ஒண்டிமுனியும் நல்லபாடனும்
தயாரிப்பு : கருப்பசாமி
இயக்கம் : சுகவனம்.ஆர்
நடிப்பு : பரோட்டோ முருகேசன், விஜயன், வித்யா சக்திவேல், சித்ரா நாகராஜன், விஜய் சேனாதிபதி
இசை : நடராஜன் சங்கரன்
ஒளிப்பதிவு : ஜே.டி.விமல்
வெளியான தேதி : நவம்பர் 28, 2025
நேரம் : 2 மணிநேரம் 01 நிமிடம்
ரேட்டிங் : 3.5 / 5
தனது மகன் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடும்போது , தனது குல தெய்வமான ஒண்டிமுனியிடம் 'என் மகனை பிழைக்க வைத்தால் இந்த ஆட்டை பலி கொடுக்கிறேன்' என்ற கண்ணீருடன் வேண்டுகிறார் ஏழை விவசாய தொழியாளியான பரோட்டோ முருகேசன். மகன் பிழைக்க, அந்த கிடாயை கோயிலுக்காக வளர்க்கிறார். ஆண்டுகள் ஓடினாலும், இரண்டு பண்ணையார்கள் ஈகோ பிரச்னையால் ஒண்டிமுனி கோயிலுக்கு திருவிழா நடத்த முடியாத நிலை. தனது வறுமையிலும் கிடாயை வேண்டுதலுக்காக பாதுகாக்கிறார். ஆனால், பணத்துக்காக அந்த ஆட்டை விற்க நினைக்கிறார்கள் முருகேசன் மகனும், மருமகனும். தடைகளை தாண்டி ஒண்டிமுனிக்கு திருவிழா நடந்ததா? ஆடு பலி ஆகி விருந்து ஆனதா? என்பதை கொங்கு கிராம பின்னணியில் ஒரு சிறுகதை மாதிரியான பீல் குட் முவீயாக சொல்கிறது ஒண்டிமுனியும் நல்லபாடனும். சுகவனம்.ஆர் இயக்கி இருக்கிறார். நல்ல பாடன் என்பது கதைநாயகன் பரோட்டா முருகேசன் கேரக்டர் பெயர்.
கொங்கு கிராமத்து வட்டார மக்களின் வாழ்வியல், அங்கே நிலவும் பாகுபாடுகள், நில சுரண்டல்கள், விவசாய தொழிலாளிகளின் அவலங்கள், ஒரு குடும்ப தலைவனின் தவிப்புகளை ஒரு ஆடு பின்னணியில் விவரிக்கிறது இந்த கதை. சினிமாதனம், ஹீரோயிசம், ஓவர் பில்டப் இல்லாமல் ஒரு ஈரானிய படம் மாதிரி காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். பரோட்டோ காமெடியில் சூரிக்கு பரோட்டோ சப்ளை செய்பவராக நடித்த முருகேசன் தான் இந்த படத்தின் கதைநாயகன். நல்ல பாடன் என்ற கேரக்டராகவே வாழ்ந்து இருக்கும் அவருக்கு பல விருதுகள் நிச்சயம்.
மிக இயல்பான வட்டார பேச்சு, கிராமத்து விவசாயி கூலிகளுக்கான உடல்மொழி, வறுமையில், குடும்ப கஷ்டத்தில் அவர் படுகிற பாடு, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குல தெய்வத்துக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்கிற மனஉறுதி, கோயில் திருவிழா நடத்த முடியாமல் கலங்குவது, ஆட்டை காணாமல் தவிப்பது என படம் முழுக்க அவரின் பங்கு அதிகம். இப்படியெல்லாம் ஒரு கேரக்டரை தமிழில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் மகளாக வருகிற சித்ரா நாகராஜன், மகன் விஜயன், மருமகன் விஜய் சேனாதிபதி, மகனின் காதலி வித்யா, எதிரிகளாக இருக்கும் இரண்டு பண்ணையார்கள், அவர்களின் மனைவி, பேரன் என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் மிகைப்படுத்தல் இல்லாத நடிப்பில் மனதில் நிற்கிறார்கள். அப்புறம், அந்த ஆடும் பல சீன்களில் ஸ்கோர் செய்து இருக்கிறது.
கொங்கு கிராமப்புறங்களின் நிலையை, விவசாய தொழிலாளிகளின் பிரச்னையை, அவர்கள் வட்டி, அடிமைத்தனம் என்ற முறையில் சுரண்டப்படுவதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். குடியின் பாதிப்பு, ஏழை குடும்பங்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை மகன், மருமகன் கேரக்டர் மூலமாக சொல்லியிருப்பதும் நச். பண்ணையாளர்களின் சுயநலத்துக்காக முருகேசன் பலி ஆகிற, வேலை வாங்கப்படுகிற சீன், அவர் தவிக்கிற சீன் உருக்கம். சினிமா என்பதை தாண்டி ஒரு கிராமத்தில் நாமும் இருக்கிற உணர்வை தருகிற திரைக்கதையை, வசனங்களை கொடுத்த இயக்குனர் சுகவனத்தை பாராட்டலாம். பலியிடப்பட வேண்டியது ஆடுகள் அல்ல என்ற கருவும் நல்ல கருத்து
பண்ணையார், கூலி தொழிலாளிகள் நிலைமை, அப்பா, மகள் பாசம், தாத்தா, பேரன் உறவு, காதல், நட்பு, ஜாதிபாகுபாடு ஆகியவற்றை பல சீன்களில் நேர்த்தியாக சொல்லியிருப்பதும், அந்த காட்சிகளில் சம்பந்தப்பட்டவர்களின் இயல்பான நடிப்பும் படத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. ஆடு காணாமல் போகிற இடங்களும், அடுத்த நடக்கும் விஷயங்களும், கிளைமாக்சில் ஒண்டிமுனி கோயில் நடக்கும் சம்பவங்களும் விறுவிறு. குல தெய்வம் மீது கிராம மக்களின் வைத்திருக்கும் நம்பிக்கை, திருவிழா நடத்த அவர்கள் அவமானப்படுகிற, ஏமாற்றப்படுகிற சீன்கள் உணர்ச்சிபூர்வமானவை. குறிப்பாக, ஜே.டி.விமலின் ஒளிப்பதிவு அந்த பகுதிக்கே நாம் சென்று வரும் உணர்வை தருகிறது. அவரின் கேமரா கோணங்கள் கவித்துவமானவை. கிராமத்து இசையை, சரியான பின்னணி இசையை பல இடங்களில் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன், சதீஷ் எடிட்டிங் கச்சிதம்.
சிலசமயம் வேகமாக பேசுகிற கொங்கு வட்டார வழக்கை, அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. கிளைமாக்சில் சில இடங்களில் செயற்கை தனம் எட்டி பார்க்கிறது. கொஞ்சம் மெதுவாக நகரும் கதை என சில மைனஸ் இருந்தாலும், புது இயக்குனர், புதுமுக நடிகர், புது கதை, புது களம் என எல்லாம் சேர்ந்து, தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டு இருக்கிறது. வணிக சமரசமின்றி ஒரு கிராமத்து வாழ்வியலை சொல்லும் இந்த படம் பல விருதுகளுக்கு, பல பாராட்டுகளுக்கு தகுதியானது.
ஒண்டிமுனியும் நல்லபாடனும் - சில படங்கள் எத்தனை ஆண்டுகளை கடந்தாலும் மனதில் நிற்கும், இது அந்த வகை.