உள்ளூர் செய்திகள்

மகாசேனா

தயாரிப்பு: மருதம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: தினேஷ் கலைச்செல்வன்
நடிப்பு: விமல், சிருஷ்டி டாங்கே, மகிமா குப்தா, யோகிபாபு, ஜான் விஜய்
ஒளிப்பதிவு: மனாஸ்பாபு
இசை: பிரவீன்குமார்
வெளியான தேதி: டிசம்பர் 12, 2025
நேரம்: 2 மணி 15 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5

யாளி சிலையை தெய்வமாக வணங்குகிறார்கள் விமல் ஊர்தலைவராக இருக்கும் மலைவாழ் மக்கள். அந்த சிலையை தங்கள் வசமாக்க பல ஆண்டுகளாக போராடுகிறது அடிவாரத்தில் இருக்கும் வில்லி மகிமாகுப்தா தலைமையிலான கூட்டம். இதற்கிடையில் போலீஸ் ஜான் விஜய்யும், இன்னொரு டீமும் அந்த சிலையை அபகரிக்க நினைக்கிறார்கள். ஊர் திருவிழாவுக்கு நாள் குறித்தபின் அந்த சிலையை இவர்களால் எடுக்க முடிந்ததா? அதை அந்த மலைவாழ் மக்கள் தடுத்தார்களா? இந்த சண்டையில், விமல் வளர்க்கும் சேனா என்ற யானையின் பங்கு என்ன? இதுதான் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் உருவான மகாசேனா கதை.

யாளி என்ற சிலையை சுற்றி நடக்கும் கதை, யானை சுற்றி நடக்கும் கதை, மலைவாழ் மக்களை சுற்றி நடக்கும் கதை, காதல் கதை, அப்பா, மகள் பாசக்கதை, பழிவாங்கும் கதை என ஏகப்பட்ட கதைகளை மகாசேனாவில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். விமல்தான் ஹீரோ என்றாலும், அவர்தான் ஹீரோவா என நமக்கு பல இடங்களில் சந்தேகம் வருகிறது. முதலில் அவருக்கான காட்சிகளே குறைவு. படப்பிடிப்புக்கு லீவு போட்டு சென்று விட்டாரா என்று சந்தேகப்படும் அளவுக்கு, பல முக்கியமான சீன்களில் அவரை காணவில்லை. அப்புறம் உணர்ச்சிபூர்வமாக, முக்கியமான சீன்களில் கூட ஆர்வம் இல்லாமல் நடித்தது மாதிரி இருக்கிறார். கிளைமாக்சில் அவ்வளவு அடிவாங்குகிறார். கடைசியில் யானைதான் ஸ்கோர் செய்து, நம்மை பீல் பண்ண வைக்கிறது. ஆனாலும், விமல்தான் ஹீரோ.

மகாசேனாவில் இருக்கும் ஆறுதல் சிருஷ்டி டாங்கே நடிப்பு. விமல் மனைவியாக, டீன்ஏஜ் பெண் அம்மாவாக அறிமுக காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் சண்டைகாட்சி வரை நன்றாக நடித்து இருக்கிறார். அவரின் மலைவாழ் இன பெண் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் அழகாக இருக்கிறது. ஒரு பாடல்காட்சியிலும் எனர்ஜியாக ஆடியிருக்கிறார். வில்லியாக வரும் மகிமாவுக்கு படம் முழுக்க ஒரே ஒரு காஸ்ட்யூம்தான். அடிக்கடி பொங்குகிறார், மற்றபடி அவர் கேரக்டர் ஏமாற்றம். விமல் மகளாக வரும் அல்லி கேரக்டர் ஓகே. அவருக்கும், அந்த யானைக்குமான சீன்கள் பதைபதைப்பு, உருக்கம்.

இவர்களை தவிர, இவர்கள் ஏன் என்று சொல்லும் அளவுக்கு கதையில் ஒரு கல்லுாரி பேராசியர், கல்லுாரி மாணவிகள் கூட்டம் அவ்வப்போது வருகிறது. அந்த சீன்கள் செயற்கை தனமாக இருக்கிறது. காட்டுக்குள் டிரக்கிங் வரும் அந்த கூட்டத்தை வழி நடத்தும் கைடு ஆக வருகிறார் யோகிபாபு. அவர் காமெடியன்தான். ஆனால், எந்த காமெடிக்கும் சிரிப்பு நஹி. வரிசையாக இப்படியாக அவர் நடிப்பு மாறுவதால், அவர் சுய பரிசோதனை செய்ய வேண்டியது முக்கியம். இந்த கதையில் இந்த டிராக் ஏன் என்பது இயக்குனருக்கே வெளிச்சம். போலீசாக வரும் ஜான்விஜய் எல்லா படத்திலும் ஒரே மாதிரியாக நடித்து, கத்தி இம்சை கொடுக்கிறார். எத்தனை படங்களில் மோசமான போலீசாக நடிப்பாரோ?

அடிவார வில்லனாக விஜய்சேயோன், போலீஸ் வில்லனாக ஜான்விஜய், கார்ப்பரேட் வில்லனாக கபீர்துஹான்சிங் வருகிறார்கள். முந்தைய படங்களில் பல வில்லன்கள் செய்ததை இவர்களுக்கும் செ ய்கிறார்கள். வம்பு இழுக்கிறார்கள், சவுண்டு விடுகிறார்கள். சண்டைபோடுகிறார்கள். அவ்வளவுதான். அதிலும் அந்த கார்ப்பரேட் வில்லன் பில்டப் ஓவர். சரி, மகாசேனா என தலைப்பு வைத்து இருப்பதால் சேனா என்ற அந்த யானை ஏதோ பெரிய சம்பவம் செய்யப்போகிறது. கதையில் கலக்கப்போகிறது என்று நினைத்தால், அதுவோ வயதான யானை, பல இடங்களில் அதை கிராபிக்சில் காண்பித்து இருக்கிறார்கள். கிளைமாக்சில் சில விஷயங்களை அது செய்தாலும் அது ஒட்டவில்லை. ஆக, யானை கேரக்டரும் பிளஸ் இல்லை. பல சீன்களின் செயற்கை தனமான, ஏனோதானோவென இருக்கிறது.

மலை கிராமங்களை ஓரளவு அழகாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனாஸ்பாபு. பிரவீன்குமாரின் விமல், சிருஷ்டிடாங்கே பாட்டு ஓகே. பின்னணி இசையில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் உதயபிரகாஷ்குமார். கோயில் இருக்கும் பழங்கால சிலையை திருட நினைக்கும் கூட்டம், அதை காப்பாற்றும் ஹீரோ என்பதை பல படங்களில் பார்த்து இருக்கிறோம். அதை சொன்ன மகாசேனாவில் புதுமை இல்லை. விமல் நடிப்பில் உயிர் இல்லை. திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை. கிளைமாக்சில் அழுத்தம் இல்லை என ஏகப்பட்ட இல்லைகளை கொண்டிருக்கிறது மகாசேனா.

மகாசேனா - படத்தலைப்பை மகாசோதனைனு வெச்சு இருக்கலாம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !