கும்கி 2
தயாரிப்பு : பென் மூவீஸ்
இயக்கம் : பிரபுசாலமன்
நடிப்பு : மதி, அர்ஜூன்தாஸ், ஷ்ரிதா, ஆண்ட்ரூஸ்
இசை : நிவாஸ் கே.பிரசன்னா
ஒளிப்பதிவு : சுகுமார்
வெளியான தேதி : நவம்பர் 14, 2025
நேரம் : 2 மணிநேரம் 14 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
பிரபுசாலமன் இயக்கிய கும்கி படம் 2012ல் வெளியாகி, பெரிய வெற்றியை பெற்றது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உட்பட பலர் நடித்து இருந்தனர். ஏகப்பட்ட விருதுகளையும் படம் அள்ளியது. கும்கி படத்துக்கும், கும்கி 2 படத்துக்கும் கதை ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லை. நடிகர்களும் வேறு. இதிலும் யானை இருக்கிறது. பிரபுசாலமன் இயக்கி இருக்கிறார், இந்த இரண்டு ஒற்றுமைகள் மட்டுமே.
ஒரு குழியில் விழுந்து தத்தளிக்கும் குட்டி யானையை காப்பாற்றுகிறான் சிறுவன். அன்று முதல் அந்த யானைக்கும், அவனுக்கும் பாசப்பிணைப்பு உருவாகிறது. பல ஆண்டுகள் அது தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகள் தங்கள் வெற்றிக்காக அந்த யானையை பலியிட நினைக்கிறார்கள். அதை நயவஞ்சகமாக இழுத்து செல்கிறார்கள். மீண்டும் அந்த யானையை காப்பாற்றினாரா வளர்ந்து 'இளைஞன்' ஆகியிருக்கும் அந்த சிறுவன். பதிலுக்கு யானை என்ன செய்தது, இதுதான் கும்கி 2 படத்தின் கதை.
பல ஆண்டுகள் கிடப்பில் இருந்த கும்கி 2, பல்வேறு தடைகள், சட்ட சிக்கல்களை தாண்டி வெளியாகி இருக்கிறது. இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் மருமகன் மதி ஹீரோ. புதுமுகம் ஷ்ரிதா ஹீரோயின் அல்ல, ஒரு முக்கியமான கேரக்டரில் வருகிறார். தங்கள் அரசியல் லாபத்துக்காக நிலா என்ற அந்த யானையை, பூஜைகள் நடத்தி பலியிட நினைக்கிறது ஒரு கட்சி தலைமை. (படப்பிடிப்பு தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், அப்போது ஆட்சியில் இருந்த கட்சினு புரிந்துகொள்ளணும்). அந்த யானையை பணம் கொடுத்து வாங்கி அவர்கள் பலியிட நினைக்கும்போது ஹீரோ மதி அதை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கிளைமாக்ஸ். ஹீரோவாக புதுமுக மதி நடிப்பு ஓகே. ஆனால், விக்ரம்பிரபு, கும்கி முதல் பாகத்துடன் ஒப்பிட்டால் நிறைய ஏமாற்றம். கிளைமாக்ஸில் மட்டும் யானை காப்பாற்ற துடிக்கும் சீனில் ஓரளவு நடித்து இருக்கிறார். இதில் காதல், ஹீரோயின் இல்லை. யானையை காப்பாற்ற உதவும் கேரக்டரில், அதுவும் இடைவேளைக்குபின் சில காட்சிகளில் வருகிறார் ஷ்ரிதா. அவர் மேனரிசம், டயலாக் வித்தியாசமாக இருக்கிறது. இந்த நேரத்தில், லட்சுமி மேனனை, கும்கி பாடலை நினைத்து பார்க்க வேண்டியது இருக்கிறது.
ஹீரோவுக்கு, யானைக்கு உதவுவது போல நடித்து, பின்னர் கலர் மாறுகிற கேரக்டரில் வருகிறார் அர்ஜூன்தாஸ். அவரின் சீன்கள் படத்துக்கு பிளஸ். அதுவும் கொஞ்ச நேரம் வருவது மைனஸ். அரசியல்வாதிகள் என்ற பெயரில் ஏகப்பட்டபேர் கூட்டமாக இருக்கிறார்கள். வசனம் பேசுகிறார்கள், யானை கொல்லப்படுவதை ரசிக்க வருபவர்கள், பின்னர் தலை தெறிக்க ஓடுகிறார்கள். யானையை வில்லன் கும்பல் கொல்ல நெருங்கும் சமயம், காலில் அடிபட்டதால் மவுத் ஆர்கன் வாசித்து, மயக்கத்தில் இருக்கும் யானையை எழுப்புகிறார் ஹீரோ. அப்புறமென்ன, யானை அனைவரையும் பந்தாடுகிறது. இப்படி கதை போகிறது.
நிவாஸ் கே. பிரசன்னா பாடல்களும் ஏமாற்றம். இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட ஏமாற்றங்கள். யானையை பலி கொடுக்கிற கதைகளும், இதற்குமுன்பு 2 வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சரி, எந்த யாகத்தில், பரிகார பூஜையில் யானையை பலி கொடுக்கிற மத சடங்கு இருக்கிறது. ஒன்றுமே புரியவில்லை. கும்கி முதல் பாகத்தில் இமான் பாடல்கள் அவ்வளவு அழகு. இதில் நிவாஸ் கே. பிரசன்னா பாஸ் மார்க் வாங்கவே திணறுகிறார்.
காடுகள், யானை சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சுகுமார் திறமை தெரிகிறது. மற்றபடி, இது பிரபுசாலமன் படமா? அவருக்கு என்னாச்சு என்று கேட்க தோன்றுகிறது. பல ஆண்டுகள் கழித்து வருவதால் நிறைய சீன்கள் ஒட்டவில்லை. ஏதோ ரிலீஸ் செய்தால் போதும் என்ற மனநிலையில் படத்தை வெளியிட்ட மாதிரி தெரிகிறது
கும்கி 2 - நீங்க கும்கி படத்தை நினைத்துக்கொண்டு போனால் யானை காலில் மிதிபடுகிற தண்டனை கிடைக்கும்