உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / ரெட்பிளவர்

ரெட்பிளவர்

தயாரிப்பு : ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ்
இயக்கம் : ஆண்ட்ரு பாண்டியன்
நடிப்பு : விக்னேஷ், மனிஷா, தலைவாசல் விஜய், நாசர் மற்றும் பலர்
ஒளிப்பதிவு : தேவசூர்யா
இசை : சந்தோஷ்ராம்
வெளியான தேதி : ஆகஸ்ட் 8, 2025
நேரம் : 2 மணிநேரம் 02 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

இந்தியாவை பாதுகாக்க, 1947ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய அமைப்பு ரெட்பிளவர். சரியாக 100 ஆண்டுகள் கழித்து 2047ல் மால்கம் டைனஸ்டி என்ற அமைப்பால் இந்தியாவுக்கு ஆபத்து வரும்போது ரெட்பிளவர் என்ன செய்தது. அப்போது இந்தியா எப்படி முன்னேறி இருக்கிறது. மால்கம் டைனஸ்ட்டி ஏன் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. வரி கட்ட வேண்டும் என்று அந்த அமைப்பு சார்பில் மிரட்டல் விடுப்பவர்களுக்கு ரெட்பிளவர் அமைப்பை சேர்ந்த ஹீரோ விக்னேஷ் எப்படி பதிலடி கொடுக்கிறார் என்ற கற்பனை கதைதான் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கிய ரெட்பிளவர் படக்கரு

ஹாலிவுட் படம் மாதிரி எடுக்கணும்னு ஆசைப்பட்டு இருக்கிறார் இயக்குனர். 2047ல் கதை நடப்பதால் ஆரம்பம் முதல் கடைசிவரை அவ்வளவு கிராபிக்ஸ் காட்சிகள், ஏகப்பட்ட துப்பாக்கி, விமானங்கள், சாட்டிலைட், ஆயுதங்கள், ஹை டெக் ஆபீஸ், நவீன கட்டிடங்கள். இந்த கற்பனைக்காக, முயற்சிக்காக இயக்குனரை பாராட்டலாம், கேமராமேன் உழைப்பை பேசலாம். ஆனால் அனைத்தும் பக்காவாக செட் ஆகவில்லை. கிராபிக்ஸ் தரமாக இல்லை. அதிலும் அந்த டோன் திருப்திகரமாக இல்லை, ஏனோ தானோ என இருக்கிறது.

சின்னதாய், ராமன் அப்துல்லா புகழ் விக்னேஷ் தான் ஹீரோ. அண்ணன், தம்பியாக வருகிறார். அண்ணன் நாட்டுப்பற்று கொண்ட உளவு பிரிவு அதிகாரி, தம்பி அதற்கு நேர் எதிர் அண்ணனை கொன்று விட்டு, அவர் காதலியை அடைய துடிக்கும் அபாயகரமானவர். இரண்டு கேரக்டர்களிலும் தனது முந்தைய பட சாயல் இன்றி நடித்துள்ளார். தம்பி கேரக்டரில் நடிப்பில் இன்னும் மிரட்டி இருக்கிறார். ஆனாலும் இந்த கதைக்கு அதிகம் செட் ஆகவில்லை. சில சமயம் ஓவர் ஆக்டிங்.

சரி கதைக்கு வருவோம். மால்கம் டைனஸ்டி அமைப்பின் தலைவரான தலைவாசல் விஜய் இந்தியாவை அழிக்க துடிக்கும், வரி கேட்டு மிரட்டும் உலக சர்வாதிகாரியாக வருகிறார். அப்போது இந்திய பிரதமராக இருப்பவர் ஒய்.ஜி.மகேந்திரன். ராணுவ தளபதியாக நாசர், ஒரு இளம் பெண் ஜனாதிபதி. தலைவாசல் விஜய் தவிர சுரேஷ் மேனன் உட்பட நிறைய வில்லன்கள். நிழல்கள் ரவி, மோகன்ராம், அஜய் ரத்னம் என ஏகப்பட்ட நடிகர்கள். இப்படி போகிறது கதை. ஆனால் யார் முகமும், எந்த கேரக்டரும் மனதில் பதியவில்லை.

படம் முழுக்க வில்லன் ஆட்கள், பெண்களை கற்பழித்து, கொடுமைபடுத்தி கொள்கிறார்கள். எதிர் அணியை சேர்ந்தவர்களை சுட்டு கொன்று கொண்டே இருக்கிறார்கள். அதிலும் பல வெளிநாட்டு பெண்கள் இந்திய பெண்களாக காட்டப்படுகிறார்கள். இடையிடையே பாடல் என்ற பெயரில் கவர்ச்சி டான்ஸ். கதையில் அவ்வப்போது வந்து மிரட்டுகிறார் தலைவாசல் விஜய். இதற்கிடையே கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட அண்ணன் மீண்டு வருகிறார். அவர் தேசப்பற்றுடன் இந்தியாவை அழிக்க வரும் ஏவுகனைகளை அழிக்கிறார். தம்பிக்கு பாடம் கற்பிக்க நினைக்கிறார். அதற்கு ஏகப்பட்ட பில்டப், சாடிலைட் தொடர்பு, கட்டளைகள், இதெல்லாம் படத்துடன் ஒட்டாமல் இருப்பது சோகம். நிறைய வன்முறைகள், இதில் சிவகுமார் போட்டோவெல்லாம் வருவது தனிக்கதை

வில்லன் டீமை, அவர்கள் திட்டத்தை அழித்தது ரெட்பிளவர் அமைப்பு, அதில் இருக்கும் நாட்டுப்பற்றுள்ள வீரர்களுக்கு சல்யூட் என சொல்லி, நேதாஜி பற்றி, அவரின் வீரம், தேசிய சிந்தனை குறித்து காண்பிக்கிறார்கள். படத்தில் வரும் ஒரே உருப்படியான சீன் இதுதான்.

இயக்குனர் யோசித்த கரு ஓகே, அதை ஓவர் பில்டப், அதீத கற்பனையில் காண்பித்து படத்தை நெளிய வைத்து இருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களை நினைத்து சூடு போட்டு இருக்கிறார்கள்.

ரெட்பிளவர் - 2047ல் நடக்கும் சொதப்பல் ஆபரேசன்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !