வெள்ளகுதிர
தயாரிப்பு: நிஜம் சினிமா
இயக்கம்: சரண்ராஜ் செந்தில்குமார்
நடிப்பு: ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ், மெலோடி, ரெஜின் ரோஸ், உதிரி விஜயகுமார், ஜீவிதா
இசை: பரத் ஆசீவகன்
ஒளிப்பதிவு : ராம்தேவ்
வெளியான தேதி: நவம்பர் 28, 2025
நேரம்: 2 மணி 05 நிமிடங்கள்
ரேட்டிங்: 3
கடன் பிரச்னை, சூழ்நிலை காரணமாக நகரத்தில் ஒரு சம்பவம் செய்துவிட்டு, போலீசுக்கு பயந்து மனைவி, மகனுடன் தனது சொந்த மலைகிராமத்தில் அடைக்கலம் ஆகிறார் ஹீரோ ஹரிஷ் ஓரி. அங்கே இருக்கும் கிராம மக்களோ பிழைப்பு தேடி மலையில் இருந்து கீழே இறங்குகிறார்கள். அந்த கிராம முன்னாள் ஊராட்சி தலைவர் அந்த மக்களின் நிலங்களை ஏமாற்றி அபகரிக்கிறார். இதற்கிடையில் 'மூலிகை ரசம்' என்ற சாராயம் காய்ச்சும் தொழில்முறையை அறிந்து கொண்ட ஹீரோவும், நண்பர்களும் அதை ரகசியமாக விற்க ஆரம்பிக்கிறார்கள். அதனால் என்ன பிரச்னை ஏற்படுகிறது. போலீஸ் பிடியில் அவர்கள் சிக்கினார்களா? முன்னாள் ஊராட்சி தலைவரின் சூழ்ச்சியை அறிந்த கிராம மக்கள் என்ன செய்கிறார்கள்? அந்த மலை கிராமத்துக்கு ரோடு வசதி வந்ததா? என்பது 'வெள்ளகுதிர' படத்தின் கரு. காக்காமுட்டை மணிகண்டன் உதவியாளர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி இருக்கிறார்.
மலைகிராமங்கள், அந்த மக்களின் பிரச்னைகள், அவர்களின் வாழ்க்கை முறை குறித்து எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் வெள்ளகுதிர அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது. பேராசை பிடித்த, பணம் சம்பாதிக்கிற ஆசைப்படுகிற, கெட்டவனான ஹரிஷ் ஓரியின் குடும்பத்தலைவனின் வாழ்க்கை, அதனால், ஏற்படும் பிரச்னைகளை பேசுகிறது. கூடவே, மலைகிராம மக்களை காலி செய்துவிட்டு, அந்த நிலங்களை அபகரிக்க நினைக்கிற ஒரு வில்லன் உதிரி விஜயகுமாரின் தந்திரங்களை விவரிக்கிறது. இதை ஹீரோ மனைவியான அபிராமி போஸ், இப்போதைய ஊராட்சி த லைவரான மெலோடி எப்படி தடுக்கிறார்கள். அதனால் எந்த மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்ற கோணத்தில் கதை செல்கிறது.
திக்கி, திக்கி பேசுபவராக, குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவராக வரும் ஹீரோ ஹரிஷ் ஓரி கூத்துபட்டறைகாரர். ஆகவே அவர் உடல்மொழி பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் மனைவியாக வரும் அபிராமி போஸ், புனே திரைப்பட கல்லுாரியில் படித்தவராம். அவரும் தன் பங்கிற்கு பல சீன்களில் முத்திரை பதித்து இருக்கிறார். ஊராட்சி தலைவராக வரும் மெலோடி நடிக்கவில்லை, நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு போராளியாக வாழ்ந்து இருக்கிறார். அவரும் டில்லி நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் படித்தவர். ஆகவே, இவர்களின் நடிப்பு, டயலாக் டெலிவரி அவ்வளவு பெர்பக்சன்.
உதிரி விஜயகுமார் அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வில்லத்தனம் காண்பிக்கிறார். இவர்களை தவிர, முருகனாக வரும் ரெஜின், சாராயம் காய்ச்சும் பெரியவர், மருத்துவம் பார்க்கும் பெண், போஸ்ட் ஆபீசில் வேலை செய்யும் ஜீவிதா, ஊர் மக்கள் என பலரும், நிஜ வாழ்க்கையை, அந்த மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறார்கள். படத்தில் வரும் பெரும்பாலான சீன்கள் சினிமா மாதிரி இல்லாமல் ஒரு மலை கிராம மக்களின் பதிவாக காண்பிக்கப்பட்டு இருப்பதும், வசனங்கள் வெகு இயல்பாக இருப்பதும் படத்தை பீல் குட் மூவி ஆக்கி இருக்கிறது. பரத் இசை, ராம்தேவ் ஒளிப்பதிவு மாலை நேர மலைக்காற்று மாதிரி குளுமை. ஹீரோயிசம் இல்லாத கிளைமாக்ஸ் கூட நேர்த்தி.
படத்தில் ஒரு திருமணம் வருகிறது, வெள்ளகுதிர பின்னணி பற்றி ஒரு தாத்தா விவரிக்கிறார். ஊரை விட்டு ஒரு குடும்பம் காலி செய்கிறது. அதெல்லாம் அவ்வளவு எதார்த்தம், ஒரு வித பிரஷ். இப்படி பல சீன்கள். மூலிகை ரசம் பற்றிய காட்சிகள் புதிது. ஹீரோ மகனின் பார்வை, கேள்விகள் பல விடைகளை சொல்கிறது. வணிக சமரசங்கள், சண்டை, ஆடல் பாடல் காமெடி இல்லை. கொஞ்சம் மெதுவாக கதை நகர்கிறது என்பது போன்ற குறைகள் இருந்தாலும், புதியவர்கள் உருவாக்கிய இந்த புதிய முயற்சி, புதிய கதைக்களம், நம் மனதில் நிற்கிறது.
மலைகிராம மக்களின் நிலை எப்படி இருக்கிறது. அவர்கள் எப்படி சுரண்டப்பட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு சாலை உள்ளிட்ட வசதிகள் தேவை. அந்த மனிதர்களின் மனசு வெள்ளை, அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மலைகிராமங்கள் அழிந்துவிடக்கூடாது என்ற இயக்குனரின் குரல், ஒரு சில மனிதர்களின் குணம், வாழ்க்கையை சொல்லும் வெள்ளகுதிர மனதிற்குள் நல்ல நினைவுகளாய் வேகமாக ஓடுகிறது.
வெள்ளகுதிர - ஒரு மலைகிராமத்துக்கு சென்று அந்த வாழ்வியலை பார்க்கும் உணர்வு