நிர்வாகம் பொறுப்பல்ல
தயாரிப்பு : டி.ராதாகிருஷ்ணன்
இயக்கம் : எஸ்.கார்த்தீஸ்வரன்.
நடிப்பு : கார்த்தீஸ்வரன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீநிதி, பிளாக் பாண்டி, ஆதவன், மிருதுளா
ஒளிப்பதிவு : என்.எஸ்.ராஜேஷ்
இசை : ஸ்ரீகாந்த்தேவா
வெளியான தேதி : டிசம்பர் 5, 2025
நேரம் : 2 மணிநேரம் 09 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள், ஏமாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும் என்பதை, ஹீரோவே கெட்டவனாக மாறி மெசேஜ் சொல்லும் படம் நிர்வாகம் பொறுப்பல்ல
ஆசை வார்த்தை காண்பித்தும், கவர்ச்சி விளம்பரம் செய்தும், காதல் என்ற பெயரிலும் 4 வகை மோசடி செய்து 8 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார் ஹீரோ. அவர் போலீசில் சிக்கினாரா? எஸ்கேப் ஆனாரா என்பதுதான் நிர்வாகம் பொறுப்பல்ல கதை. இயக்குனர் எஸ்.கார்த்தீஸ்வரனே, ஹீரோவாக நடித்து சில கெட்டட்புகளில் வந்து அப்பாவி மக்களை ஏமாற்றுகிறரா். அவர் டீமில் இருப்பவர்கள் அவருக்கு உதவுகிறார்கள். முதலில் பிளாக் பாண்டி சபல புத்தியால் பணத்தை இழக்கிறார். அடுத்து கோழிப்பண்ணை வைத்து இருக்கும் லிலிங்ஸ்டன் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பல லட்சம் பணத்தை இழக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதி கூட குறைந்த விலை செல்போன் என்ற விளம்பரத்தை நம்பி ஏமாறுகிறார். கடைசியில் காதல் என்ற பெயரில் ஹீரோயின் 500 கோடியை இழக்கிறார். போலீஸ் தேடியும் மாட்டாத ஹீரோ யார்? அவர் பின்னணி என்ன? அவர் இப்படி மாறக்காரணம் என்ன என்பது பிளாஷ்பேக்.
இயக்குனரே, ஹீரோ என்பதால் தன்னை முன்னிலைப்படுத்தி, பில்டப்படுத்தி கதை எழுதியிருக்கிறார். பல கெட்டப்புகளில் வந்து மக்களை ஏமாற்றுகிறார். ஆனால் அவருக்கு அந்த கெட்அப் செட்டாகவில்லை. நடிப்பு மட்டும் சில இடங்களில் ஓகே. மக்களை அவர் ஏமாற்றும் விதம் மட்டும் நாம் அடிக்கடி செய்திகளில் பார்ப்பது. அவர் ஏன் ஏமாற்றுக்காரனாக மாறினார் என்று சொல்லப்படும் பிளாஷ்பேக் கொஞ்சம் ரசிக்க முடிகிறது.
ஹீரோயினாக வரும் மிருதுளா நடிப்பிலும் அவ்வளவு செயற்கை தனம். ஹீரோ டீமில் ஆதவன், அகல்யா உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆதவன் நடித்து கொட்டுகிறார். அகல்யாவும் டிவி சீரியல் மாதிரி நடிக்கிறார். சில சீன்களில் அவர் போடுகிற கெட்அப் இம்சை
படத்தில் உருப்படியான விஷயம் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீநிதி கம்பீரமான நடிப்பு, விசாரணைதான். அவரே ஹீரோயின் மாதிரி இருக்கிறார். அவருக்கான கிளைமாக்ஸ் டுவிஸ்ட் எதிர்பாராதது. ஏமாற்று கதை என்றாலும் ஏகப்பட்ட லாஜிக் மீறல். காதல் என்ற பெயரில் டக்கென, காதலிக்கு 50 கோடி பரிசு கொடுப்பதும், பின்னர், அவரிடம் 500 கோடி ஏமாற்றுவதும் நம்பும்படியாக இல்லை. காதல் காட்சிகளும் படு செயற்கை தனம்.
பட்ஜெட் காரணமாக பல சீன்களின் தரம் சுமாராக இருக்கிறது. குறிப்பாக, காமெடி என்ற பெயரில் வரும் வசனங்கள் போராடிக்கிறது. பைட் அதற்குமேல் காமெடியாக இருக்கிறது. ஸ்ரீகாந்த்தேவா இசை, அவரே ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார். அது மட்டும் ஓகே. மற்றபடி, பாடல்களில் ஈர்ப்பு இல்லை.
படத்தில் அவ்வப்போது ஏ.ஐ காட்சிகள் வருவது புதுமை. முதலில் இருந்து கடைசிவரை திரைக்கதை ஏனோதானோவென இருப்பதும், ஹீரோ பில்டப் ஆக பேசிக்கொண்டே இருப்பதும் செம போர். இத்தனை கோடி ஏமாற்றுபவர் போலீஸ் கமிஷனருடன் நட்பாக இருக்கிறார். பார்ட்டி கொடுக்கிறார், எளிதாக தப்பிக்கிறார். அவரை ஒரு இன்ஸ்பெக்டர் டீம் மட்டும் தேடுகிறது. என்பது போன்ற சீன்களும் சினிமாதனம். கடைசி பத்து நிமிட டுவிஸ்ட், திரைக்கதை மட்டும் ஓகே. மற்றபடி, சதுரங்க வேட்டை பாணியில் படம் பண்ண ஆசைப்பட்டு, வேட்டை ஆட முடியாமல் தவித்து இருக்கிறார் இயக்குனர் கம் ஹீரோ. படம் பார்ப்பவர்கள் இப்படிப்பட்ட மோசடிகளால் இனி ஏமாற்றாமல் இருந்தால் சரிதான். இந்த செய்தி மட்டுமே படத்தில் இருக்கும் ஒரே நல்ல விஷயம்
நிர்வாகம் பொறுப்பல்ல..... படம் பார்த்துவிட்டு திட்டினால்... 'தலைப்பை' படிக்கவும்