உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / தீயவர் குலை நடுங்க

தீயவர் குலை நடுங்க

தயாரிப்பு : ஜி.எஸ்.ஆர்ட்ஸ்
இயக்கம் : தினேஷ் லட்சுமணன்
நடிப்பு : ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜூன், வேல.ராமமூர்த்தி, லோகு,
இசை : பரத் ஆசீவகன்
ஒளிப்பதிவு : சரவணன் அபிமன்யு
வெளியான தேதி : நவம்பர் 21, 2025
நேரம் : 2 மணிநேரம் 07 நிமிடம்
ரேட்டிங் : 2.25 / 5

'சிறப்பு' குழந்தைகள் படிக்கும் ஸ்கூலில் டீச்சராக வேலை பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷ், தீயவர் குலை நடுங்க 'எதை' செய்கிறார். அந்த தீயவர்கள் 'என்ன' செய்திருந்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் 'அந்த' குற்றங்களின் பின்னணி? குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா? இதுதான் இந்த படத்தின் கரு. தினேஷ் லட்சுமணன் இயக்கி இருக்கிறார்.

முகத்தை மறைத்துக் கொண்டு, ஒரு கறுப்பு உடையில் சிலரை கொலை செய்கிறான் ஒரு மர்ம மனிதன். அந்த வழக்கை விசாரிக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன். சென்னையில் உள்ள ஈகிள் அபார்ட்மென்டுக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதை அவர் கண்டுபிடிக்கிறார். அங்கே வசிக்கும் புதுமுக ஹீரோவுக்கும், அவர் காதலி ஐஸ்வர்யா ராஜேசுக்கும், அந்த அபார்ட்மென்ட் ஓனர் ராம்குமாருக்கும், அங்கே வசித்த சிறுமிக்கும், இந்த கொலைகளுக்கும் என்ன தொடர்பு, இந்த பழிவாங்கலின் பின்னணியில் இருக்கும் நிஜ சம்பவம் என்ன என்ற ரீதியில் திரில்லர் கதையாக நகர்கிறது தீயவர் குலை நடுங்க.

எழுத்தாளர் லோகு என்பவர் கொடூரமாக கொலை செய்யப்படுவதில் இருந்து கதை தொடங்குகிறது. அடுத்து வரும் விசாரணை, அடுத்தடுத்த கொலைகள், அர்ஜூனின் சந்தேகம், ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டர் என ஆரம்பத்தில் கதை ஓரளவு வேகமாக நகர்கிறது. முதற்பாதியில் ஸ்கூல் டீச்சராக, அமைதியாகவே வந்து போகிறார் ஐஸ்வர்யா. இடைவேளைக்குபின் அவர் கேரக்டர் மாறுகிறது. அவருக்கும் அந்த ஸ்பெஷல் சைல்டு அனிகாவுக்குமான பாசம், தவிப்பு, கோபம் என, அவர் நடவடிக்கைகள் மாற, வேறு முகத்துக்கு மாறுகிறார். பெண் குழந்தைகள் மீதான அக்கறை, பாலியல் சீண்டல், வக்கிரபுத்தி ஆண்களின் கொடூர முகம், தண்டனை என நகரும் இந்த கதையில் நடித்த அவரை பாராட்டலாம். கமர்ஷியல் விஷயங்கள் அதிகம் இல்லாத, சமூக அக்கறையுள்ள, அதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதையில் ஈகோ இல்லாமல் நடித்த அர்ஜூனையும் பாராட்டலாம்.

அர்ஜூன் சம்பந்தப்பட்ட விசாரணை காட்சிகள், அந்த குழந்தை சம்பந்தப்பட்ட சில சீன்கள்தான் படத்தை தாங்கி பிடிக்கிறது. அர்ஜூனின் லிப்ட் சண்டை, கிளைமாக்ஸ் சண்டை, வழக்கு மீதான ஆர்வம் பரபர. கொலைக்கான காரணத்தை அவர் கண்டுபிடிக்கும் விதம், கொலையாளிகளை நெருங்கும் விதம் வேகமாக இருக்கிறது. முதற்பாதியில் டீச்சராக வரும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு இன்னும் வலுவான சீன்களை வைத்து இருக்கலாம். அதேபோல், கிளைமாக்சில் இன்னும் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் வைத்து இருக்கலாம். பல இடங்களில் சும்மா வந்து போகிறார், சில வசனங்கள் பேசுகிறார். அவர் கேரக்டரை இன்னும் உணர்வுபூர்மாக காண்பித்து இருந்து இருக்கலாம். கிளைமாக்ஸ் பைட் மட்டும் சிறப்பு. ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கிற கேரக்டரில் வரும் வேல.ராமமூர்த்தியும் மனதில் நிற்கிறார். அப்புறம், அந்த குழந்தை அனிகா நடிப்பு, அவர் கேரக்டர் பின்னணி உருக்கம். விஷால் அப்பா ஜி.கே.ரெட்டி வந்து போகிறார்.

எழுத்தாளராக வரும் லோகு, போலீஸ் ஆக வரும் தங்கதுரை, குழந்தையின் அம்மா அபிராமி, குழந்தையை கவனிக்கும் பிரியதர்ஷினி ராஜ்குமார் என மற்ற கேரக்டர்களும் ஓகே. இவர்களுக்கு மத்தியில் ஒரு மாறுபட்ட வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார். அவரின் குரல், கெட்அப், நடிப்பு பிரதமாதம். ஐஸ்வர்யா காதலன் பிரவீனுக்கு திருப்புமுனை கேரக்டர். இவ்வளவு பேர் இருந்தாலும் அர்ஜூன், அந்த குழந்தை நடிப்புதான் படத்துக்கு பிளஸ் ஆக இருக்கிறது. சரவணன் ஒளிப்பதிவு ஓகே. பரத் சுமார்.0

ஒரு திரில்லர் கதைக்கான வேகம் இல்லாதது, திரைக்கதையில் சுவாரஸ்யங்கள் இல்லாதது, சிலரின் மந்தமான நடிப்பால் படம் தத்தளிக்கிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள, குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கதையில் அதற்கான வலுவான சீன்கள் இல்லாதது மைனஸ். இப்படிப்பட்ட முகமூடி கில்லர், வக்கிர வில்லன்கள் கதை, அதற்கான கிளைமாக்சை பல படங்களில் பார்த்து இருப்பதால், இதில் புதிதாக ஒன்றும் இல்லை. கிளைமாக்ஸ் எதிர்பார்த்த ஒன்று. ஒரு மாறுபட்ட கதையை, நல்ல கருவை சொல்ல நினைத்த இயக்குனர் அதில் திணறியிருக்கிறார். பெண்கள் குழந்தைகள் பத்திரம், யாரையும் நம்பாதீங்க. மோசமானவர்கள் சுற்றிலும் இருக்கிறார்கள் என்ற மெசேஜ் படத்தில் இருக்கும் உருப்படியான விஷயம்.

தீயவர் குலை நடுங்க - தலைப்பில் இருக்கும் பில்டப் கதை, காட்சி அமைப்பில் இல்லை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !