உள்ளூர் செய்திகள்

சாவீ

தயாரிப்பு : ஆண்டன் அஜித் புர டக்சன்ஸ்
இயக்கம் : ஆண்டன் அஜித்
நடிப்பு : உதயா தீப், ஆதேஷ் பாலா, கவிதா சுரேஷ்,
ஒளிப்பதிவு : பூபதி வெங்கடாசலம்
இசை : சரண் ராகவன், ரகுராம்
வெளியான தேதி : டிசம்பர் 5, 2025
நேரம் : 1 மணிநேரம் 45 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

தனது மாமா மகளை காதலிக்கிறார் ஹீரோ உதயாதீப். ஒரு விபத்தில் அந்த மாமா திடீரென இறந்துவிட, மறு நாள் உடல் அடக்கம் நடைபெறும் நிலையில் இரவில் பிணத்துடன் வீட்டில் இருக்கிறார் உதய். சில காரணங்களால் நன்றாக துாங்கிவிடுகிறார். மறுநாள் காலை பெட்டியில் இருக்கும் பிணம் காணாமல் போக, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதேஷ் விசாரணையை தொடங்குகிறார். பிணத்தை திருடியது யார்? அது எங்கே போனது? என்ன பிரச்னை என பலர் மீது சந்தேகப்படுகிறார். அப்போது இறந்தவரின் சகோதரனும் திடீரென இறக்கிறார். போலீசுக்கு சந்தேகம் வலுக்கிறது. இப்படி ஒரு விசாரணை ஆங்கிளில் செல்லும் படம் சாவீ. இதென்ன தலைப்பு என கேட்கலாம். சாவு வீடு என்ற தலைப்புக்கு பிஸினஸ் ரீதியாக எதிர்ப்புகள் வந்தால் சாவீ என அதை சுருக்கி இருக்கிறார் இயக்குனர்

பிணத்தை மையமாக வைத்து, சாவு வீடு பின்னணியில் எத்தனையோ படங்கள் வந்து இருக்கிறது. சாவீயில் அதை காதல் கலந்து, டார்க் காமெடியில் சொல்லியிருக்கிறார்கள். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக, பாணா காத்தாடி உள்ளிட்ட படங்களில் சின்ன கேரக்டரில் நடித்த உதயா தீப் இதில் ஹீரோ.

காதல் திருமணம் செய்த தனது அப்பாவை மாமன்கள் கொன்றுவிட்டதாக சந்தேகப்பட்டாலும், ஒரு மாமன் மகளை காதலிக்கிறார். அந்த பழைய கோபத்தில் தனது அப்பா உடலை மறைத்து விட்டதாக அவர் காதலியும் சந்தேகப்படுகிறார். அந்த இடங்களில் உதயதீப் நடிப்பு ஓகே. காதலியிடம் பேசும் சில ரொமான்ஸ் விஷயங்கள் ஓவர். மற்றபடி அவர் ஹீரோ மாதிரி இல்லாமல், படத்தில் ஒரு கேரக்டர் மாதிரியே இருக்கிறார்.

ஹீரோயின் ஒன்றிரண்டு சீன்களில் வந்து வசனம் பேசுகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஆதேஷ் பாலா அடிக்கடி சவுண்டு விடுகிறார். டென்ஷன் ஆகிறார், அவர் விசாரணையில் சந்தேகப்படும் சில இடங்கள் மட்டும் மற்றபடி, படத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியான நடிப்பு இல்லை. ஹீரோ அம்மா, அத்தைகள், இன்னொரு மாமா வாக்குமூலம், இறப்பு குறித்து பேசும் விஷயங்கள், பிளாஷ்பேக் கொஞ்சம் ஆறுதல்.

போலீஸ் விசாரணை, கிளைக்கதைகள் பொறுமையை சோதிக்கிறது. பட்ஜெட் காரணமாக சீன்கள், ஒளிப்பதிவில் தரம் இல்லை. படத்தில் விறுவிறு சீன்கள், தெளிவான திரைக்கதை இல்லாதது பெரிய மைனஸ். புதுமுக நடிகர்கள் பலரின் நடிப்பு செட்டாகவில்லை. பிளாக் காமெடி வொர்க் அவுட் ஆகாததால் சிரிப்பு வரவில்லை. உறவினர் எப்படி இறந்தார் என்பதை வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ் ஆக வைக்கும் ஒரு காட்சி மட்டுமே சிரிக்க முடிகிறது.

பிணம் எப்படி காணாமல் போனது என்பது குறித்து கடைசி சில நிமிடங்கள் விளக்கிறார் இயக்குனர். அந்த இடங்களும், அந்த டுவிஸ்ட் மட்டுமே சாவீயில் உயிர். போதை பொருள்கள் பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையை பாதிக்கும். அதனால் பல சம்பவங்கள் நடக்கும். நீங்க என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது என்ற மெசேஜ் மட்டும் படம் தரும் ஒரே ஆறுதல்.

சாவீ - சாவு வீட்டு கதையை வெச்சு சாவடிச்சிட்டாங்கப்பா என்பது படம் பார்த்தவர்களின் கதறல்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !