விலாயத் புத்தா (மலையாளம்)
தயாரிப்பு ; சந்தீப் சேனன் - ஏவி அனுப்
இயக்கம் ; ஜெயன் நம்பியார்
நடிப்பு ; பிரித்விராஜ், ஷம்மி திலகன், சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியம்வதா கிருஷ்ணன்
இசை ; ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு ; அரவிந்த் காஷ்யப்
வெளியான தேதி ; நவம்பர் 21 2025
நேரம் ; 2 மணி 56 நிமிடம்
ரேட்டிங் ; 3.25 / 5
எழுத்தாளர் இந்து கோபன் எழுதிய விலாயத் புத்தா நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
மறையூர் கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் பஞ்சாயத்து தலைவராக கம்பீரமாக வலம் வருபவர் ஷம்மி திலகன். நேர்மைக்கு பெயர் போனவர். எதிலும் சுத்தம், வெண்மை என்று இருந்தவர், ஒரு நாள் தனது வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் குறுக்குப் பாதையில் செல்லும்போது அங்கிருந்த வீட்டில் திறந்துகிடந்த செப்டிக் டேங்க் ஒன்றில் விழுந்து விடுகிறார். அது ஒரு விலைமாதுவின் வீடு என்பதால் ஊர்மக்கள் சேர்ந்து அவரை மீட்டாலும் தவறான நோக்கத்தில் தான் அவர் அங்கு வந்தார் என்பதுபோல அவர் மீது அழியாக் கறையாக இந்த அவமானம் சேர்ந்து விடுகிறது. இதனால் அவமானம் தாங்காமல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டோடு முடங்குகிறார். தனது வீட்டில் சந்தன மரம் ஒன்றை வளர்க்கும் ஷம்மி திலகன், தனது இறப்பின்போது அந்த சந்தன மரத்தை வெட்டி தன்னை எரிக்க வேண்டும், அந்த வாசத்தில், தன் மீது படிந்த இந்த கறை எல்லாம் போகும் என தீர்மானமாக இருக்கிறார்.
இன்னொரு பக்கம் சந்தன மரங்களை விலைக்கு வாங்குவதும் சில நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தர மறுத்தால் அவர்களுக்கு தெரியாமலேயே அவற்றை வெட்டி விற்பனை செய்யும் வியாபாரி பிரித்விராஜ். ஷம்மி திலகன் வாத்தியாராக இருந்தபோது அவரிடம் அவமானப்பட்டு பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்தியவர். ஒரு முறை ஏதேச்சையாக ஷம்மி திலகன் வீட்டிற்கு வரும் பிரித்விராஜ் அந்த சந்தன மரத்தை பார்க்கிறார். அது சந்தன மரங்களிலேயே விலை உயர்ந்த விலாயத் புத்தா என்கிற மரம் என்பது தெரிய வருகிறது.
அதற்கு பல மடங்கு கூடுதல் விலை தருவதாக கூறி ஷம்மி திலகனிடம் கேட்க, அவர் மறுத்து விடுகிறார். அருகில் வசிக்கும் மலை கிராமத்து மக்களுக்கு சொந்தமாக சாலை வசதி செய்து தர நிறைய பணம் நிறைய தேவைப்படுவதால் இந்த சந்தன மரத்தை எப்படியாவது விற்க வேண்டும் என நினைக்கும் பிரித்விராஜ், ஒரு கட்டத்தில் இந்த மரத்தை நான் நிச்சயம் வெட்டுவேன் என்கிறார், அப்படி யாராவது இதை வெட்டினால் சுட்டுத் தள்ளுவேன் என்று எச்சரிக்கை விடுக்கிறார் ஷம்மி திலகன். அந்த மரத்தை பிரித்விராஜ் வெட்டினாரா ? ஷம்மி திலகன் அதை வெட்ட விட்டாரா என்பது கிளைமாக்ஸ்.
படம் துவங்கி கிட்டத்தட்ட 20 நிமிடம் கழித்து தான், எந்தவித பில்டப்பும் இல்லாமல் சாதாரணமாக என்ட்ரி கொடுக்கிறார் பிரித்விராஜ். கொஞ்சம் கருமை படிந்த முகம், தூக்கி கட்டிய கைலி என மலைவாசி கிராம மனிதனாக, ஒரு சந்தன வியாபாரியாக அந்த டபுள் மோகனன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் பிரித்விராஜ். தனது வாத்தியார் என்றாலும் கூட ஈகோ என வரும்போது அதை சாதிக்கத் துடிக்கும் தீவிரம், நீதிபதியிடம் சவால் விட்டு சாமர்த்தியமாக காரியம் சாதிப்பது, காதலியின் விருப்பத்தை நிறைவேற்ற எந்த ரிஸ்க்கையும் எடுப்பது என காட்சிக்கு காட்சி பரபரவென ஓடிக்கொண்டே இருக்கிறார் பிரித்விராஜ். அதேசமயம் ஷம்மி திலகனுக்கும் பிரித்விராஜுக்கும் இடையே நடக்கும் அந்த ஈகோ மோதலில் ஒரு நள்ளிரவு இருவருக்கும் இடையே நடக்கும் விஷயத்தில் நம்மை கண்கலங்கவும் வைத்து விடுகிறார் பிரித்விராஜ்.
பிரித்விராஜுக்கு சமமாக அல்லது அவரை விட கூடுதல் நேரம் திரையில் வருபவராக மிக வலுவான கதாபாத்திரத்தில் ஷம்மி திலகன் (நடிகர் திலகனின் மகன்). இதுநாள் வரை சாதாரண வில்லனாக வந்து போன இவர் இந்த படத்தில் இதுவரை அவர் நடித்திராத வகையில் ஒரு மிகச் சிறப்பான குணசித்திர கதாபாத்திரத்தை தாங்கி நடித்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை இவரது நடிப்பு நம்மை கட்டிப்போட்டு விடுகிறது. குறிப்பாக சாக்கடையில் விழுந்த பின் இவர் தினசரி படும் மன அவஸ்தை, தனது சந்தன மரத்தை காப்பாற்றுவதற்காக துப்பாக்கியுடன் வீட்டு வாசலில் கட்டிலை போட்டு படுத்து கிடப்பது, மரம் பறிபோய் விடுமோ என பதறுவது என படத்தின் கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய தூணாக நின்று இருக்கிறார். இனி வரும் நாட்களில் திலகனைப் போல இவரையும் மலையாள திரையுலகம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கதாநாயகியாக பிரியம்வதா கிருஷ்ணன்.. தெனாவெட்டு கலந்த நடிப்பு. அதிலும் பிரித்விராஜுடன் இணைந்து இவர் காட்டும் அன்யோன்யம் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்தது சரிதான் என்று சொல்ல வைக்கிறது.
நீதிபதியாக வரும் சுராஜ் வெஞ்சாரமூடு படம் முழுக்க பெரிதாக ஏதோ செய்யப் போகிறார் என்று நினைத்தால் சில காட்சிகளில் மட்டுமே வந்து பிரித்விராஜிடம் சவால் விட்டு தோற்றுப்போய் சமரசமாகி அத்துடன் காணாமலும் போய்விடுகிறார். இன்னும் அவரை அதிகம் பயன்படுத்தி இருக்கலாம்.
இவர்களைத் தாண்டி ஷம்மி திலகனின் உதவியாளராக அவருடன் எப்போதும் நல்லது கெட்டதுகளில் பயணித்து அவரது இம்சைகளையும் தாங்கி பயணிக்கும் அந்த உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அவ்வளவு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிரித்விராஜின் பிசினஸ் எதிரியாக அசுரன் பட புகழ் டிஜே அருணாச்சலம் சரியான தேர்வு. இவருக்கும் பிரித்விராஜூக்குமான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி உக்கிரம்.
படம் முழுவதும் காடு, மலை சார்ந்த கிராமத்தில் பயணிப்பதால் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் பாடல்களும் நம்மையும் அந்த கிராமத்து மனிதர்களில் ஒருவராக உணர செய்கிறது.
இந்த படத்தில் மிக முக்கிய பங்கு ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப்புக்கு தான். சேசிங் காட்சிகள் ஆகட்டும், காட்டுக்குள் மலையேறும் காட்சிகள் ஆகட்டும் பிரமிக்க வைத்து விடுகிறார் ஒளிப்பதிவில். அதிலும் குறிப்பாக பிரித்விராஜ் தனது காதலியை ஜிப்பில் ஏற்றிக்கொண்டு, ஊர் மக்கள் பின்னால் தொடர்ந்து வர, ஆபத்தான மலையில் செங்குத்தாக ஏறும் அந்த பத்து நிமிட காட்சி நம்மை பதைபதைக்க வைத்து விடுகிறது. படத்தின் ஹைலைட்டுகளில் இது முக்கியமான ஒன்று.
எழுத்தாளர் இந்து கோபன் எழுதிய நாவலை அழகாக திரைப்படமாக கொடுத்திருக்கிறார் ஜெயன் நம்பியார். வழக்கமான சந்தன மர கடத்தல், வன இலாகா அதிகாரிகள் துரத்தல், தொழில் எதிரிகள் என பழைய வட்டத்திற்குள்ளேயே இந்த கதையும் பயணிக்கிறது என்றாலும், இதில் ஹீரோ மட்டுமல்ல அவர் யாரை எதிர்க்கிறாரோ அவரும் நல்லவர்தான் என்கிற போது இவர்களுக்கு இடையே ஏற்படும் போராட்டத்தை கத்தி மேல் நடப்பது போன்று கவனமாக கையாண்டு படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார்.
அதிலும் பிரித்விராஜ், ஷம்மி திலகன் இருவரின் ஈகோ மோதலை இவர் கையாண்ட விதம் அழகு. ஒரு கட்டத்தில் ஷம்மி திலகன் சார்பாக பிரித்விராஜ் மீதே நமக்கு கோபம் வரும் விதமாக திரைக்கதையை அழகாக பின்னி இருக்கிறார். படத்தின் நீளம் அதிகம் என்பது ஒரு முக்கிய குறை. அதே சமயம் படம் பார்க்க வரும் ரசிகர்களை விலாயத் புத்தா ஏமாற்றவில்லை.
விலாயத் புத்தா ; ஞானம் தரும் போதி மரம்