வாசகர்கள் கருத்துகள் (1)
ரஞ்சித் அல்லல் பட்டு, துன்பப்பட்டு , இன்னல் பட்டு , கஷ்டப்பட்டு , நஷ்டப்பட்டு எடுத்த இறுதி முயற்சி இதுவும் தோல்விதான் ?? ஏன்ன்ன இவ்வளவு பட்டும் நீங்க திருந்தலையே ரஞ்சித்??
தயாரிப்பு : வரம்சினிமாஸ்
இயக்கம் : வெங்கட் ஜனா
நடிப்பு : ரஞ்சித், மேகாலி மீனாட்சி, விட்டல் ரவி, புதுப்பேட்டை சுரேஷ்
இசை : சுனில் லாசர்
ஒளிப்பதிவு : சூர்யாகாந்தி
வெளியான தேதி : அக்டோபர் 10, 2025
நேரம் : 2 மணிநேரம் 01 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
ஜவுளி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், மகனின் ஆபரேசனுக்காக 80 லட்சம் கடன் வாங்குகிறார் தொழிலதிபரான ரஞ்சித். அவருக்கு வட்டிக்கு விட்ட வில்லன் விட்டல் ராவ் டீம் கடனை திருப்பி செலுத்தாதவர்களை, ஒழுங்காக வட்டி கட்டாதவர்களை கொடுமைப்படுத்துவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறது. விட்டல் ராவ் தம்பி புதுப்பேட்டை சுரேஷ் கடன் வாங்கியவர்களின் வீட்டு பெண்களை மானபங்கப்படுத்துகிறார். இவர்களிடம் சிக்கும் ரஞ்சித் என்னென்ன பாடுபடுகிறார். குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயற்சிக்கும் அவரின் திட்டம் நிறைவேறியதா? ரஞ்சித் வீட்டில் மறைந்து வாழும் சைக்கோ கொலைகாரன் யார்? அவன் என்ன செய்தான் என்பது வெங்கட் ஜனா இயக்கியிருக்கும் இறுதிமுயற்சி கதை.
வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு அதை சரியாக கட்ட முடியாமல் தவிக்கும் கேரக்டரில் ஓரளவு சிறப்பாக நடித்து இருக்கிறார் ரஞ்சித். நண்பர்களிடன் பணம் கேட்கப்போய் அவமானப்படுவது, தனது கஷ்டத்தை மனைவி, குழந்தைகளுக்கு தெரியாமல் சமாளிப்பது, வீட்டு வாசலில் காவலுக்கு இருக்கும் கடன்கார அடியாட்களால் அவஸ்தை அனுபவிப்பது, தற்கொலைக்கு முயற்சிப்பது என நிறைய இடங்களில் உருக்கமாக நடித்து இருக்கிறார். ஆனாலும், ஒரு ஹீரோவுக்கான கேரக்டராக இல்லாமல், எப்போதும் சோகம், புலம்பல், தற்கொலை முயற்சி என இருப்பது பல இடங்களில் போராடிக்கிறது. அவர் மனைவியாக வரும் மேகாலி மீனாட்சி அழகாக இருக்கிறார். சில இடங்களில் அழுத்தமான நடிப்பை தருகிறார். ஆனாலும் பெரிதாக ஸ்கோர் பண்ணவில்லை. இவர்கள் குழந்தைகளாக வரும் மவுனிகா, நீலேஷ் சின்ன, சின்ன டயலாக்கால் மனதில் நிற்கிறார்கள்.
வில்லனாக வரும் விட்டல் ராவ், அவர் தம்பியாக வரும் புதுப்பேட்டை சுரேஷ், அவரின் அடியாட்களை பல சினிமாவில் பார்த்து இருப்போம். அனைத்து வில்லன்களை போல அவர்களும் சவுண்டுவிட்டு, பில்டப் கொடுத்து நடித்து இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் கதிரவன் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். மற்றபடி, சொல்லிக்கொள்ளும்படி யாரும் இல்லை.
கடன் வாங்கினால் என்ன பிரச்னை வரும். அதிலும் மனசாட்சி இல்லாதவர்கள், சபலிஸ்ட்டுகளிடம் கடன் வாங்கினால் என்ன நடக்கும், எப்படிப்பட்ட பிரச்னைகள், அவமானங்களை சந்திக்க வேண்டும் என்ற கரு மட்டுமே ஓகே. அதையே படம் முழுக்க வேறு விஷயங்களை பேசாமல், திருப்பங்கள் இல்லாமல் சொல்லியிருப்பது பெரிய மைனஸ் ஆக மாறி இருக்கிறது. படத்தில் இருக்கும் ஒரு ஆறுதல் விஜய்சேதுபதி வாய்ஸ் ஓவர்தான். போலீஸ், மற்றவர்களால் சைக்கோ கொலைகாரனாக கருதப்படும் அவர் நல்லவர், வல்லவர் என்று திரைக்கதையில் டுவிட்ஸ்ட் வைத்து இருக்கிறார் டைரக்டர். ஹீரோ ரஞ்சித் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சிக்கும்போது அவர் அனைவரையும் காப்பாற்றுகிறார். அப்போது அவர் குரல் மட்டும் கேட்கிறது. பாசிட்டிவ் ஆக பேசுகிறார். ஆனால் அவர் முகத்தை கடைசிவரை இயக்குனர் காண்பிக்கவில்லை. அந்த கேரக்டருக்கு சொல்லப்படும் பின் கதை நம்பும்படியாக இல்லை. சுனில் லாசர் இசை, பாடலில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சூர்யா காந்தி ஒளிப்பதிவு ஓகே ரகம்.
வீடு, பிரச்னை என கதை மாறி, மாறி பயணிப்பதும், ஒரு வீட்டில் சைக்கோ கொலைகாரன் மறைந்து இருந்தும் வீட்டில் உள்ளவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா என்ற கேள்வியும், வலு இல்லாத ஸ்கிரீன்பிளே, பலரின் சுமாரான நடிப்பால் படம் தத்தளிக்கிறது. போலீஸ் விசாரணை என்ற பெயரில் நடக்கும் காமெடி, அவர்களன் துப்பறியும் சீன்கள் போர். படம் முழுக்க கடன், பணப்பிரச்னை, தற்கொலை முயற்சி என மாறி, மாறி காண்பிப்பதும், உருப்படியான தீர்வு, பாசிட்டிவிட்டி கருத்து இல்லாதததும் சினிமா பீலிங்கை தர மறுக்கிறது. நிறைய இடங்களில் வரும் நாடகத்தனம், சோகம் இன்னும் சோர்வை தருகிறது.
இறுதிமுயற்சி - நிறைய முயற்சி செய்தும், இறுதிவரை தேறவே இல்லை.
ரஞ்சித் அல்லல் பட்டு, துன்பப்பட்டு , இன்னல் பட்டு , கஷ்டப்பட்டு , நஷ்டப்பட்டு எடுத்த இறுதி முயற்சி இதுவும் தோல்விதான் ?? ஏன்ன்ன இவ்வளவு பட்டும் நீங்க திருந்தலையே ரஞ்சித்??