அங்கம்மாள்
தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்
இயக்கம் : விபின் ராதாகிருஷ்ணன்
நடிப்பு : கீதா கைலாசம், பரணி, சரண் சக்தி, தென்றல், முல்லையரசி
ஒளிப்பதிவு : அஞ்ஜாய் சாமுவேல்
இசை : முகமது மக்புல் மன்சூர்
வெளியான தேதி : டிசம்பர் 5, 2025
நேரம் : 2 மணிநேரம் 04 நிமிடம்
ரேட்டிங்: 3.25 / 5
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‛கோடித்துணி' கதை தான் ‛அங்கம்மாள்' சினிமாவாகி இருக்கிறது. டாக்டருக்கு படித்த மகன், கிராமத்தில் வசிக்கும் அம்மா அங்கம்மாளை கொஞ்சம் மாடர்னாக மாற்ற நினைக்கிறார். தனது திருமணம் பற்றி பேச, காதலி வீட்டார் வருவதால், அதுவரை ஜாக்கெட் அணியாமல் இருக்கும் அம்மா ஜாக்கெட் அணிய வேண்டும் என்று நினைக்கிறார். பல ஆண்டுகளாக தன் இஷ்டப்படி சுதந்திரமாக இருந்த அங்கம்மாள் அதற்கு சம்மதித்தாரா? குடும்பத்தில் என்னென்ன பிரச்னைகள் வருகிறது என்பதே விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய அங்கம்மாள் கதை. கீதா கைலாசம் அங்கம்மாளாகவும், அவர் மகனாக சரண் சக்தியும் நடித்து இருக்கிறார். இன்னொரு மகனாக பரணி, அவர் மனைவியாக தென்றல் வருகிறார்கள்.
கணவனை இழந்தபின் தனது உழைப்பால் இரண்டு மகன்களை வளர்த்த தைரியசாலி கிராமத்து பெண்ணாக, கொஞ்சம் கோபக்கார, கொஞ்சம் நக்கல் பேர்வழியாக, அவ்வப்போது சுருட்டுபிடிப்பவராக, சில சமயம் கெட்ட வார்த்தை பேசுபவராக, மோட்டார் சைக்களில் பால் வியாபாரம் செய்பவராக 'அங்கம்மாள்' காண்பிக்கப்படுகிறார். அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார் கீதாகைலாசம் எனலாம். அவருக்கு நிறைய விருதுகள் கிடைக்க வாய்ப்பு. பல சீன்களில் ஓவர் ஆக்டிங் காண்பிக்காமல், பொங்கி அழாமல், ரொம்பவே உணர்ச்சிவசப்படாமல், ஒருவித தைரியத்துடன் கம்பீரமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து பெண்ணாக இருந்தாலும், வயதானவராக இருந்தாலும் அவருக்கான சில கொள்கை இருக்கிறது. அவருக்கான சில நடைமுறை இருக்கிறது. என் உரிமை, என் சுதந்திரம் என இருக்கும் அவர்கள் விருப்பு, வெறுப்பில் தலையிட குடும்ப உறுப்பினர்களுக்கு கூட அனுமதி இல்லை என்ற ரீதியில் நகரும் அங்கம்மாள் கேரக்டரும் மனதில் நிற்கிறது. பெண்ணியம் பேசும் மாறுபட்ட கதை இது என்று கூட சொல்லலாம். பல பெண்களை சுற்றியே கதையும் நகர்கிறது.
அங்கம்மாள் மூத்த மகனாக வரும் பரணி அதிகம் பேசாமல், நாதஸ்வரம் வாசித்தபடி தனது உணர்வுகளை சொல்லியிருக்கிறார். பல வீடுகளில் பார்க்கும் நிஜ மருமகள்களை தனது நடிப்பால் கொண்டு வந்து இருக்கிறார் அவர் மனைவியாக நடித்த தென்றல், அவரின் கெட்அப், அத்தைக்கு பயப்படும் நடிப்பு, இயல்பான வசனங்கள், அந்த சண்டை, அழுகை சூப்பர்.
டாக்டராக வரும் சரண் சக்தி எந்த சீனிலும் டாக்டர் மாதிரி இல்லை. ஆனாலும், அம்மாவை மாற்ற நினைக்கும் மகனாக, பாசக்கார, அவருக்கு பயப்படுகிற மகனாக வருகிறார். அங்கம்மாள் பேத்தி யாஸ்மினும் சில சீன்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். சிறுகதை என்பதால் பல சுவாரஸ்ய கேரக்டர்கள் படத்தில் வருகின்றன. குறிப்பாக, அங்கம்மாள் முன்னாள் காதலன் போல வரும் அந்த மீசைக்காரர் வரும் சீன்கள், அவர் பேசும் சில வசனங்கள் பிரமாதம். தவிர, டாக்டர் மகனின் காதலி முல்லையரசி, அவர் குடும்பத்தினர், கிராமத்து பெரிய மனிதர், அங்கம்மாளின் தோழிகள், அவர்களின் கேரக்டர் பின்னணி, கிராமத்து மனிதர்களுக்கே உரிய நையாண்டி பேச்சுகள் அருமை
நிஜ கதை வேறு பின்னணியில் நடந்தாலும் படத்தை நெல்லை மாவட்ட பின்னணியில் எடுத்து இருக்கிறார் இயக்குனர். அதற்கேற்ப வட்டார மொழி கலந்து வசனங்களை கிராமத்து பேச்சு நடையில் பக்காவாக எழுதியிருக்கிறார் சுதாகர்தாஸ். பெண்கள் தங்களுக்குள் பேசும் அந்த கிண்டல் நடை சிறப்பு. என்ன, அங்கம்மாள் பேசும் ஒன்றிரண்டு கெட்டவார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம். 1990களில் நடக்கும் கதை, அழகிய தென் மாவட்ட கிராமம், அங்கு வசிக்கும் மக்கள், அவர்களின் பின்னணி, மலை, வயல் என அனைத்தையும் ஒரு அழகியலுடன் காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஞ்ஜாய் சாமுவேல். முகமது மக்புல் மன்சூர் இசையும் கதையோடு ஒன்றி இருக்கிறது. கோபி கருணாநிதியின் ஆர்ட் டைரக்டர் அந்த கால கிராமத்தை, தெருக்களை, வீடுகளை கண்முன்னே கொண்டு வந்துள்ளது. கிளைமாக்ஸ் இன்னும் எளிமையாக அல்லது அழுத்தமாக எடுத்து இருக்கலாம். சில இடங்களில் கதை மெதுவாக நடக்கிறது. ஒரே இடத்தை சுற்றி வருகிறது என்பது போன்ற குறைகளும் இருக்கின்றன.
தனது பேத்திக்கு அங்கம்மாள் பச்சை குத்த ஆசைப்படுவதில் இருந்து, உச்சிமலை காற்றின் வீரியத்தை விவரிப்பதில் இருந்து கதை தொடங்குகிறது. அதே பேத்தியின் வசனம், உச்சிமலை காற்றுடன் படமும் முடிகிறது. சிறுகதை மாதிரியே இப்படி பல சீன்களை ரசித்து, கலைநயத்துடன் எடுத்து இ ருக்கிறார் இயக்குனர். அங்கம்மாள் என்ற வயதான பெண், அவர் மருமகள், வருங்கால மருமகள், பேத்தி, கிராமத்து பெண்கள் என பலரின் மனநிலை, உணர்வுகள், குடும்பம் குறித்த அவர்களின் பார்வை சொன்ன விதமும் அருமை. குறிப்பாக, கிராமத்து மனிதர்களின் நுட்பமான உணர்வுகளை, அவர்களின் நாடகத்தனம் இல்லாத வாழ்க்கையை, வெள்ளந்தியான பேச்சுகளை இயல்பாக சொல்லும் இப்படிப்பட்ட படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என்ற எண்ணம் அங்கம்மாள் பார்க்கும்போது வருகிறது.
அங்கம்மாள்... 1990 கால கட்டத்தில் ஒரு கிராமத்துக்கு சென்று வந்த உணர்வை தரும், பெண்ணியம் பேசும் தங்கம்மாள்!