பிபி180
தயாரிப்பு : ரேடியன்ட் பிலிம்ஸ், அதுல் இந்தியா மூவீஸ்
இயக்கம் : ஜேபி
நடிப்பு : தன்யா ரவிச்சந்திரன், டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், அருள்தாஸ்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : ராமலிங்கம்
வெளியான தேதி : நவம்பர் 28, 2025
நேரம் : 2 மணிநேரம் 13 நிமிடம்
ரேட்டிங் : 3.25 / 5
திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ கே.பாக்யராஜின் மகள் ஒரு விபத்தில் மரணமடைகிறார். மார்ச்சுவரிக்கு செல்லும் பாக்யராஜ், தனது ஆதரவாளரும், அந்த ஏரியா தாதாவுமான டேனியல் பாலாஜிக்கு போன் போட்டு 'என் மகளை போஸ்ட் மார்டம் பண்ண வேண்டாம். என்னால் தாங்க முடியாது'' என்று புலம்புகிறார். அப்போது பணியில் இருக்கும் டாக்டர் தன்யா ரவிச்சந்திரனிடம் 'போஸ்ட் மார்டம் பண்ணாதீங்க, நான் யார் தெரியுமா' என்று போனில் எகிறுகிறார் டேனியல் பாலாஜி. 'நான் ரூல்ஸ்படி தான் வேலை செய்வேன்' என்கிறார் டாக்டர். போன் சண்டை, ஈகோ சண்டை ஆகிறது. அடுத்து சில விஷயங்கள் நடக்கின்றன. தன்னை அவமானப்படுத்திய டாக்டர் தன்யா ரவிச்சந்திரன், போலீஸ் கமிஷனர் தமிழை பழி வாங்கியே தீருவேன் என்று பொங்குகிறார் டேனியல் பாலாஜி. அந்த கோபத்தில் என்ன செய்தார். அவரால் பாதிக்கப்படும் தன்யா தன் பாணியில் உயிரின் முக்கியத்துவத்தை எப்படி பதிலடி கொடுக்கிறார் என்பது, ஜேபி இயக்கிய பிபி180 கதை. ஒரு மனிதனுக்கு பிபி(ரத்த அழுத்தம்) 180ஐ தாண்டினால் அது ஆபத்தான நிலை. அதனால் இந்த தலைப்பு.
மருத்துவமனை, டாக்டர், மார்ச்சுவரி பின்னணியில் எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது. ஒரு தாதாவின் பழிவாங்கல் பேக்கிரவுண்ட்டில் எத்தனையோ கதைகள் வந்து இருக்கிறது. ஆனால், மிஷ்கின் சிஷ்யரான ஜேபி இயக்கிய பிபி180 ரொம்பவே வித்தியாசமானது. தொடக்கத்தில் தாதா டேனியல் பாலாஜியின் அறிமுகம், அவர் செய்யும் கொலைகள், கோபம், ரவுடியிசம் என்று செல்லும் கதை, பாக்யராஜ் மகள் விபத்துக்குபின் வேறு திசைக்கு மாறுகிறது. போஸ்ட்மார்டம் விஷயத்தில் நடக்கும் பிரச்னைகள், டாக்டர், தாதாவின் ஈகோ மோதல் என மாறுகிறது. அடுத்த என்ன என யூகிக்க முடியாத சீன்கள், அடுத்து என்ன செய்யப்போகிறார் என கணிக்க முடியாத டேனியல் பாலாஜியின் செய்கைகள் படத்தை விறுவிறுப்பாக்குகிறது.
டேனியல் பாலாஜி மறைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தில் அவர்தான் கதைநாயகன். அர்னால்டு என்ற அந்த கேரக்டரில் அவர் மறைந்தும் வாழ்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம். ஆரம்பம் முதல் கடைசிவரை நடிப்பில் அவர் காட்டுகிற வேகம், வெறி, கோபம் சபாஷ். தான் அவமானப்படும்போது அவர் பொங்குவதும், எதை பற்றி கவலைப்படாமல் பல அதிரடிகள் செய்வதும் அந்த கேரக்டரை ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் சில நிமிடங்களில் இன்னொரு முகத்தை காண்பித்து நான் நடிகன்டா என சொல்லாமல் சொல்கிறார். ஒரு நல்ல நடிகரை நாம் இழந்துவிட்டோம் என்று படம் முடியும்போது அனைவரும் பீல் பண்ணுவது நிச்சயம்.
ஒரு தைரியமான அரசு டாக்டராக மிரட்டியிருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன். நோயாளிகளிடம் பரிவு காட்டுகிற டாக்டராக அறிமுகம் ஆகி, ஒரு கட்டத்தில் 'வாடா, வந்து பாரு' என்று தாதா டேனியல் பாலாஜிக்கு சவால் விடுகிறார். குறிப்பாக, இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் நடிப்புக்கு செம கிளாப்ஸ். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பெண்களை உயர்வாக காண்பிக்கிற படம் இது என்ற டோனை தருகிறது தன்யா நடிப்பு. மகளை இழந்து தவிக்கிற கேரக்டரில் கே.பாக்யராஜ் உருகி, அழ வைக்கிறார். டேனியல் பாலாஜி நண்பராக, முன்னாள் எம்எல்ஏவாக வரும் அருள்தாஸ், கம்பீர போலீஸ் கமிஷனர் ஆக வரும் தமிழ் தங்கள் பங்கிற்கு கலக்கியிருக்கிறார்கள்.
இந்த கேரக்டர் தவிர, தன்யா தங்கையாக வருபவர், முகத்தை காட்டாமல் நடித்து இருக்கும் டேனியல் பாலாஜி மனைவி, அடியாட்கள், மருத்துவமனை ஊழியர்கள், போலீசார் என எல்லாரும் சினிமாதனம் இல்லாமல் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். கதையின் ஓட்டதிற்கு ஈடு கொடுத்து நகர்ந்து இருக்கிறது ராமலிங்கம் கேமரா. இரவு நேரத்தில் அதிகம் நடக்கும் கதைக்கு, அவர் ஒளிப்பதிவு பிளஸ். ஜிப்ரான் தனது இசையில் இன்னும் படத்தை வேகமாக்கி இருக்கிறார். அந்த குத்துபாட்டும் ஓகே. அரசு ஆஸ்பத்திரிகளின் அவல நிலை, டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களின் சிரமம் ஆகியவற்றை அப்பட்டமாக காண்பிக்கும் சீன்கள் நச். அரசியல்வாதிகள், போலீஸ், ரவுடிகள் நெட் வொர்க்கை சொன்ன விதமும் ஓகே
மிஷ்கின் சிஷ்யர் என்பதால் சில இடங்களில் அவர் பாணியிலான கால்களை காண்பிக்கும், முகத்தை காண்பிக்காத, விறுவிறு சேசிங் காட்சி அமைப்பு, சீன்கள் பாதிப்பு அவ்வப்போது வருகிறது. சில இடங்களில் கொஞ்சம் ஓவர் சவுண்டு. டேனியலின் கோபம் சில சமயம் நமக்கும் பிபியை எகிறி வைக்கிறது. சில இடங்களில் அளவுக்கு அதிக வன்முறை, ரத்தம் ஓவர் டோஸ். ஒரு கமிஷனரை, ஒரு தாதாவால் இப்படி செய்ய முடியுமா? என்ற கேள்வி படத்திற்கு மைனஸ். இடைவேளைக்குபின் பல இடங்களில் நம்ப முடியாத சீன்கள். அதை சரி செய்து இருக்கலாம். டேனியல் பாலாஜி சம்பந்தப்பட்ட சில கிளைக்கதைகள் படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. ஆனாலும், மனித உயிர்களின் மகத்துவம் சொல்லும் அந்த கிளைமாக்ஸ் காட்சி திடுக். அதை கண்களை மூடாமல், திரையில் இருந்து முகத்தை திருப்பாமல் பார்ப்பது கடினம். ஆனாலும், ரத்த வெறியர்களுக்கு, தாதாக்களுக்கு பாடமாக அமையும் அந்த இடம் டச்சிங். பிபி எகிறி, கோபத்தில் எல்லை மீறுபவர்களுக்கு இயக்குனர் கொடுக்க விரும்பும் தண்டனை நல்ல தேர்வு.
பிபி180... ரொம்ப ஆடாதீங்க டா, ஒருநாள் அரசு ஆஸ்பத்திரிக்கு, மார்ச்சுவரிக்கு போய் பாருங்க என்ற கருவுக்கு பொக்கே