உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / தேரே இஷ்க் மே

தேரே இஷ்க் மே

தயாரிப்பு: டி.சீரிஸ், கலர் யெல்லா புரடக்ஷன்
இயக்கம்: ஆனந்த் எல் ராய்
நடிப்பு: தனுஷ், கிர்த்தி சனோன், பிரகாஷ்ராஜ், டோட்டாராய் சவுத்ரி
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : துஷார் காந்தி ராய்
வெளியான தேதி: நவம்பர் 28, 2025
நேரம்: 2 மணி 49 நிமிடங்கள்
ரேட்டிங்: 2.5

டில்லி பல்கலைக்கழகத்தில் வன்முறை குணம், அடிதடி, போலீஸ் கேஸ் என அடாவடி ஸ்டண்ட் ஆக இருக்கும் தனுசை, அங்கே வன்முறையை மாற்ற நினைக்கும் சப்ஜெக்ட்டில் பி.எச்டிக்காக ஆராய்ச்சி செய்யும் கிர்த்தி சனோன் காதலிக்கிறார். ஐஏஎஸ் ஆபீசரான கிர்த்தியின் அப்பா தனுசை அவமானப்படுத்துகிறார். என்னை மாதிரி நீ உயர் பதவிக்கு வா, அப்புறம் பேசலாம் என திருப்பி அனுப்புகிறார். கஷ்டப்பட்டு ஐஏஎஸ் முதல்நிலை தேர்வில் பாஸ் ஆகி, காதலி கிர்த்தி சனோனை பார்க்க வருகிறார் தனுஷ். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தனுஷ் என்ன முடிவெடுத்தார்? பிற்காலத்தில் இந்திய விமானப்படையில் பைலட்டாக இருக்கும் தனுசை தேடி கிர்த்தி சனோன் ஏன் செல்கிறார்? போர்சூழலில் தனுஷ், கிர்த்தி சனோன் வாழ்க்கை எப்படி மாறுகிறது? அவர்கள் பார்வையில் காதல் எப்படிப்பட்டது என்பதை சொல்லும் படம் தேரே இஷ்க் மே (உன் காதலில் என அர்த்தம்). ஆனந்த் எல்.ராய் இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்பு தனுஷ் நடித்த 'ராஞ்சனா' என்ற ஹிந்தி படத்தை இயக்கியவர். ஹிந்தி படம் என்றாலும் 'தேரே இஷ்க் மே' தமிழிலும் டப்பாகி இருக்கிறது.

காஷ்மீரில் இந்திய விமான படை பைலட்டாக இருக்கும் தனுஷ் மீது அவரின் கோபம், வேறு சில விஷயங்கள் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட, அவர் சரியான மனநிலையில் இருக்கிறாரா என்ற விசாரித்து சர்ட்டிபிகேட் கொடுக்கும் பணி டில்லியில் இருக்கும் கிர்த்தி சனோனுக்கு வருகிறது. கர்ப்பிணியான, குடிக்கு அடிமையான கிர்த்தி சனோனுக்கு பழைய விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. தனுஷ் சம்பந்தப்பட்ட காதல் பிளாஷ்பேக்கில் விரிகிறது. அதில் காதல் சிக்கல்கள், பிரச்னைகள் பேசப்படுகின்றன. உடனே அவர் காஷ்மீருக்கு புறப்பட்டு போய் தனுசை சந்திக்கிறார். அடுத்து நடக்கும் விஷயங்கள் உணர்வு பூர்வமானவை. படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் இது வழக்கமான கலர்புல் காதல் கதை, காமெடி கதை இல்லை என்பதையும், உணர்ச்சி பூர்வமான, இன்னும் சொல்லப்போனால் இலக்கணத்தை மீறிய காதல்கதை என்பதை புரிய வைக்கிறது. காரணம், திருமணமாகி, வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் ஹீரோயின் காதலனை தேடி செல்கிறார்.

கோபக்கார கல்லுாரி மாணவன், குறும்புகார காதலன், காதலில் தோல்வி அடைந்த இளைஞன், உணர்ச்சிகரமான விமானப்படை பைலட் என பல்வேறு படிகளில் நடித்து இருக்கிறார் தனுஷ். துறுதுறுப்பான காட்சிகளை விட, உணர்ச்சி பூர்வமான காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். காதல் தோல்வி, காதலியை மீண்டும் பார்க்கிற இடங்களில் நான் தேசியவிருது வாங்கிய நடிகன் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார். பல இடங்களில் உணர்ச்சி கொதிப்பில் கலக்கி இருக்கிறார். தனுஷ் சம்பந்தப்பட்ட காசி நகர் சீன்கள், அங்கே அவருக்கு நடக்கிற விஷயங்கள், ஒரு புரோகிதர் பேசும் தத்துவம்... அடடா! விமானப்படை விஷயங்கள், போர் சூழல், கிளைமாக்ஸ் கொஞ்சம் சினிமாத்தனம். ஒரு அழுத்தமான காதல் கதைக்கு இந்த கிளைமாக்ஸ் மைனஸ் மாதிரி தெரிகிறது.

தனுசை சில இடங்களில் மிஞ்சுகிறார் ஹீரோயின் கிர்த்தி சனோன். காதல் முறியும் இடங்களில், மீண்டும் பல ஆண்டுகள் கழித்து காதலனை பார்க்கும் இடங்களில், அப்புறம், கிளைமாக்சில் குடிகார கர்ப்பிணி பெண்ணாக துாள் கிளப்பி இருக்கிறார். அவர் கேரக்டர் பின்னணி, அவரின் செயல்பாடுகள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் படத்துக்கு அவர் நடிப்பு அவ்வளவு பலம். தனுஷ் அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ் வழக்கம்போல் ஓவர் ஆக்டிங். அதேசமயம், ஹீரோயின் அப்பாவாக வரும் டோட்டாராய் சவுத்ரி ஒரு ஸ்டைலிஷ் ஆன ஐஏஎஸ் ஆபீசராக, பல கேள்விகள் கேட்கும் அப்பாவாக மனதில் நிற்கிறார். காசியில் வரும் அந்த புரோகிதர் கேரக்டருக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ். ஆனந்த் எல் ராய் இயக்கிய 'ராஞ்சனா' படம் பார்த்தவர்களுக்கு அது புரியும். விமானப்படை அதிகாரியாக வருபவரும் இயல்பை மீறி நடித்து கொட்டுகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஹிந்திக்கு செட்டாகி இருக்கிறது. தமிழில் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. சீரியசான காதல் கதை என்பதால், துள்ளல் பாடல்கள், மெலோடியும் குறைவு. முதற்பாதி மெதுவாக, பிற்பாதி வேகமாக நகர்கிறது. ஆனாலும் பெரும்பாலான கதை தனுஷ், கிர்த்தியை சுற்றியே நகர்வதும் மைனஸ். 2 மணி நேர 49 நிமிடம் படம் என்பது இன்னும் மைனஸ். இரண்டாம் பாதியில் வரும் காதல் சம்பந்தப்பட்ட வசனங்கள், இருவரின் உணச்சிவசப்பட்ட நடிப்பு இது. ஆனந்த் எல் ராய் படம் என சொல்லாமல் சொல்கிறது. யுபிஎஸ்சி படிப்பு, தேர்வு இதெல்லாம் நாடகத்தனம்.

காதல் கதைதான், ஆனாலும், வேறுவகை காதல் கதை. காதலுக்காக ஹீரோ செய்கிற விஷயத்தை, காதலுக்காக ஹீரோயின் எடுக்கிற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்பவர்களுக்கு படம் பிடிக்கும். இளைஞர்கள் ரசிக்கலாம். இதென்ன அபத்தம் என்று நினைத்தால் படம் போரடிக்கும். நிறைய குறைகள் கண்ணுக்கு தென்படும், ஹிந்தி படம் என்பதால், அந்த ரசிகர்கள், அவர்கள் கலாச்சாரம், அந்த ஸ்டைலில் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதெல்லாம் தமிழ் ரசிகர்களுக்கு அன்னியமாக தெரியலாம். இந்த கதைக்கு விமானப்படை விஷயங்கள், போர், வியூகம், ஏவுகனை இதெல்லாம் சுத்தமாக செட்டாகவில்லை. அதிலும் கிளைமாக்ஸ் ஒட்டவே இல்லை. ஏன் இவர்கள் பிரிந்தார்கள், ஏன் சேர துடிக்கிறார் ஹீரோயின். அவர் ஆசை ஆகியவை நுட்பமான விஷயங்கள். அதை புரிந்தால் படத்தை ரசிக்கலாம். இல்லாவிட்டால், இது என்ன கதை என்ற மனநிலை ஏற்படும்.

இன்னொருவரின் மனைவி, அதிலும் கர்ப்பிணி மனைவியின் காதல், அவர் சொல்கிற விஷயங்கள் ஹிந்திக்கு செட்டாகலாம். தமிழில் இப்படிப்பட்ட கதைகளுக்கு வரவேற்பு கிடைப்பது கஷ்டம். ஹீரோயின் கிர்த்தி, முதற்பாதியில் கேஷூவலாக சிகரெட் பிடிக்கிறார். பார்ட்டியில் சரக்கு அடிக்கிறார். பிற்பாதியில் முழுநேரம் குடிக்கும் நபராக இருக்கிறார். இதெல்லாம் தமிழுக்கு பொருந்தாத விஷயங்கள். தனுசிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கிற விஷயங்கள், கமர்ஷியல் விஷயங்கள் கதையில் குறைவு. ஒரு மாறுபட்ட காதலை, தனுஷ், கிர்த்தி சனோன் நடிப்பை ரசிப்பவர்களுக்கு மட்டும் படம் பிடிக்கும்.

தேரே இஷ்க் மே - ஹிந்தியில் ரசிக்கலாம். தமிழில் தனுஷ் ரசிகர்களே ரசிப்பார்களா என தெரியலை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2025-12-01 08:24:40

ஹீரோ பிரதீப் ரங்கநாதன் மாதிரி இருக்கான்.. Field ku புதுசா