உள்ளூர் செய்திகள்

வில்

தயாரிப்பு : புட் ஸ்டெப் புரடக் ஷன்
இயக்கம் : எஸ். சிவராமன்
நடிப்பு : சோனியா அகர்வால், அலக்கியா, விக்ராந்த், பதம் வேணுகுமார்
இசை : சவுரப் அகர்வால்
ஒளிப்பதிவு : டி.எஸ்.பிரசன்னா
வெளியான தேதி : அக்டோபர் 11, 2025
நேரம் : 1 மணிநேரம் 57 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருக்கும் சோனியா அகர்வாலிடம் ஒரு இளம் பெண் சம்பந்தப்பட்ட சொத்து வழக்கு வருகிறது. அதில் ஆள்மாறாட்டம் நடந்து இருக்குமோ என்று சந்தேகப்படும் அவர், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விக்ராந்திடம் அந்த வழக்கு குறித்து விசாரிக்க சொல்கிறார். பல்வேறு இடங்களுக்கு சென்று அந்த வழக்கு குறித்து விசாரிக்கிறார் விக்ராந்த். அப்போது ஹீரோயின் அலக்கியா யார்? அவர் பின்னணி என்ன? அவருக்கும் அந்த சொத்துக்கும் என்ன தொடர்பு என்ற விவரங்கள் தெரிய வருகிறது. அந்த வழக்கின் தீர்ப்பு என்ன? அலக்கியாவுக்கு நியாயம் கிடைத்ததா என்பது வில் படத்தின் கதை. வில் என்றால் உயில் என அர்த்தம். எஸ்.சிவராமன் இயக்கி இருக்கிறார்

சோனியா அகர்வால் ஒரு வழக்கை விசாரிப்பதில் இருந்து கதை தொடங்குகிறது. ஒரு வயதான தொழிலதிபர் சென்னையில் இருக்கும் சொகுசு பிளாட்டை, ஒரு இளம் பெண்ணுக்கு எழுதி வைக்க வேண்டிய கட்டாயம் ஏன்? அந்த பெண் யார் என்று விக்ராந்த்த விசாரிக்க, கதை சூடுபிடிக்கிறது. நீதிபதி கெட் அப்புக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார் சோனியா அகர்வால், அவரின் பாடிலாங்குவேஜ், வசன உச்சரிப்பு அருமை. பல குளோசப் ஷாட், சின்ன, சின்ன எக்ஸ்பிரசனில் அவர் பங்களிப்பு படத்துக்கு பிளஸ். குறிப்பாக, கோர்ட் காட்சிகள், வழக்கமான சினிமா பாணியில் இல்லாமல் எதார்த்தமாக இருப்பது கதையை ரசிக்க வைக்கிறது.

ஹீரோயினாக வரும் அலக்கியா ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணாக அறிமுகமாகி, அப்பாவின் பணப்பிரச்னையால் வேறு தளத்துக்கு மாறும் கேரக்டர். ஒரு வயதான பணக்காரரிடம் அவர் படும் பாடு, பின்னர், அந்த உறவு மாறும்விதம் திரைக்கதையில் புதுமை. பல சோக, எமோஷனல் காட்சிகளில் அலக்கியா நடிப்பு கவனிக்க வைக்கிறது. கிளைமாக்சில் கண்கலங்க வைக்கிறது.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரும் விக்ராந்த் விசாரணை ஓகே ரகம். அவர் இன்னும் சிறப்பாக நடித்து இருக்கலாமோ என்று தோன்றுகியது. வயதான பணக்காரராக வரும் பதம் வேணுகுமார் கேரக்டர், நடிப்பும் வித்தியாசம். ஆனால், குடும்ப பிரச்னைகளில் நிறைய நாடகத்தனம். அலக்கியா திருமண வாழ்க்கை, அந்த சம்பவம் முழுமையாக நிறைவடையவில்லை. ஹீரோயின் சம்பந்தப்பட்ட ஹோம்கேர் சீன்கள் இழுக்கின்றன. அந்த வயதான பணக்காரின் குடும்பம், சித்துார் காட்சிகளில் ஈர்ப்பு இல்லை. அவர் ஏன் மாறினார் என்பதற்கு வலுவான காரணம் இல்லை.

பணத்துக்காக ஒரு பெண் மாறுவர், எதையும் செய்வார் என்ற கோணம், அதற்கு நியாயம் சொல்லும் சீன்கள் பிற்போக்குதனமானவை . பல சீன்கள் பெண்களை தவறாக காண்பிப்பது போல உள்ளது. அலக்கியா குடும்ப பைனான்ஸ் பிரச்னைகள், 7 லட்சம் கடன் சீன்களில் அழுத்தம் இல்லை.

சோனியா அகர்வால் தம்பி சவுரவ் அகர்வால் இசையமைத்து இருக்கிறார். அக்கா படம் என்றாலும் அவர் அதிகம் உழைக்கவில்லை என்று தெரிகிறது. டெஸ்லா பாடல் மட்டும் சுமார். கோர்ட், மலை பிரதேச காட்சிகளில் பிரசன்னா ஒளிப்பதிவு திறமை தெரிகிறது

நல்ல கோர்ட் டிராமா என்றாலும், ஒரு கட்டத்தில் குடும்ப பிரச்னை, தவறான உறவு, சொத்துக்காக மோதல், பொய் சாட்சி என கதை வேறு திசைக்கு நகர்ந்து பொறுமையை சோதிக்கிறது. ஒரு மாறுபட்ட கதை என்றாலும், சொல்லப்படும் கருத்து தவறாக இருக்கிறது. கிளைமாக்சில் அழுத்தம் இல்லை. நமக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறார் இயக்குனர் என்பதிலும் குழப்பம்.

வில் - உயில் பின்னணியில் நடக்கும் உயிர் இல்லாத கதை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !