களம்காவல் (மலையாளம்)
தயாரிப்பு : மம்முட்டி கம்பெனி
இயக்கம் : ஜித்தின் கே ஜோஸ்
நடிப்பு : மம்முட்டி, விநாயகன், ரஜிஷா விஜயன், சுருதி ராமச்சந்திரன்
ஒளிப்பதிவு : பைசல் அலி
இசை ; முஜீப் மஜீத்
ரிலீஸ் தேதி : டிசம்பர் 5, 2025
நேரம் : 2 மணி 24 நிமிடம்
ரேட்டிங் : 3.25 / 5
2005ல் நடக்கும் கதை.. மனைவி குழந்தைகள் என ஒரு குடும்பத் தலைவர் மம்முட்டி. ஆனால் முதிர்கன்னிகள், விதவை, விவாகரத்து பெற்றவர்கள் என அவர் தேடித்தேடி தனக்கு பிடித்த பெண்களாக ஆசை வலை வீசி அவர்களை பயன்படுத்திவிட்டு கொலையும் செய்கிறார். இதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. இந்த வழக்கு கிரைம் பிரான்ச் அதிகாரியான விநாயகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் இந்த வழக்கை விசாரித்து குற்றவாளியை தேடிச் செல்லும்போது கிட்டத்தட்ட 13 கொலைகளுக்கு மேல் நடந்திருப்பது தெரிய வருகிறது.
விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து இதுபோல சில பெண்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து உதவி செய்வதற்காக விநாயகனுக்கு உதவியாக நியமிக்கப்படுகிறார் ஒரு போலீஸ்காரர். அவர் வேறு யாரும் அல்ல.. மம்முட்டியே தான்.. இப்படி பெண்களை வலையில் வீழ்த்தி மம்முட்டி வேட்டையாடுவதற்கு காரணம் என்ன? விநாயகன் மம்முட்டி தான் குற்றவாளி என கண்டுபிடித்தாரா என்பது மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்த மம்முட்டி இதில் வில்லன்.. வில்லனாக நடித்து வந்த விநாயகன் இதில் கதாநாயகன். இந்த மாறுபட்ட முரண்பாடே படத்தின் துவக்கத்தில் இருந்து நமது ஆர்வத்தை தூண்டி விடுகிறது. சும்மா சொல்லக்கூடாது.. மம்முட்டி ஒவ்வொரு பெண்ணையும் ஆசை வார்த்தை பேசி மயக்கும் விதமும் அவர்களை கொல்வதற்காக கையாளும் யுக்திகளும் அதிர்ச்சியூட்டுகின்றன. ஏன் கொல்கிறேன் என்பதற்கு அவர் சொல்லும் காரணமும், ஒரு பெண்ணிடமே அதை சொல்லிவிட்டு அவர் செய்து காட்டுவதும் என துவக்கத்திலேயே தனது வில்லத்தனத்தை காட்டத் துவங்கி விடுகிறார் மம்முட்டி. அது படம் இறுதி வரை தொடர்கிறது.
துப்பறியும் போலீஸ் அதிகாரியாக விநாயகன். வழக்கமான அவரது எந்தவித கிண்டல் கலந்த வார்த்தைகள், சேஷ்டைகள் எதுவும் இல்லாமல் கம்பீரமாக படம் முழுவதும் இந்த வழக்கை அவர் தீவிரமாக துப்பறியும் போது ஜெயிலரில் நாம் பார்த்த வர்மாவா இது என காட்சிக்கு காட்சி நம்மை திகைக்க வைக்கிறார். இறுதிக்காட்சியில் மம்மூட்டியை பிடிக்க அவர் பொறி வைப்பது எதிர்பாராத டுவிஸ்ட்.
படத்தில் இந்த இரண்டு கதாபாத்திரங்கள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாலும் இந்த வழக்கின் ஆரம்பத்திலிருந்து விநாயகனுடன் பயணிக்கும் போலீஸ்காரரும் கவனம் ஈர்க்கிறார்.
கதாநாயகிகளாக ரஜிஷா விஜயன், சுருதி ராமச்சந்திரன், காயத்ரி அருண் என பல பேர் இருந்தாலும் எல்லோருமே கதையின் போக்கில் வெகு சில நிமிடங்களே வந்து செல்வது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மணக்குறையாக இருக்கும்.
படத்தின் காலகட்டத்திற்கு ஏற்ப அதே சமயம் ஒரு த்ரில்லிங் மூடிலேயே ரசிகர்களை படம் முழுக்க தனது இசையால் நகம் கடிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் முஜீப் மஜீத். அதேபோல ஒளிப்பதிவாளர் பைசல் அலியும் கேரள கிராமத்து அழகியல் பின்னணியை அழகாக செதுக்கியிருக்கிறார்.
பொதுவாக இதுபோல சைக்கோ திரில்லர் படங்களில் யார் கொலை செய்கிறார்கள், எதற்காக செய்கிறார்கள் என்பதெல்லாம் இடைவேளை அல்லது அதற்கு பின்னால்தான் தெரியவரும். ஆனால் இதில் கொலை செய்யும் நபர் யார், அவர் ஏன் செய்கிறார் என்கிற விஷயத்தை படத்தின் முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டு கதையை நகர்த்தி சென்று இருப்பது ஒரு புதுமை என்று தான் சொல்ல வேண்டும்.
கதை 20 வருடங்களுக்கு முன்பு நடப்பதால் அதுவும் சாதாரண பட்டன் மொபைல் போன் பயன்படுத்திய காலகட்டத்தில் நடப்பதால் கொலைகளை செய்வதிலும் அதை கண்டுபிடிப்பதிலும் ஏற்படுகின்ற சில லாஜிக் குறைபாடுகளை பெரிதுபடுத்தி பார்க்க தேவையில்லை.. விசாரணை என்கிற பெயரில் படம் கொஞ்சம் மெதுவாக செல்வது போல தோன்றினாலும் பெரிய அளவில் தொய்வு இல்லை. படம் முழுவதும் குற்றவாளியை எப்படி போலீஸ் கண்டுபிடிக்க போகிறார்கள், அனைத்தையும் தெரிந்து கொண்டு கூடவே இருக்கும் குற்றவாளி எப்படி தப்பிக்க முயற்சிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகவே சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ்.
களம்காவல் - ஆடும் புலியும் இணைந்து ஆடும் சதுரங்க ஆட்டம்