உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / காத்துவாக்குல ஒரு காதல்

காத்துவாக்குல ஒரு காதல்

தயாரிப்பு : சாய் புரொடக்சன்
இயக்கம் : மாஸ் ரவி
நடிப்பு : மாஸ்ரவி, சூப்பர் சுப்பராயன், சாய்தீனா, லட்சுமி பிரியா, பல்லவி
ஒளிப்பதிவு : ராஜதுரை & சுபாஷ் மணியன்
இசை : ஜிகேவி & மிக்கின் அருள்தேவ்
வெளியான தேதி : ஆகஸ்ட் 8, 2025
நேரம் : 2 மணிநேரம் 05 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

சென்னையில் ஜிம் வைத்து நடத்தும் ஹீரோ மாஸ் ரவியை காதலிக்கிறார் ஹீரோயின் பல்லவி. எனக்கு காதல் பிடிக்காது, அடிதடிதான் பிடிக்கும் என்று வில்லன் சாய் தீனாவுடன் அடிக்கடி சண்டை போடுகிறார் ஹீரோ. அதேசமயம், இன்னொரு ஹீரோயினான லட்சுமி பிரியா, தனது காதலன் மாதிரியே மாஸ் ரவி இருப்பதை அறிந்து அதிர்கிறார். அதெப்படி இருக்க முடியும். மாஸ் ரவிக்கு இரட்டை வேடமா? அவர் 2 ஹீரோயின்களிடம் சிக்கி தவிக்கிறாரா? கடைசியில் யார் காதல் ஜெயித்தது என்பதை சொல்லும் படம் காத்து வாக்குல ஒரு காதல். இயக்குனரே, ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

ஏரியா தாதாவான சூப்பர் சுப்புராயன் பவர், அவரை அழித்துவிட்டு தாதாவாக சாய் தீனா முன்னேறுவது, அவரின் அட்டகாசம், பணத்துக்காக செய்யும் அக்கிரமங்கள், மறுபக்கம் அப்பாவியான ஹீரோவின் காதல் என முதற்பாதி நகர்கிறது. அடுத்த பாதியில் அப்பாவி ஹீரோ மாஸ் ரவுடியாக மாறி, சாய்தீனாவுடன் மோதுவது, அவரை காதலிக்கும் ஏரியா பெண் என கதை மாறுகிறது. கடைசியில் மாஸ் ரவி யார்? அவர் எப்படி இரண்டு பெண்களை காதலிக்க முடியும்? என்ற கேள்விக்கு சற்றே திருப்பங்களுடனான மாறுபட்ட பதிலை தருகிறார் இயக்குனர்.

காதல் காட்சிகளில் ஹீரோவின் நடிப்பு ரொம்பவே சுமார். அவரே இயக்குனர் என்பதால் அதிகம் கேள்வி கேட்க முடியாது. அவர் தாதா ஆகி, சண்டைபோடுகிற காட்சிகளில், சாய் தீனா டீமை எதிர்க்கிற காட்சிகளில் கொஞ்சம் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். கிளைமாக்ஸ் திருப்பத்தில் அவர் கெட் அப், நடிப்பு ஓகே.

ஹீரோயின்களில் லட்சுமி பிரியா தான் டாப். அவரின் இயல்பான நடிப்பு, காதலுக்காக உருகுவது, கடைசியில் தனது காதலன் இருக்கிறாரான இல்லையா என தவிப்பு போன்ற சீன்களில் பாஸ் மார்க் வாங்குகிறார். இன்னொரு ஹீரோயின் பல்லவி பல படங்களில் நாம் பார்த்து சலித்த கேரக்டர். ஹீரோவை துரத்தி, துரத்தி காதலிக்கிற வேடம். மற்ற படங்களை விட அதிக சீன்களில், நன்றாக நடித்து இருக்கிறார் சாய்தீனா. அவரின் அந்த அமாவாசை நடிப்பு சூப்பர். வில்லனாக வரும் சூப்பர் சுப்பராயன் சில சீன்களில் வந்தாலும் மிரட்டிவிட்டு போகிறார். மற்றபடி, படம் முழுக்க அடித்துக் கொண்டே, சண்டையிட்டுக் கொண்டே இருப்பது போராடிக்கிறது. அதிலும் ஒருவரே 'இருவரா' என்று ஹீரோ கேரக்டருக்கான பதில் கிளைமாக்சில்தான் கிடைக்கிறது. அதுவரை நமக்கு தலைசுற்றுகிறது. அந்த விஷயத்தை இன்னும் எளிதாக்கி இருக்கலாம்.


பாடல்கள் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை. வில்லன் டீம் காதலை பிரிப்பது, கொலை செய்வதெல்லாம் செயற்கை தனம். இன்னும் எத்தனை காலம்தான் வட சென்னையை இப்படி தமிழ் சினிமா மோசமாக, ரவுடிகளின் கூடாரமாக காண்பிக்குமோ? ஒன்றிரண்டு ஆக்ஷன் காட்சிகள், ஹீரோயின் காதலனை இன்னொரு பார்வையில் பார்த்து தவிக்கும் சீன்கள் ஓகே. மற்றபடி சுமாரான திரைக்கதையால் படம் தடுமாறுகிறது. ஆக் ஷன், காதல் காட்சியில் தன்னை நிலைத்த ஆசைப்பட்ட ஹீரோ, கதை சொல்லும் விஷயத்தில் காட்சியமைப்பில் தத்தளித்து இருக்கிறார். கடைசி சில நிமிட அந்த டுவிஸ்ட், அதை தொடர்ந்து வரும் காட்சிகள் மட்டுமே படத்தின் ஆறுதலான விஷயம். என்ன, அதுவரை படம் பார்ப்பவர்கள் மிகவும் பொறுமைசாலிகள்

காத்துவாக்குல ஒரு காதல் - கதையில் காத்தும் இல்லை, காதலும் இல்லை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !