ரிவால்வர் ரீட்டா
தயாரிப்பு : பேஷன் ஸ்டூடியோஸ், ரூட்
இயக்கம் : ஜே.கே.சந்துரு
நடிப்பு : கீர்த்திசுரேஷ், ராதிகா, சுனில், ஜான் விஜய்
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : தினேஷ்கிருஷ்ணன்
வெளியான தேதி : நவம்பர் 28, 2025
நேரம் : 2 மணிநேரம் 22 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
போதையில் அட்ரஸ் மாறி கீர்த்தி சுரேஷ் வீட்டுக்கு வரும் பிரபல ரவுடியான சூப்பர் சுப்பராயன் அங்கேயே இறக்கிறார். அந்த பாடியை அப்புறப்படுத்த கீர்த்தி சுரேஷ், அவர் அம்மா ராதிகா, சகோதரிகள் பக்கா ஸ்கெட்ச் போடுகிறார்கள். இதற்கிடையில் ரவுடியின் மகனான சுனில் ஒரு டீமுடன் அப்பாவை தேடுகிறார். ரவுடியின் தலையை வெட்டி 5 கோடி சம்பாதிக்க நினைக்கிறது ஒரு கும்பல். பழைய பகை காரணமாக அந்த தலையை வாங்க அலைகிறார் இன்னொரு ரவுடியான அஜய் கோஷ். இடையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் டார்ச்சர் வேறு. இவ்வளவு பிரச்னைகளையும் எப்படி சமாளிக்கிறது கீர்த்தி சுரேஷ் குடும்பம்? தனது கைக்கு வரும் ரிவால்வர் கொண்டு கீர்த்தி என்ன செய்கிறார், இதுதான் ஜே.கே.சந்துரு இயக்கிய ரிவால்வர் ரீட்டா கதை.
தலைப்பை பார்த்துவிட்டு இது பக்கா ஆக் ஷன் கதை, ரிவால்வர் கொண்டு சுட்டுக் கொண்டே இருப்பார் கீர்த்தி சுரேஷ், ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள் இருக்கும் என்று தப்பு கணக்கு போட்டால், அது தவறு. இது பிளாக் காமெடி கதை. பல படங்களில் பார்த்த, தங்கள் வீட்டில் தற்செயலாக இறக்கும், ஒருவர் பாடியை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த நினைக்கும் ஒரு அப்பாவி குடும்பத்தின் கதை. கிளைமாக்சில் மட்டும் நீங்க நினைக்கிற ஆக் ஷன் கொஞ்சம் இருக்கிறது.
அப்பா இல்லாத குடும்பம், அம்மா, அக்கா, தங்கை என வாழும் கீர்த்தி சுரேசுக்கு, சபல புத்தியால், போதையில் வீடு மாறி வந்து இறக்கும் ரவுடி பாடியால் சிக்கல். மற்றபடி படங்களை போல அந்த பாடியை பிரிட்ஜில் வைத்து, பின்னர் ஒரு பேக்கில் அடைத்து, மற்ற படங்களை போல ஒரு கார் டிக்கியில் வைத்து டிஸ்போஸ் பண்ண நினைக்கிறார். மற்ற படங்களை போல, இதிலும் பாடி காணாமல் போகிறது. மற்ற படங்களை போல.. இப்படி போகிறது கதை.
அப்பாவிதனமான முகம், சில புத்திசாலிதனமான நடவடிக்கைகள், கிளைமாக்ஸ் சீனில் மட்டும் கீர்த்தி நடிப்பு ஓகே. மற்றபடி, பல இடங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி வந்து போகிறார். அவருக்கான பில்டப் சீன், பவர் புல் வசனங்கள், அதிரடி ஆக் ஷன் ஏனோ அதிகம் இல்லை. கீர்த்தி சுரேஷ் அம்மாவாக வரும் ராதிகா தனது வெகுளி நடிப்பால், பேச்சால் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். ஆனாலும், அவர் நடிப்பு பல இடங்களில் ஓவர் 'நடிப்பு'.
பிரபல தெலுங்கு நடிகர் சுனில் வில்லன், இன்னொரு வில்லன் அஜய் கோஷ், மற்றொரு வில்லன் கல்யாண் மாஸ்டர் டீம், புரோக்கர் சுரேஷ் சக்ரவர்த்தி டீம், போலீஸ் ஜான் விஜய் டீம் என ஏகப்பட்டபேர் இருந்தாலும், ஒருவரை மற்றவர்கள் தேடிக்கொண்டே இருப்பதில் பெரும்பாலான கதை செல்கிறது. அதிலும் பல காட்சிகளில் பேசிக்கொண்டே இருப்பதும், காரில் புதுச்சேரியை சுற்றும் காட்சிகளும் போர்.
பிளாக் காமெடி என்றாலும் ரெடின் கிங்ஸ்லி, சென்ட்ராயன், பிளேடு சங்கர் உட்பட பலர் வந்து காமெடி என்ற பெயரில் காதை கடிக்கிறார்கள். வழக்கமான தனது ஓவர் பேச்சு, நடிப்பால் ஜான் விஜய் வந்து டார்ச்சர் கொடுக்கிறார். இதற்கிடையில், அந்த கால பாணியில் தப்பு, தப்பாக தெலுங்கு பேசும் வில்லன், போனில், காரில் மாறி, மாறி சுற்றும் சீன்கள், போலீஸ் ஸ்டேஷன், ஆள் இல்லாத பேக்டரியில் கிளைமாக்ஸ் என்று, ஏகப்பட்ட படங்களில் பார்த்த, அதே சீன்கள் என்று படம் முழுக்க ஏகப்பட்ட சலிப்பு. படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், யாரும் மனதில் நிற்கவில்லை. அதிலும் காமெடி என்ற பெயரில் பல படங்களில் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன் கொடுக்கும் ரெடின் கிங்ஸ்லி இனியாவது மாறலாம். நல்ல நடிகரான சுனிலை கூட, அடையாளம் தெரியாத அளவுக்கு கெட்அப் மாற்றி, சுமாராக நடிக்க வைத்து வேஸ்ட் செய்து இருக்கிறார்கள். சரி, ஷான் ரோல்டன் நல்ல மெலோடி கொடுத்து இருப்பார், பின்னணி இசையில் கலக்கியிருப்பார் என நினைத்தால் அதுவும் ஏமாற்றம். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு ஓகே.
ஒரு ஹீரோயின் முக்கியத்துவமுள்ள படத்துக்கான காட்சி அமைப்புகள், ஒரு காமெடி படத்துக்கான வசனங்கள், ஒரு திரில்லர் படத்துக்கான பில்டப் என எதுவுமே இல்லாமல் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் சந்துரு. பல படங்களில் பார்த்த காட்சிகள் இருப்பதும் படத்தை பின்னோக்கி இழுக்கிறது. கிளைமாக்சில் சில நிமிடங்கள் வரும் டுவிஸ்ட், கீர்த்தியின் நடிப்பு, அவருக்கான பில்டப் மட்டுமே படத்தில் இருக்கும் உருப்படியான விஷயம். மற்றபடி, இந்த கதை, காமெடி, ஆக் சனுக்கு அவர் முகம் செட்டாகவில்லை. ஒரு மகாநடிகையை இப்படி டம்மி நடிகை ஆக்கிவிட்டார்களே என்ற கோபம் வருகிறது.
ரிவால்வர் ரீட்டா - பொம்மை துப்பாக்கி