உள்ளூர் செய்திகள்

வானரன்

தயாரிப்பு : ஆரஞ்சு பிக்சர்ஸ்
இயக்கம் : ஸ்ரீராம் பத்மநாபன்
நடிப்பு : பிஜேஷ், சிறுமி வர்ஷா, அக் ஷயா, நாமக்கல் விஜயகாந்த், தீபா மற்றும் பலர்
ஒளிப்பதிவு : நிரன் சந்தர்
இசை : ஷாஜகான்
வெளியான தேதி : ஆகஸ்ட் 8, 2025
நேரம் : 1 மணிநேரம் 32 நிமிடம்
ரேட்டிங் : 3/5

ஆஞ்சநேயர் வேஷமிட்டு வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று பிழைப்பு நடத்துகிறார் பிஜேஷ்(நடிகர் நாகேஷ் பேரன்) அவர் வாழ்வில் ஒரு அழகான காதல் கதை. மகளை பெற்று கொடுத்துவிட்டு மனைவி இறந்து விடுகிறார். வறுமையிலும் மகளை பாசமாக வளர்கிறார், ஆனாலும் அவரை சோதனை துரத்துகிறது. மகளுக்கு மூளை கட்டி ஏற்பட அதை ஆபரேசன் செய்து உடனடியாக அகற்ற வேண்டிய நிலை. 4 லட்சம் பணமில்லாமல் தவிக்கும்போது, நல்ல மனிதரான ஜீவா பணம் கொடுத்து உதவுகிறார்.. ஆனால் அந்த பணமோ திருடு போகிறது. பிஜேஷ் மகளுக்கு ஆபரேசன் நடந்ததா? பணத்தை மீட்டாரா? அதை எடுத்தது யார்? ஏன் என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது வானரன் படம், ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கி உள்ளார்.

அப்பா, மகள் பாசமே படத்தின் உயிர் நாடி. அதை கடவுள் நம்பிக்கை, தர்மம், சோதனைகள் , தவிப்பு, விட்டுக்கொடுத்தல், மனிதநேயம் என பல விஷயங்களை கலந்து ஒரு உணர்பூர்வமான படமாக கொடுத்து இருக்கிறார் ஸ்ரீராம் பத்மநாபன்.

ஆஞ்சநேயர் வேஷமிட்டு ராமஜெயம் சொல்லி கடைகடையாக வீடுவீடாக சென்று காணிக்கை பெற்றும் வாழ்க்கை நடத்தும் அனுமந்தராவ் கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார் நாகேஷ் பேரன் பிஜேஷ். அவர் உடல்மொழி, டயலாக் டெலிவரி, அந்த குரல், நடிப்பு அனைத்தும் படத்தை ஒரு படி உயர்த்தி பிடிக்கிறது. தான் ஏன் இந்த தொழிலுக்கு வந்தேன் என அவர் சொல்லும் விதம், அவரின் காதல் கதை, மகள் பாசம், குறிப்பாக மகள் ஆசையாக கேட்ட செருப்பை வாங்கிக் கொடுக்க முடியாத தவிப்பு, உடல் நலம் இல்லாமல் அவதிப்படும் மகளை பார்த்து கலங்கும் இடங்கள், கடைசியில் திருடனை பார்த்து பேசும் வசனங்கள் சிறப்பு. இவர் நாகேஷ் பெயரை காப்பாற்றி விட்டார் என சொல்ல தோன்றுகிறது. சபாஷ் பிஜேஷ்.

அவர் மகளாக நடித்த குட்டி பெண் விஜய் டிவி புகழ் வர்ஷாவின் சுட்டித்தனங்கள் ரசிக்க வைக்கிறது. அப்பாவை மிரட்டுவது, அடம் பிடிப்பது உட்பட பல சீன்களில் அந்த சிறுமி மனதை கவர்கிறாள். இவர்களை தவிர விஜயகாந்த் வேடமிடும் ஷோ பண்ணும் நாமக்கல் விஜய்காந்தும் கிட்டத்தட்ட விஜயகாந்த் ஆகவே மாறி இருக்கிறார். அவர் பேச்சு மட்டுமல்ல, கதைப்படி அவரின் செயல்பாடுகளும் விஜயகாந்த் மாதிரியே. பசியால் திருடும் பையனுக்கு உதவுவது, குழந்தை ஆபரேசனுக்காக தனது திருமணத்தை தள்ளி வைப்பது போன்ற சீன்களில் மனிதர் அசத்தி இருக்கிறார். நல்ல தேர்வு.

ஒரே ஒரு சீனில் நல்லவராக, ரஜினி ஸ்டைலில் நடித்து கலக்கியிருக்கிறார் ஜீவா. நண்பனுக்காக ஓடி வரும் டி.ராஜேந்தர் வேடமிடுபவர், திருடனாக வரும் ஆதேஷ் பாலா, பிஜேஷ் காதலியாக வரும் அக்ஷ்யா, அந்த டாக்டர், போலீஸ்காரர்கள் ஆகியோரும் தங்கள் கேரக்டரை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். ஒரு காட்சியில் வந்தாலும் தீபா சங்கரும், நாஞ்சில் விஜயனும் கலகலப்பூட்டுகிறார்கள். ஆர்ப்பாட்டமில்லாத, இயல்பான காட்சிகளை ஒளிப்பதிவாளர் நிரன்சந்தனும், சரியான இசையை ஷாஜகானும் தந்து இருக்கிறார்கள்.

சில காட்சிகள், வசனங்கள் நாடகத்தன்மையுடன் நகர்வதாலும், ஆபரேசன் சம்பந்தப்பட்ட சீன்கள் பல படங்களில் பார்த்து இருப்பதாலும் போரடிக்க வைக்கிறது. கிளைமாக்ஸை, ஆஞ்சநேயர் வேடமிடுபவருக்கு அருள் கிடைப்பதாக முடித்து இருக்கலாம், இன்னும் பாசிட்டிவ் ஆக வைத்து கடவுள் நம்பிக்கையை அழுத்தமாக சொல்லி இருக்கலாம். கிளைமாக்ஸ் கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனாலும் ஆந்திராவில் நடக்கும் பகல்வேஷம் என்ற கலையின் பின்னணி, ஆஞ்சநேயர் வேஷம் கட்டுபவர்களின் வாழ்க்கை, கடவுள் பக்தனுக்கு வரும் சோதனைகள், மனித நேயத்துடன் உதவி செய்பவர்கள், அப்பா பாசம் என்பது கடவுள் பக்தன், திருடன் என அனைவருக்கும் ஒன்றுதான் என சொல்லும் சீன்கள் டச்சிங். ஒரு பழைய உதவி இயக்குனர் சீன்கள், அவர் பேசும் அந்தகால டயலாக் இயக்குனரின் காமெடி சென்ஸை காண்பிக்கிறது. அடுத்து வரும் சீன்கள் எமோஷனலானவை. பணம் வாங்காமல் கஷ்டகாலத்தில் மருந்து கொடுத்துவிட்டு எங்க வீட்டிலும் குழந்தை இருக்காங்க என்று பேசும் மெடிக்கல்ஷாப் ஓனர் பேசும் டயலாக் மனதை விட்டு அவ்வளவு எளிதில் அகலாது.

இந்த படம் பார்ப்பவர்கள், இனி ஆஞ்சநேயர் வேடமிட்டு வீதிகளில் வருகிறவர்களை பாசத்துடன், பக்தியுடன் பார்ப்பார்கள். அவர்களுக்குள் ஒரு வாழ்க்கை, போராட்டம், குடும்பம் இருக்கிறது என்பதை உணர்வார்கள். ஆஞ்சநேய பக்தனின் கதையை இயக்குனர் ஸ்ரீராம் சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பு. சில குறைகள் இருந்தாலும் நல்ல கதை, நல்ல நடிப்பு, நல்ல படம் என்ற லிஸ்டில் சேருகிறது வானரன்.

வானரன் - ஒரு ஆஞ்சநேய பக்தனின் பாசப்போராட்டம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !