ஐபிஎல்
தயாரிப்பு: ராதா பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம்: கருணாநிதி
நடிப்பு: டிடிஎப் வாசன், கிஷோர், அபிராமி, போஸ் வெங்கட், குஷிதா, ஜான் விஜய்
இசை: அஷ்வின் விநாயகமூர்த்தி
ஒளிப்பதிவு : பிச்சுமணி
வெளியான தேதி: நவம்பர் 28, 2025
நேரம்: 2 மணி 08 நிமிடங்கள்
ரேட்டிங்: 2
மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டரான போஸ் வெங்கட், தான் லஞ்சம் வாங்குவதை ஒரு இளைஞன் வீடியோ எடுத்ததாக சந்தேகப்பட்டு, அவனை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்குகிறார். லாக்அப்பில் அவன் இறக்கிறான். அப்போது அவன் செல்போனில் ஒரு உயர் பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதி சம்பந்தப்பட்ட சர்ச்சை வீடியோ இருப்பதை பார்த்து அதிர்கிறார். பல திரைமறைவு அரசியல் டீலிங் நடக்கிறது. அந்த லாக்அப் மரணத்துக்கு காரணமானவர் என பொய் குற்றச்சாட்டு சுமத்தி, கால் டாக்சி ஓட்டும் கிஷோரை கைது செய்கிறது போலீஸ்.
அந்த உயர் அரசியல்வாதி பிரஷர் காரணமாக, அவரை அடித்து துன்புறுத்தி பொய் வாக்குமூலம் வாங்கி, கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். கிஷோர் தங்கையை காதலிக்கும் ஹீரோ டிடிஎப் வாசன் அந்த இளைஞன் மரணம், அந்த வீடியோ உண்மைகளை கண்டறிந்து, அதை கோர்ட்டில் காண்பித்து நீதியை நிலை நாட்டினாரா? ,கிஷோரை காப்பாற்றினாரா? அந்த வீடியோவில் இருந்தது என்ன என்பது ஐபிஎல்(இந்தியன் பீனல் லா) படக்கதை. புதியவரான கருணாநிதி இயக்கி இருக்கிறார்.
லாக்அப் மரணங்கள், கடந்த ஆட்சியில் தமிழகத்தை உலுக்கிய சில அரசியல் நிகழ்வுகள் இரண்டையும் கருவாக எடுத்து, நிறைய கற்பனை மிக்ஸ் செய்து ஒரு போலீஸ் கதையை எடுத்து இருக்கிறார் இயக்குனர். அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள் நினைத்தால் எதையும் செய்வார்கள். அவர்களால் சாமான்ய மக்களை எப்படி வேண்டுமானாலும் டார்ச்சர் செய்ய முடியும் என்பது படத்தின் கரு.
டிடிஎப் வாசன் ஹீரோ என்றாலும், கதைநாயகன் கிஷோர்தான். படத்தின் அதிக சீன்களில் வருவதும், பல இடங்களில் நடிப்பால் ஸ்கோர் செய்வதும் கிஷோர்தான். போலீஸ் விசாரணையில் அவர் துன்புறுத்தப்படுவது கலங்க வைக்கிறது. குடும்பம் டார்ச்சர் செய்யப்படுவதை பார்த்து அவர் தவிக்கிற சீன்கள், கோர்ட்டில் தன் மீதான தாக்குதல் குறித்து விளக்குகிற இடங்கள் படத்தில் முக்கியமானவை. ஆனாலும், ஏனோ அவர் மீது அதிக இரக்கம் வர மறுக்கிறது. அவ்வளவு செயற்கைதனமான பின்னணி.
ஒன்றிரண்டு சீன்களில் புட் டெலிவரி பாய் ஆக வரும் டிடிஎப் வாசன், 'டிராபிக் ரூல்ஸை மதிக்கணும்' என்ற வசனத்துடன் அறிமுகம் ஆவது நகைமுரண். காதல் காட்சிகளில், டான்ஸ் காட்சிகளில் அவர் நடிப்பு ஓகே. கிளைமாக்சுக்கு முன்பு ஒரு பைக் ரேஸ் சண்டைக்காட்சியில் வேகத்தை காண்பிக்கிறார். மற்றபடி, நடிப்பில் பாஸ் மார்க் வாங்கவே திணறுகிறார், நிறைய சீன்களில் சரியான உணர்ச்சிகளை காண்பிக்காமல் அப்படியே நிற்கிறார்.
கிஷோர் மனைவியாக வரும் அபிராமி போலீஸ் டார்ச்சர் காட்சிகளில் பதற வைக்கிறார். கொடூர மனம் படைத்த போலீஸ் ஆக வருகிறார் போஸ் வெங்கட். ஒரு சில சீன்களில் வந்து போகிறார் சிங்கம்புலி. வழக்கமான மோசமான போலீஸ் எஸ்பியாக ஹரீஷ் பெராடியும், நேர்மையான போலீஸ் எஸ்பியாக திலீபனும் சில இடங்களில் ஸ்கோர் செய்கிறார். முதல்வராக ஆடுகளம் நரேன் வந்தாலும், அவரை வேறு மாதிரி ட்ரீட்மென்ட் பண்ணுகிற அந்த இளம் பெண் அரசியல் தலைவர் கேரக்டர் பல கடந்தகால சம்பவங்களை, மறைந்த பவர்புல் பெண் அரசியல்வாதிகளை நினைப்படுத்துகிறது.
நரேன் கேரக்டர், அவர் செயல்பாடுகள் முந்தைய ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில், திரைக்கதையை அமைத்து இருக்கிறார் இயக்குனர் கருணாநிதி. ஆனாலும், அதை முழுமையாக, தெளிவாக சொல்லவில்லை என்பது ஏமாற்றம். படம் முழுக்க நெகட்டிவ் கேரக்டர், நெகட்டிவ் விஷயங்கள் ஆக்கிரமத்து இருப்பது படத்தை பின்னோக்கி இழுக்கிறது. இசை, ஒளிப்பதிவில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. அதிலும் ஜான்விஜய், போலீஸ் சித்ரவதை சீன்கள் முகம் சுளிக்க வைக்கிறது.
படத்தின் பெரும்பாலான இடங்களில் போலீஸ் டார்ச்சர் செய்து கொண்டு இருக்கிறார்கள். கிஷோர் கஷ்டப்பட்டுக்கொண்டே, அவமானப்பட்டுக்கொண்டே இருக்கிறார். விசாரணை படத்தை சில சீன்கள் நினைவுப்படுத்துகின்றன. டிடிஎப் வாசன் கேரக்டரிலும், நடிப்பிலும் புதுசாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நிஜத்தில் அவர் டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிலையில், பைக் ரேஸ் காட்சியில் எப்படி நடித்தார் என்று புரியவில்லை.
சில அரசியல் ரகசியங்களை, லாக்அப் மரணங்களை சினிமா மூலம் வெளிப்படுத்த நினைத்த இயக்குனர், அதை சொதப்பி இருக்கிறார். சீன்கள் கோர்வையாக இல்லாமல், கதையை குழப்புகிறது. கிளைமாக்ஸ், ஒன்றிண்டு இடங்கள் தவிர, பல இடங்களில் படம் போரடிக்கிறது. இந்த படத்தில் என்ன பிளஸ் என்று ரொம்ப நேரம் யோசித்தாலும் விடை இல்லை.
ஐபிஎல் - நிரபராதிகளுக்கு கொடுக்கும் தண்டனை, சித்ரவதைகளை பேசும் கதை. உண்மையில் சித்ரவதை படுவது படம் பார்ப்பவர்கள்தான்