் ஜோக் சில சமயம் சிரிக்க வைக்கிறது. ஹீரோ அப்பாவாக வரும் கிரேன் மனோகர், அம்மா செந்தி வழக்கமான பாசக்கார பெற்றோர்களாக நடித்து கொட்டியிருக்கிறார்கள். படத்தில் நடித்த பல கேரக்டர்கள் நாம் இயல்பில் பார்க்கும் மனிதர்கள் மாதிரி சினிமாத்தனம் இல்லாமல் இருப்பது சிறப்பு.
அந்த காலத்தில் பார்த்து, ரசித்த மந்த்ராவா இது என சந்தேகப்படும் அளவுக்கு ஆளே மாறியிருக்கிறார் ஹீரோயின் அம்மாவாக வரும் மந்த்ரா. காலம் மாறிவிட்டது அல்லவா? இந்த கேரக்டருக்கு இவர் எதுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லையே என்று யோசித்துக் கொண்டே இருந்தால் கடைசியில் ஸ்கோர் செய்கிறார். மந்த்ரா வேறுமாதிரி மாறும் அந்த சீன்தான் படத்துக்கே பிளஸ். இப்படியெல்லாம் உண்மை சம்பவம் நடந்ததா என்று சற்றே பயம் வருகிறது. அதேபோல் அம்மாவுக்காக மகள் மாறும் அந்த காட்சியும் அதிரடி. காதல் கதையில் வில்லன்கள் சண்டை, கோபம் இதெல்லாம் ஒட்டவே இல்லை. கதையும் ஒரு கட்டத்திற்குமேல் மெதுவாக நகர்கிறது.
தனது நண்பனின் காதல் கதையை, தனது மனைவிக்கு சொல்வதாக படம் தொடங்குகிறது. அந்த காதலர்களுக்கு என்ன ஆனது என்று படம் முடிகிறது. இந்த யுக்தி ஓரளவு ரசிக்க வைக்கிறது. சித்துார் பேக்கிரவுண்ட், காதல் காட்சிகள், நண்பர்கள் கும்மாளம் ஓகே. கடைசி அரைமணி நேர அந்த டுவிஸ்ட்தான் படத்தை துாக்கி நிறுத்துகிறது. அதற்காக முழு படத்தை பொறுமையுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டும்.
உசுரே - படத்தின் கிளைமாக்சில் மட்டுமே உயிர் இருக்கிறது