உள்ளூர் செய்திகள்

மருதம்

தயாரிப்பு : அருவர் பிரைவேட் லிமிடேட்
இயக்கம் : வி.கஜேந்திரன்
நடிப்பு : விதார்த், ரக் ஷனா, மாறன், சரவண சுப்பையா, அருள்தாஸ்
இசை : என்.ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு : அருள்.கே.சோமசுந்தரம்
வெளியான தேதி : அக்டோபர் 10, 2025
நேரம் : 1 மணிநேரம் 43 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சின்ன கிராமத்தில் மனைவி, மகன், கொஞ்சம் விவசாய நிலம், விவசாயம் என்று நிம்மதியாக வாழும் விதார்த்திற்கு லோன் வடிவில் புது பிரச்னை வருகிறது. மறைந்த அவருடைய தந்தை வாங்கிய கடனுக்காக, அவருடைய நிலத்தை ஏலம் விட்டு, வேறோருவருக்கு தாரை வார்க்கிறது தனியார் வங்கி. 'எங்கப்பா லோன் வாங்கலை, இது மோசடி' என்று கோர்ட்டை அணுகிறார் விதார்த். உண்மையில் நடந்தது என்ன? தனது உயிருக்கு உயிரான விவசாய நிலத்தை அவர் மீட்டாரா என்பது மருதம் கதை. வி.கஜேந்திரன் இயக்கி இருக்கிறார்.

விவசாயம், விவசாயிகள் பின்னணியில் தமிழ் சினிமாவில் பல கதைகள் வந்திருந்தாலும் இது ரொம்பவே புதுசு. லோன் என்ற பெயரில் கிராமப்புற விவசாயிகள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள். அதை செய்வது யார் என்பதை நிறைய புள்ளி விவரங்கள், புது தகவல்களுடன் பக்காவான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதற்கேற்ற சரியான நடிகர்கள், தேர்ந்த நடிப்பு, இதுவரை காண்பிக்கப்படாத ராணிப்பேட்டை மாவட்ட கிராமப்புற வாழ்க்கை, அந்த ஸ்லாங் ஆகியவை மருதம் படத்தை கவனிக்க வைக்கிறது.

கன்னியப்பன் என்ற விவசாயியாகவே வாழ்ந்து இருக்கிறார் விதார்த் என்று சொல்லலாம். எந்த இடத்திலும் ஹீரோயிசம், ஓவர் பில்டப் சீன்கள், ஓவர் ஆக்டிங் இல்லை. குடும்பம் மீது பாசம், நிலத்தை இழந்துவிட்டு தவிப்பது, வங்கியில் ஏற்படும் அவமானம், கடைசியில், தானே கோர்ட்டில் வாதாடி, தனது நியாயத்தை சொல்வது என பல சீன்களில் சிறப்பான பங்களிப்பை தந்து இருக்கிறார். கடைசியில் மகனை அரசு பள்ளியில் சேர்க்கிற காட்சி, பேங்கில் நிலத்தை இழந்து கதறுகிற காட்சிகளில் கண்ணீரை வரவழைக்கிறார். அவருக்கு மனைவியாக வரும் ரக் ஷனா, மகனாக நடித்த சிறுவனும் சரியான தேர்வு. பைனான்ஸ்காரராக வரும் அருள்தாஸ், பேங்க் ஆபீசர்ஸ், எதிர்தரப்பு வக்கீல், அந்த நீதிபதி ஆகியோரும் படத்தை இன்னும் ரசிக்க வைக்கிறார்கள்.

வில்லனாக, வங்கி ஆபீசராக வரும் இயக்குனர் சரவண சுப்பையா அதிகம் பேசலாமல், நிறைய இடங்களில் கவருகிறார். விதார்த் நண்பராக வரும் மாறனின் நடிப்பு, அவர் அடிக்கும் ஒன்லைன் காமெடிகள் படத்துக்கு ரிலாக்ஸ். பைனான்ஸ்சியர் ஆக வரும் அருள்தாஸ் கூட மனதில் நிற்கிறார். குறிப்பாக, ராணிபேட்டை மாவட்டத்தை சேர்ந்த பலர், அந்த ஏரியா ஸ்லாங் பேசி நடித்து இருப்பதும், அவர்கள் முகங்களும் படத்தை இன்னும் நமக்கு நெருக்கமாக்குகின்றன. பாடல்கள் காட்சி ஓகே என்றாலும், பின்னணியில் பீல் பண்ண வைக்கிறார் இசையமைப்பாளர் ரகுநந்தன். மலையாள படங்கள் மாதிரி கதையோடு கேமராவை நகர்த்தி, அந்த கிராமம், வயல், வங்கி, கோர்ட்டுக்கு அழைத்து செல்கிறார் கேமராமேன் அருள் கே.சோமசுந்தரம்.

படத்தின் பெரிய பலமே புது சீன்கள்தான். இப்படியெல்லாம் மோசடி நடக்குமா? எப்படி நடக்கிறது என்பதை விலாவரியாக, அதேசமயம் போராடிக்காமல் எளிமையான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். தனியார் வங்கியில் லோன் வாங்கும் விவசாயிகள் நிலை, அதிகாரிகள் அட்டகாசம், சட்ட திட்டங்கள், பாதிக்கப்படும் மக்களின் பரிதாபநிலை என பல விஷயங்களை, சுவாரஸ்யமாக காண்பித்து இருக்கிறார். குறிப்பாக, மோசடி எப்படி நடந்தது என்பதை விதார்த்தும் நல்ல வக்கீலாக வரும் தினந்தோறும் நாகராஜனும் கண்டுபிடிக்கும் விதம், அடுத்து நடவடிக்கை எடுக்கும் விதம் செம. எளிய மனிதர்களின் குரலாக பல வசனங்கள் பேசப்படுகின்றன. கிராமத்தில் இன்னும் நல்லவர்கள் வாழ்கிறார்கள் என்பதை பல சீன்கள் காண்பிக்கின்றன. அதெல்லாம் படத்துக்கு பிளஸ்.

கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படத்துக்கு உயிர். தனியார் பள்ளிகள் மீதான மோகம், கடன் வாங்கி குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் கனவையும் அழுத்தமாக சொல்லியிருப்பது டச்சிங். படத்தில் அரசியல் கலக்காமல், சினிமா வில்லன்களை கொண்டு வராமல், விவசாயிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் பிரச்சாரம் செய்யாமல் கதையை நகர்த்தி இருப்பதும் ஆறுதல்.

பொதுவாக, விவசாயிகள் கதைகளில் சோகமான கிளைமாக்ஸ்தான் யோசிப்பார்கள். ஆனால், இதில் பாசிட்டிவான, நம்பிக்கை தரக்கூடிய கிளைமாக்ஸ் வைத்து, லோன் விஷயத்தில் விழிப்புணர்வை வைத்தது படத்தை இன்னும் அழகாக்குகிறது. கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை, லோன் விஷயத்தில் பல சந்தேகங்கள் என குறைகள் இருந்தாலும், விவசாயம், விவசாயிகளுக்கு ஆதரவான மருதத்தை வரவேற்கலாம்.

மருதம் - எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க, உஷார்!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Natarajan Ramanathan, தேவகோட்டை
2025-10-12 09:43:49

very good movie


angbu ganesh, chennai
2025-10-10 14:02:46

நன்றி தினமலர் இது மாதிரி நல்ல தமிழ் படங்களையும் கொஞ்சமாச்சும் வளர்த்து விடு குறை இல்லாத படங்களே இல்ல