வாசகர்கள் கருத்துகள் (1)
இந்த மாதிரி feel good movies ஏன் இரண்டு நாட்கள் கூட ஓட மாட்டேங்குது....
தயாரிப்பு: கோவை பிலிம் பேக்டரி
இயக்கம்: ஹரி மகாதேவன்
நடிப்பு: பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், டெல்லி கணேஷ், அஸ்வின் ஜெயப்பிரகாஷ்
இசை: கிளிபி கிறிஸ், ஆனந்த் காசிநாத்
வெளியான தேதி: நவம்பர் 21, 2025
நேரம்: 2 மணி 16 நிமிடங்கள்
ரேட்டிங்: 3 / 5
'ஸ்டீரியோ டைப்' திரைப்படங்களைத் தாண்டிய திரையுலகின் புதிய பாதையாக நகர்கிறது இந்த யெல்லோ. ஆதிரையாக வரும் கதாநாயகி பூர்ணிமா ரவி, பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில், உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பில் அசத்துகிறார். குறிப்பாக தனது காதலன் வேறொரு பெண்ணை திருமணம் முடித்து அவர்களை தம்பதிகளாய் சந்திக்கும் சமயம் அவர்களுடன் பேசும் போதும், திரும்பி நடந்து செல்லும் போதும் ஆதிரை காட்டும் அந்த உணர்வு, வீடு வரை நம்மை பின் தொடர்கிறது.
40 வருடங்கள் இடைவேளையில்லாமல் உழைத்து பக்கவாதத்தில் படுத்துவிடும் அப்பாவின் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுச் சுமக்கிறாள் ஆதிரை. உயர்கல்வி, அதற்கேற்ற வேலை என வேறொரு உலகைத் தேடி நகரும் சந்தோஷுக்கும் (சாய் பிரசன்னா) ஆதிக்குமான காதல், ஒரு சந்தர்ப்பத்தில் சுக்குநூறாக உடைகிறது. அந்த காயத்தில் இருக்கும் ஆதிரைக்கு அப்பாவின் அனுபவ வார்த்தைகள், தோழனாய் தோல் கொடுக்கிறது.
பின்னர், தன் ஆன்மத் தேடல் பயணத்தை தொடர்கிறாள் ஆதிரை. மார்த்தாண்டத்தில் உள்ள தனது பால்யத் தோழிகளை சந்தித்து திரும்பும் நோக்கில் அவர் மேற்கொள்கிறார். அப்பயணத்தில் அவள் சந்திக்கும் நபர்களெல்லாம் யார், காதல் தோல்வியில் இருந்து விடுபடதான் அவர் பயணிக்கிறாரா, இதில் இருந்து அவள் கண்டறிந்தது என்ன என்பதே இப்படத்தின் கதை.
கதாநாயகன் சாய் (வைபவ் முருகேசன்) நம் வாழ்வில் இப்படி ஒரு நண்பன் கிடைக்க மாட்டானா என ஏங்க வைக்கும் பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் டெல்லி கணேஷ், வினோதினி, லீலா சாம்சன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆங்காங்கே வந்தாலும் அழுத்தம். “நமக்காக அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் ஏராளம்”, “புடிச்சு கஷ்டப்படுவதை விட நிம்மதியான விஷயம் வேற எதுவுமே கிடையாது”, “அடுத்தவங்கள கஷ்டப்படுத்தாத சின்னச் சின்ன தப்புதான் நம்மள நாமளா இருக்க விடுது” போன்ற சில வசனங்கள் ரசிக்க வைக்கிறது.
அபிஅத்விகின் கேமரா, பயணத்தை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அற்புதம். ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு மட்டுமல்ல மனதுக்கும் இதமளிக்கிறது. இயற்கையின் அழகியலை திகட்ட திகட்ட பருகிய திருப்தி. கிளிபி கிறிஸ்-ன் பாடல்களும், ஆனந்த் காசிநாத் பின்னணி இசையும் மனதோடு வருடுகிறது. மொத்தத்தில் இயற்கை அன்னையின் மடியில் நம்மை அமர வைத்து அறுசுவை விருந்து பரிமாறி இருக்கிறார் இயக்குனர் ஹரி மகாதேவன்.
படம் முழுவதும் இயற்கை, வானம், நட்சத்திரங்கள் எல்லாவற்றுக்கும் மேலாய் வானவில் நம் வாழ்வோடு இணைந்து வருவதை வண்ணமயமாய் காட்டி இருப்பது பேரழகு.
“யெல்லோ” - இயற்கையின் அழகில் ஏழு நிறங்களில், இனி 'யெல்லோ' சற்று பளீரென தெரியக்கூடும்
இந்த மாதிரி feel good movies ஏன் இரண்டு நாட்கள் கூட ஓட மாட்டேங்குது....