உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / நாளை நமதே (2025)

நாளை நமதே (2025)

தயாரிப்பு : துர்கா கிரியேசன்
இயக்கம் : வெண்பா கதிரேசன்
நடிப்பு : மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில், முருகேசன் மற்றும் பலர்
ஒளிப்பதிவு : பிரவீன்
இசை : ஹரிகிருஷ்ணன்
வெளியான தேதி : ஆகஸ்ட் 8, 2025
நேரம் : 2 மணிநேரம் 15 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

சிவகங்கை மாவட்டம் சிவதானுபுரம் பஞ்சாயத்து போர்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தலைவர் ஆக நினைக்கிறார் ஒருவர். இல்லை, எனக்குதான் தலைவர் பதவி என்கிறார் இன்னொருவர். ஆனால், திடீரென அரசோ அதை தனித்தொகுதியாக அறிவிக்கிறது. வேறுவழியின்றி அந்த தொகுதியை 7 லட்சம் ஏலம் எடுத்த எதிர்பார்ட்டி, தனது பண்ணையில் வேலை செய்யும் பெருமாளை தலைவர் பதவிக்கு போட்டியிட வைக்கிறார். அவரை கைப்பாவை ஆக்கி, அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கிறார். அவருக்கு மருமகளாகப்போகும் ஹீரோயினோ இதை தட்டிக்கேட்கிறார். தான் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வெற்றியை தடுக்க ஒரு தரப்பினர் சதி திட்டங்கள் தீட்ட, ஊரில் உள்ளவர்கள் அவருக்கு ஆதரவாக திரள, கடைசியில் ஜெயித்தது யார் என்பது நாளை நமதே கதை. வெண்பா கதிரேசன் இயக்க, பெரும்பாலும் புதியவர்கள் நடித்து இ ருக்கிறார்கள். நாளை நமதே என்ற பெயரில் தமிழில் வந்திருக்கும் 3வது படம் இது.

தனித்தொகுதியாக அரசால் அறிவிக்கப்படும் பல ஊர்களில் எப்படி தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் பின்புலத்தில் இருக்கும் ஜாதி ஆதிக்கம், ஜாதி பாகுபாடுகள், பணத்துக்காக ஜனநாயகம் எப்படி விலை போகிறது. கிராமப்புறங்களில் இன்னும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை நாளை நமதே படத்தில் அழுத்தமாக, இயல்பாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். ஹீரோயின் மதுமிதாவின் கேரக்டரும், அவர் நடிப்பும்தான் படத்தின் உயிர்நாடி. ஊரில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளை தட்டிக்கேட்பது, புரட்சிகர வசனம் பேசுவது, பலரின் எதிர்ப்பை மீறி தேர்தலில் நிற்பது, அவமானப்படுவது, கடைசியில் தடைகளை தாண்டி தேர்தலை சந்திப்பது என ஏகப்பட்ட சீன்களில் கலக்கியிருக்கிறார். அவரின் குரலும், இயல்பான நடிப்பும் படத்தை தாங்கிப்பிடிக்கிறது. என்ன, அவரை கடவுள் மறுப்பாளாக காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன?

மதுமிதாவை எதிர்த்து அரசியல் செய்யும் வில்லனாக வருகிறார் ராஜலிங்கம், அவர் சூழ்ச்சியும், கோபமும் ஓகே. இயக்குனர் வேல்முருகன் காமெடி கேரக்டரில் வருகிறார். ஆனாலும், அவர் செய்கிற சில விஷயங்கள் ஓவர். ஊர் தலைவராக வருபவர், மதுமிதா உறவினர்கள், பெண் போலீஸ், மதுமிதா திருமணம் செய்ய இருப்பவர் நடிப்பும் ஓகே ரகம்தான். கலெக்டராக ஒருவரை டம்மியாக காண்பித்து இருக்கிறார்கள். அதெல்லாம் சுத்த சினிமாதனம். இந்த சீரியஸ் கதையில் அப்படிப்பட்ட சில படுக்கை அறை சீன்கள் ஏனோ? காமெடி என்ற பெயரில் வரும் காட்சிகளும் வேஸ்ட்.

மதுமிதா தவிர, நடிப்பால் மிரட்டுபவர், அவர் மாமனராக, டம்மி வேட்பாளராக அறிவிக்கப்படும் முருகேசன்தான். பரோட்டா சூரி காமெடியில் பரோட்டோ போடுபவராக நடித்தவர், இதில் குணசித்திர நடிப்பில் முத்திரை பதித்து இருக்கிறார். அதிகார வர்க்கத்துக்கு பயந்து அவர் நடுங்குவது, அவர்கள் சொல்படி வேட்பாளராக நிற்பது, அவமானப்படுவது, குடித்துவிட்டு மருமகளுக்காக பேசுவது என பல இடங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார். சில வசனங்கள் மனதில் நிற்கின்றன. தேர்தல் பிரச்சாரங்கள், அந்த தேர்தல் மேடை, பாட்டு ஆகியவை சுவாரஸ்யங்கள். அதேசமயம் ஒரு ஊரில் ஒரு தரப்பு மக்களுக்கு எதிராக, மற்ற அனைவரும் ஒன்று பட்டு நிற்கிறார்கள் என்ற கண்ணோட்டமும் மாறுபட்ட கருத்துகளை உருவாக்குகிறது.

சிலரை இவ்வளவு ஜாதி வெறியர்களை காண்பிப்பது சரியா? இது ஒருவகை மனப்பான்மை வெளிப்பாடாக தெரிகிறது. இவ்வளவு பிரச்னைகள் நடந்தும் அரசு, போலீஸ், தேர்தல் அதிகாரிகள் தலையீடாதது பல கேள்விகளை உருவாக்கி, திரைக்கதை ஓட்டத்தை தடுக்கிறது. வில்லன் மனைவி, வேல்முருகன் சம்பந்தப்பட்ட சீன்களை தாராளமாக வெட்டிவிடலாம். ஹீரோயின் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் தெளிவு இல்லை. கிளைமாக்ஸ் குழப்பமாக இருக்கிறது.

இன்னமும் பல ஊர்களில் ஜனநாயகம் இப்படிதான் இருக்கிறது. இன்னமும் பல இடங்களில் ஜாதி ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், தனித்தொகுதி என்று அறிவித்தாலும் பட்டியலின மக்கள் தேர்தலை சந்திக்கும் விதங்கள், அவமானங்கள், அவர்களை டம்மி ஆக்கி, மற்றபிரிவினர் ஆதிக்கம் செலுத்தும் நடைமுறை என பல விஷயங்களை டீடெயிலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். மதுமிதா மாதிரி பலர் வர வேண்டும். அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறார். ஆனாலும், இன்னமும் அழுத்தமாக சொல்லியிருந்தால் படம் பேசப்பட்டு இருக்கும்.

நாளை நமதே - தனித்தொகுதி தேர்தல்களின் மறுபக்கம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !