உள்ளூர் செய்திகள்

ராகு கேது

தயாரிப்பு : தமிழரசன் தியேட்டர்
இயக்கம் : துரை.பாலசுந்தரம்
நடிப்பு : சமுத்திரக்கனி, கஸ்துாரி, பாலசுந்தரம், கே.பி.அறிவானந்தம்
ஒளிப்பதிவு : மோகன்
இசை : பரணிதரன், சதாசுதர்சனம்
வெளியான தேதி : ஆகஸ்ட் 8, 2025
நேரம் : 2 மணிநேரம் 10 நிமிடம்
ரேட்டிங் 2.5 / 5

நவக்கிரகங்களில் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது யார்? சுவர்பானு என்ற அசுரன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், அவன் அமிர்தத்தை உண்டு, திருமாலின் மோகிணி அவதாரத்தால் தண்டிக்கப்பட்டு, துர்க்கை அருளால் ராகு கேதுவாக உருவான விதம், இந்த கிரகங்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கங்கள், தோஷம் நீங்க நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றை பக்தி மணத்துடன் சொல்லும் படம் ராகு கேது.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பின் முழு நீள புராண, பக்தி படமாக வந்திருக்கிறது ராகு கேது. பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் நாடகக்குழுவில் பல ஆண்டுகள் பயிற்சி பெற்று, நடித்த பாலசுந்தரம் இந்த படத்தை இயக்கி, அவரே சுவர்பானு என்ற அரக்கனாக நடித்து இருக்கிறார். ஏகப்பட்ட புராண நாடகங்களுக்கு, படங்களுக்கு கதை, வசனம் எழுதிய கே.பி.அறிவானந்தும் இந்த படத்திற்கும் அதை செய்து, ஜோசியராகவும் நடித்து இருக்கிறார். ஒரு ராஜா சம்பந்தப்பட்ட கிளைக்கதையுடன் படம் ஆரம்பித்து, ராகு கேது உருவான விதத்தை சொல்கிறது. அதில் சுவர்பானு குணங்கள், அவன் காதலி, குடும்பம், தேவர்கள், அசுரர்கள் பாற்கடலை கடைந்து அமிர்தம் பெறுவது. அதில் நடக்கும் சூழ்ச்சிகள், கடைசியில் திருட்டுதனமாக சுவர்பானு அமிர்தம் குடித்து சாகாவரம் பெறுவது, தலை வேறு, உடல் வேறு என திருமாலின் மோகிணி அவதாரம் அவனை பிரிப்பது, துர்க்கை அருளால் ராகு கேதுவாக சுவர்பானு மாறுவது, ராகு, கேதுவின் ஆதிக்கத்தால் அந்த மன்னரின் குழந்தைக்கு ஏற்படும் பிரச்னைகள், பரிகாரங்கள் ஆகியவற்றை ஒரு நாடக பாணியில் சொல்கிறது ராகு கேது கதை.

சுவர்பானு என்ற அரக்கனாக, தெளிவான, நிதானமான டயலாக் பேசி, பக்காவாக நடித்து இருக்கிறார் இயக்குனர் பாலசுந்தரம். குறிப்பாக, அவர் ராகு கேதுவாக வரும் சீன்கள் வியப்பு. காதல் காட்சிகளை குறைத்து இருக்கலாம், அது ஒட்டவில்லை. ஜோசியராக வரும் கே.பி.அறிவானந்தம் நடிப்பு, வசனங்கள் நச். நாரதராக வரும் ரவிகுமார் மனதில் நிற்கிறார். ஆனால், மற்றவர்கள் நடிப்பில் கொஞ்சம் செயற்கைதனம். சிலர் அந்த கேரக்டருக்கு செட்டாகவில்லை. ஒளிப்பதிவாளர் மோகன் முடிந்தவரை காட்சிகளை கலர்புல்லாக காண்பித்துள்ளார். ராகு, கேதுவை தனித்தனியாக காண்பிக்கும் உத்தி அருமை.

ராகு, கேது கிரகங்கள், அவற்றின் குணங்கள், பாதிப்பு பற்றி அறிந்த பலருக்கு, சுவர்பானு என்ற அரக்கன் எப்படி ராகு, கேதுவாக மாறினான் என்பதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக, இளைஞர்கள், குழந்தைகளுக்கு இந்த விஷயங்கள் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை எளிமையான படமாக்கி, நவக்கிரகங்களின் வலிமை, அவற்றை வழிபடும் முறைகள், ஸ்லோகங்கள், ராகு கேது ஆதிக்கத்தால் வரும் பிரச்னைகள், தீர்வு, பரிகாரங்கள் ஆகியவற்றை அருமையாக சொல்லி, ஒரு அருமையான ஆன்மிக படம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பாலசுந்தரம். காளகஸ்தி ஸ்தலத்தின் பெருமைகள், அங்கே செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றை சொன்ன விதம் ரசிக்க வைக்கிறது.

அந்த மன்னர் சம்பந்தப்பட்ட கிளைக்கதைகளை குறைத்து, இன்னும் ஆன்மிக விஷயங்கள் சம்பந்தப்பட்ட சீன்களை அதிகரித்து இருக்கலாம். உடைகள், ஆபரணங்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால், நடிகர்கள், பேக்கிரவுண்ட், கிராபிக்ஸ் ஆகியவை பட்ஜெட் காரணமாக சுமாராக இருக்கிறது. குறிப்பாக தேவர்கள் பாத்திர தேர்வு ரொம்பவே சுமார். அதிலும் சில குளோசப் காட்சிகள் பயமுறுத்துகின்றன. இந்த குறைகள் புராணப்படங்களுக்கு உரிய அந்த ஈர்ப்பை குறைக்கிறது. பாடல்கள் ஓகே ரகம். நாடகத்தில் இருந்து வந்தவர்கள் எடுத்த சினிமா என்பதால் வசனங்கள், வசன உச்சரிப்பில் அந்த பாணி அதிகம் வருகிறது. கதையை வேகப்படுத்தி இன்னும் கொஞ்சம் சினிமா பாணிக்கு மாறி இருக்கலாம். சில சீன்களில் வந்தாலும் துர்க்கையாக நடிப்பில் கலக்கியிருக்கிறார் கஸ்துாரி, அவரின் காட்சிகளும், சிவனாக வரும் சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் படத்துக்கு பெரிய பிளஸ். மோகிணியாக வருபவர் நடனம் ஓகே.

ஆனாலும், நவக்கிரகங்கள் குறித்த நல்ல புரிதல் சினிமாவாக, ராகு கேது குறித்த பல விஷயங்களை உணர்த்தும் படமாக ராகு கேது வந்திருக்கிறது. ஆன்மிக படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு, ஜோசியம், கிரகங்கள் நிலை, கால நேரம் பார்ப்பவர்களுக்கு ராகுகேது பிடிக்கும். இன்றைய தலைமுறையினருக்கு தெரியாத பல விஷயங்கள் இதில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ராகு கேது - நாடகத்தனத்துடன் எடுக்கப்பட்ட பக்தி படம்!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !