உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / மிடில் கிளாஸ்

மிடில் கிளாஸ்

தயாரிப்பு : ஆக்சிஸ் பிலிம் பேக்டரி
இயக்கம் : கிஷோர் முத்துராமலிங்கம்
நடிப்பு : முனிஷ்காந்த், விஜயலட்சுமி, ராதாரவி, மாளவிகா
இசை : பிரணவ் முனிராஜ்
ஒளிப்பதிவு : சுதர்சன் சீனிவாசன்
வெளியான தேதி : நவம்பர் 21 2025
நேரம் : 2 மணிநேரம் 04 நிமிடம்
ரேட்டிங் : 3.25 / 5

தனியார் கம்பெனியில் குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு, சென்னையில் தட்டு தடுமாறி குடும்பம் நடத்தும் முனிஷ்காந்த், விஜயலட்சுமி தம்பதிகளுக்கு, பூர்வீக சொத்து வழியாக ஒரு கோடி செக் கிடைக்கிறது. 'அதை செய்யலாம், இதை வாங்கலாம்' என அவர்கள் கனவு கண்டிருக்கும் நிலையில், பெயர் எழுதப்படாத அந்த செக் தொலைந்து போகிறது. அந்த செக்கை கொடுத்தது யார்? தொலைந்தது எப்படி? அதை கண்டுபிடித்தார்களா? என்பது மிடில் கிளாஸ் கதை. கிஷோர் ராமலிங்கம் இயக்கி இருக்கிறார்.

தலைப்புக்கு ஏற்ப மிடில் கிளாஸ் குடும்பங்களில் மனநிலை, பண நிலை, அவர்களின் எதிர்பார்ப்புகள், திடீரென ஒரு கோடி வருகிற நிலை வந்தால் அவர்கள் ஆடுகிற ஆட்டம், அதை இழக்கும்போது அவர்கள் படுகிற பாடு என பல்வேறு விஷயங்களை உணர்ப்பூர்வமாக 'மிடில் கிளாஸ்' மக்களின் பார்வையில் சொல்லி இருக்கிறார் அறிமுகம் இயக்குனர். மரகதநாணயம் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.

அன்பான மனைவி, அழகான 2 குழந்தைகள், அவ்வப்போது பீர், தொப்பை, கிராமத்து குணம், நண்பர்களுடன் அரட்டை, சொந்த ஊர் கனவு என நடுத்தர வயது 'மிடில் கிளாஸ்' மனிதனாகவே வாழ்ந்து இருக்கிறார் முனிஷ்காந்த். அவர் கதையின் நாயகன் என்றாலும், ஓவர் பில்டப், ஹீரோயிஸம் இல்லாமல் கதையோடு கேரக்டராகவே பயணித்து இருக்கிறார். அடிக்கடி கோபக்கார மனைவியிடம் திட்டு வாங்குவது, சொந்த ஊரில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கனவு காண்பது என சரசாரி வாழ்க்கை வாழ்பவருக்கு, அப்பாவின் ஒரு உயில் மூலமாக ஒரு கோடி பணம் செக் ஆக கிடைக்க, அதை தொலைத்துவிட்டு அவர் படுகிற பாடுதான் படத்தின் உயிர். பெயர் நிரப்பபடாத அந்த செக்கை எப்படி தொலைத்தேன் என்று அவர் நண்பர்களுடன் அலையும்போது நம் மனசும் தவிக்கிறது. கடைசியில் சில விஷயங்கள் மூலம் 'இதுதான் வாழ்க்கை' என புரிந்து கொண்டு அவர் மாறுவது சூப்பர். அந்த சில நிமிடங்கள் படத்தை பீல் குட் மூவி ஆக்கி இருக்கிறது. கதை நாயகனாக முனிஷ்காந்த் சக்சஸ் ஆகிவிட்டார் என்றே சொல்லலாம்.

அன்புராணி என்ற கோபக்கார, பணம் சம்பாதிக்கிற துடிக்கிற கேரக்டரில் விஜயலட்சுமி அகத்தியன் பின்னி எடுத்து இருக்கிறார். கணவருடன் அவர் போடுகிற சண்டை, உணர்ச்சிவசப்பட்டு விடுகிற வார்த்தைகள் பல நடுத்தர குடும்பத்தலைவிகளை நினைவு படுத்துகிறது. அந்த குரல், உடை, மேனரிசம் எல்லாமே விஜயலட்சுமிக்கு செட் ஆகி இருக்கிறது. இனி, நடிக்க மாட்டேன்னு சொல்லாதீங்க, நிறைய நடியுங்க விஜி!

இவர்கள் இருவரை தவிர, சேட் ஆக வருகிற பெரிய மனிதர், செக் கண்டுபிடிக்க உதவுகிற ராதாரவி, டாக்டராக வருகிற மாளவிகா அவினாஷ், முனிஸ்காந்த நண்பர்கள் கோடாங்கி வடிவேலு, குரேஷி, அந்த குழந்தைகள் என எல்லாரும் தங்களுக்கான கேரக்டரை சிறப்பாக செய்து படத்துக்கு வலு ஊட்டியிருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் வேல.ராமமூர்த்தி, அவர் செய்கிற விஷயங்கள், பேசுகிற டயலாக் நமக்கு படிப்பினை யுடியூப் ஆரம்பிக்கிற காட்சிகள் கலகல.

குடும்ப கதை என்பதால் ஆங்காங்கே சினிமாதனம், சீரியல்தனம் வருவதை பார்க்க முடிகிறது. ஒரு கோடி செக் கிடைக்க, மாற்று வழி இல்லையா? ஏன் இவ்வளவு களேபரம் என்று சிலசமயம் கேட்க தோன்றுகிறது. சில சீன்களை முன்பே யூகிக்க முடிகிறது. விஜயலட்சுமியும், முனிஷ்காந்த்தும் அவ்வப்போது ஓவர் ஆக்டிங்கில் சிக்குகிறார்கள். இப்படி சில மைனஸ் இருக்கிறது. ஆனாலும் கிளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது வேறு பீலிங் வருகிறது. பணத்துக்கு ஆசைப்படாத மனிதர்கள் இருக்கிறார்கள். எங்கோ ஒரு இடத்தில் மனித நேயம் இருக்கிறது என்ற பார்வை வருகிறது. அதுதான் இயக்குனரின் திறமை. சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு நிஜ வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது. பிரணவ் முனிராஜ் இசை படத்தை விறுவிறுப்பாக்குகிறது.

தொலைந்து போன ஒரு கோடி ரூபாய் செக்கை கண்டுபிடிக்கும் மிடில் கிளாஸ் குடும்ப கதை என்றாலும், அதற்குள் மனிதநேயம், நுட்பமான உணர்வுகள், பணக்கார, ஏழை மக்களின் எண்ண ஓட்டங்கள், நண்பர்கள், முகம் அறியாதவர்களின் நல்ல குணம், பணத்தின் மதிப்பு, நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை என பல விஷயங்களை, ஒவ்வொரு சீன்கள் வழியாக கடத்தி, ஒருவித பாசிட்டிவ் எண்ணத்தை வளர்ந்து இருக்கிறார் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம். வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, பழிவாங்கல் என நெகட்டிவ் சிந்தனைகளும் ஏகப்பட்ட படங்கள் வரும் மத்தியில், இந்த படத்தின் கடைசி அரைமணி நேர சீன்கள் அப்படியொரு நிம்மதி, நம்பிக்கையை தருகிறது. உலகத்தில் நல்லவர்களும் இருக்கிறார், நாம கவலைப்பட வேண்டாம், பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என ஆறுதலை தருகிறது. ஒருவித நிம்மதி, நம்பிக்கையுடன் சீட்டை விட்டு எழ வைக்கிறது மிடில்கிளாஸ்.

மிடில்கிளாஸ் - கொஞ்சம் குறைகள் இருந்தாலும், எல்லா கிளாஸ் மக்களுக்கும் பிடிக்கும் பாசிட்டிவ் கதை.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !