உள்ளூர் செய்திகள்

டீசல்

தயாரிப்பு : தேர்டு ஐ என்டர்டெயின்ட்மென்ட்
இயக்கம் : சண்முகம் முத்துசாமி
நடிப்பு : ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, சாய்குமார், வினய், சச்சின் கெடேகர், ஜாகீர் உசேன்
இசை : திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு : ரிச்சர்டு எம்.நாதன், எம்.எஸ்.பிரபு
வெளியான தேதி : அக்டோர் 17, 2025
நேரம் : 2 மணிநேரம் 24 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

சென்னை துறைமுகத்துக்கு கப்பலில் வரும் குரூடு ஆயிலை, பெரிய குழாய் மூலமாக சுத்திகரிக்க நிலப்பகுதிக்கு எடுத்து செல்வது வழக்கம். மீனவ குடியிருப்புகள் வழியாக செல்லும் அந்த குழாயில் இருந்து திருட்டுத்தனமாக ஆயிலை எடுத்து, மும்பைக்கு லாரிகளில் அனுப்பி சம்பாதித்தது ஒரு கூட்டம். இந்த சம்பவம் பின்னணியில் உருவான கதை டீசல். திருட்டுதனமாக ஆயிலை எடுத்து செல்வது எப்படி? அதன் பின்னணியில் இருக்கும் குரூப், அவர்களுக்கு இடையேயான சண்டை, இதனால், பாதிக்கப்படும் மீனவ கிராமங்கள், கார்ப்பரேட் அரசியல், பணம், அதிகார பலம், மக்கள் பிரச்னை என பல விஷயங்களை ஹரிஷ் கல்யாணை வைத்து புது கதைக்களத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி.

2014ல் இந்த கதை நடக்கிறது. சென்னையில் உள்ள மீனவ கிராமத்தில் வெயிட் பார்ட்டியாக இருக்கும் சாய்குமார் இப்படி ஆயில் திருடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அவருக்கு உதவியாக இருக்கிறார் டீசல் என்று அழைக்கப்படும் ஹீரோ ஹரிஷ் கல்யாண். மும்பை தொழிலதிபர் சச்சினுக்கு அதை அனுப்பி பணம் சம்பாதித்தது, அதை மீனவ மக்களின் நல்ல காரியத்துக்கு பயன்படுத்துகிறார்கள். அதற்கு போலீஸ் ஆபீசர் வினய், சில அதிகாரிகள் உடந்தை. இந்த தொழிலில் விவேக் பிரசன்னா களம் இறங்க பிரச்னை ஆரம்பிக்கிறது. இந்த சண்டையில் மும்பை தொழிலதிபர் பங்கு என்ன? அவரின் பெரிய திட்டம் என்ன? அதனால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து புத்திசாலி தனமாக ஹீரோ என்ன செய்கிறார் என்ற ரீதியில் கதை முடிகிறது.

டீசல் கேரக்டரில் ஹரிஷ் கல்யாண் நடிப்பு ஓகே. ஆக் ஷனுக்கு மாறியிருக்கிறார், அதுவும் ஓகே. மக்களை திரட்டி அவர் போராடுகிற சீன்களும் ஓகே. ஆனால் காதல் காட்சிகளில் பெரிதாக ஈர்க்கவில்லை. ஹீரோவாக அவர் ஜெயித்தாலும் படத்தின் கதையும், காட்சிகளும், ஏகப்பட்ட கேரக்டர் என்ட்ரியும் டீசலை தடுமாற வைக்கிறது. இப்படி ஆயில் கடத்தல் நடக்குமா? நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் பின்னணியில் இவ்வளவு விஷயங்களா என்ற திரைக்கதை புதுசு. ஆனால், அதை இடைவேளைக்குபின் கார்ப்பரேட் அரசியல், தனியார் துறைமுகம், சிப், பேட்டரி என ஏகப்பட்ட விஷயங்களை சொல்லி சிதறடித்து இருக்கிறார் இயக்குனர்.

வக்கீலாக வருகிறார் அதுல்யா ரவி. அவரின் காதல், கனவு, நடிப்பு ஏன் மேக்கப் கூட சரியாக செட்டாகவில்லை. சில சீன்களில் சும்மா வந்து போகிறார். சாய்குமார் ஏதோ செய்யப்போகிறார் என்று நினைத்தால் அவர் கேரக்டரும் திடீரென காணாமல் போகிறது. பல படங்களில் பார்த்த கார்ப்பரேட் வில்லனாக வருகிறார் சச்சின். ஏதோ தொழிலதிபரை அந்த கேரக்டர் நினைப்படுத்துகிறது. போலீஸ் ஆபிசராக வரும் வினய் தான் சில சீன்களில் மிரட்டுகிறார். குறிப்பாக, விவேக் பிரசன்னா, அவருக்குமான சில சீன்கள் மாஸ். அப்புறம் அவரும் வழக்கமான சினிமா போலீஸ் ஆகிவிடுகிறார். இவர்களை தவிர, கருணாஸ், ரமேஷ் திலக், தீனா என ஏகப்பட்ட நடிகர்கள் இருக்கிறார்கள். ஆயில் திருட்டை கண்டுபிடிக்க வரும் ஹிந்தி நடிகர் ஜாகீர் உசேன் மட்டுமே அவ்வப்போது தான் சிறந்த நடிகர் என நிரூபிக்கிறார். போராட்ட விஷயங்களில் கேமரா வொர்க் ஓகே. பாடல்கள் சுமார் ரகம்.

திடீர் மக்கள் போராட்டம், கடல் முற்றுகை, ஹார்பர் பிரச்னை, தண்ணீர் குழாய் ரகசியம், ஆயில் திருட்டை கண்டுபிடிப்பது என நல்ல சீன்கள் இருந்தாலும், ஏனோ அது கதையுடன் ஒட்டி படத்துக்கு பிளஸ் ஆக அமையவில்லை. படம் முழுக்க பேசிக்கொண்டே இருப்பது போராடிக்கிறது. ஆயில் குழாயால் மீனவ மக்களுக்கு என்ன பிரச்னை, அது நீக்கப்பட்டதால் என்ன பலன் என்பதை சரியாக சொல்லவில்லை. நல்ல பாட்டு, காமெடி என கமர்ஷியல் அம்சங்களும் குறைவு. ஆயில் அரசியலை, கார்ப்பரேட் சுயநலத்தை வைத்து ஏதோ சொல்ல முயன்று சொதப்பி இருக்கிறார்கள்.

டீசல் - இந்த வண்டி கொஞ்சம் திணறுது...!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !