மதறாஸ் மாபியா கம்பெனி
தயாரிப்பு : அண்ணா புரடக் ஷன்ஸ்
இயக்கம் : ஏ.எஸ்.முகுந்தன்
நடிப்பு : ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா சங்கர், முனிஸ்காந்த், லயா
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு : அசோக்ராஜ்
வெளியான தேதி : நவம்பர் 14, 2025
நேரம் : 2 மணிநேரம் 06 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி, புகழ் வரிசையில் பழைய வில்லன், இப்போதைய காமெடி நடிகர் ஆனந்த்ராஜ் கதைநாயனாக நடித்து இருக்கும் படம் மதறாஸ் மாபியா கம்பெனி. தலைப்புக்கு ஏற்ப, சென்னையில் அடியாட்களை வைத்துக்கொண்டு ஹைடெக் முறையில் ரவுடி தொழில் செய்கிறார் ஆனந்த்ராஜ். அவர் அட்டகாசம் அதிகமானதால் அவரை கட்டுப்படுத்தி, சட்டத்தின் முன்னால் நிறுத்த போலீஸ் அதிகாரி சம்யுக்தாவை நியமிக்கிறார் டிஜிபி. இருவருக்கும் நடக்கும் சண்டையில் யார் ஜெயித்தார்கள் என்பது படத்தின் கதை
தனது கட்டப்பஞ்சாய்த்து, கலெக் ஷன், அடிதடி வேலைகளுக்கு இன்டர்வியூ வைத்து, அவர்களின் 'தகுதி' அறிந்து ஆள் எடுக்கிற வித்தியாசமான ரவுடி ஆனந்த்ராஜ். அதேசமயம் சீரியசான ஆளும் இல்லை. இரண்டு பொண்டாட்டி, சக ரவுடிகளிடம் தனது பாணியில் சண்டை, தனது கம்பெனி ஊழியர்களுடன் ஜாலியான பேச்சு, ஒரு பழைய வேனில் பயணம், அவ்வப்போது கொலை என சந்தோஷமாகவும் இருக்கிறார். அவருடன் மோதுகிறார் கறார் போலீஸ் ஆபீசரான சம்யுக்தா. ஆனந்தராஜ் மீது ஒரு கேஸ் கூட இல்லாத நிலையில், அவரை எப்படி பிடிப்பது என யோசிக்கிறார். ஒரு தீவிரவாத வழக்கில் அவர் சிக்க, அவரை துரத்துகிறார். ஆனந்த்ராஜ்க்கு என்ன ஆனது என கிளைமாக்ஸ் முடிகிறது.
தனக்கே உரிய நக்கல்தனமான பேச்சுடன் வில்லத்தனம் செய்கிற கேரக்டரில் ஆனந்த்ராஜ் கவர்கிறார். அவருக்கும் அவர் சிஷ்யன் முனிஸ்காந்த்துக்குமான காட்சிகள், பழிவாங்கல் சீன்கள் சிரிப்பை வரவழைக்கிறது. மனைவி தீபா, துணைவி லயாவுடன் அவர் அனுசரித்து வாழும் வாழ்க்கை, குடும்ப பிரச்னைகளும் ரசிக்க வைக்கிறது. அவர் சீரியஸ் ஆக சில கொலை செய்வது, சண்டைபோடுவது கூட காமெடி டோனில் இருக்கிறது. கிளைமாக்சில் சாவு வீட்டில் அவர் படுகிற பாடுகிற செம. ஆனாலும், அவரை கதைநாயகனாக ஏற்க முடியவில்லை. ஒரு கேரக்டர் மாதிரியே படத்தில் வந்து போகிறார்.
போலீஸ் அதிகாரி வேடத்துக்கு பிட் ஆக இருக்கிறார் சம்யுக்தா. அவருக்கும் ஒரு ரவுடிக்குமான பைட் சீன் சூப்பர். ஆனால், பல இடங்களில் கோபமான முகத்துடன் ஓடிக்கொண்டே இருப்பதும், எப்போதும் ஒரு மாதிரியான ரியாக் ஷன் கொடுப்பதும் அவரின் மைனஸ்.
ஆனந்த்ராஜ் மனைவியாக வரும் தீபா, துணைவியாக வரும் சோஷியல் மீடியா பிரபலம் லயா ஆகியோர் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி நடித்து இருக்கிறார்கள். அன்பிட் ஆனதால் மாபியா கம்பெனியில் இருந்து நீக்கப்பட்ட, தமாசு ரவுடியாக வரும் முனிஸ்காந்த் டயலாக், அவர் செய்கைகள் , அவரின் ஸ்கெட்ச் படத்தில் இருக்கும் சில உருப்படியான சீன்கள். ஆனந்த்ராஜ் மகள் காதல், அடுத்து நடக்கும் விஷயங்கள் செயற்கை தனம். மற்றபடி, சில சிரிக்கிற சீன்களை தவிர, சில சேசிங் சீன்களை தவிர படத்தில் உருப்படியான விஷயங்கள் குறைவு. ஸ்ரீகாந்த் தேவாவின் ஆந்திர குத்து மட்டும் ஓகே.
கிளைமாக்சில் ஆனந்த்ராஜ் என்ன ஆனார். அவர் உயிரோடு இருக்கிற என்ற டுவிஸ்ட் ஓகே என்றாலும், அந்த காட்சிகளின் நீளம் அலுப்பு. அவரை பிடிக்க அடிக்கடி மீட்டிங் போடும் போலீஸ், ஆனந்த்ராஜ் குடும்ப பிரச்னைகள், சம்யுக்தா அம்மா சீன்கள், வில்லன்களுடன் சண்டை ஆகியவை பல படங்களில் பார்த்து புளித்தது. காமெடி படமாகவும் இல்லாமல், சண்டை படமாகவும் இல்லாமல் ஏதோ ஒரு கலவையில் படத்தின் டோன் அமைந்துள்ளது. ஆனந்த்ராஜ் ஏன் கதைநாயகன் ஆனார், அதுவும் இந்த படத்தில் என்ற கேள்வி படம் முடிந்தபின் ஓடிக் கொண்டே இருக்கிறது.
மதராஸ் மாபியா கம்பெனி - ஒன்றிரண்டு சிரிப்பு சீன்களுக்கு மட்டுமே கம்பெனி 'உத்தரவாதம்' அளிக்கிறது