காந்தா
தயாரிப்பு : ஸ்பிரிட் மீடியா, வேபேரர் பிலிம்ஸ்
இயக்கம் : செல்வமணி செல்வராஜ்
நடிப்பு : துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ, ராணா,
இசை : ஜானு சந்தர்
ஒளிப்பதிவு : டேனி சஞ்சஸ் லோபஸ்
வெளியான தேதி : நவம்பர் 14, 2025
நேரம் : 2 மணிநேரம் 43 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
காந்தா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் துல்கர் சல்மானுக்கும், சீனியர் இயக்குனரான சமுத்திரக்கனிக்கும் ஈகோ மோதல். ''நான் பெரிய ஹீரோ, இப்படிதான் சீன்கள் இருக்க வேண்டும்'' என்கிறார் துல்கர். ''உன்னை ஆளாக்கியவன் நான். சொல்கிற படி நடி'' என்கிறார் சமுத்திரக்கனி. இவர்களுக்கு இடையில் புதுமுக ஹீரோயின் பாக்யஸ்ரீ சிக்கி தவிக்கிறார். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் பிரச்னைகள், படமும் முடியுமா என தயாரிப்பாளர், படக்குழுவினர் தவிக்கின்றனர். இதற்கிடையில் ஹீரோவின் காதலில் விழுகிறார் ஹீரோயின். திருப்பதியில் இவர்கள் ரகசிய திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அந்த சமயத்தில் ஸ்டூடியோவில் ஒரு இரவில் மர்மமான முறையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணா ஸ்டூடியோவுக்கு வந்து அதிரடி விசாரணை நடத்துகிறார். கொலையானது யார்? கொலை செய்தது யார்? கொல்லப்பட காரணம் என்ன? குற்றவாளி சிக்கினாரா? இதுதான் செல்வமணி செல்வராஜ் இயக்கிய காந்தா படத்தின் கரு
1950களில் இருந்த சினிமா, ஸ்டூடியோ ஆதிக்கம், செட், ஸ்கிரிப்ட், அப்போது இருந்த நடைமுறைகள், இயக்குனர், ஹீரோ மோதல், ஹீரோயின் காதல் பின்னணியில் ஒரு மாறுபட்ட கதையை சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குபின் கதையும் துப்பறியும் பாணிக்கு மாறுவது ரசிக்க வைக்கிறது.
இதில் டி.கே.மகாதேவன் என்ற கட்டழகு ஹீரோவாக வந்து 'நான் நடிகன்டா' என்று சீனுக்கு சீன் கலக்குகிறார் துல்கர் சல்மான். சில சாயலில் எம்ஜிஆர் மாதிரி, சில சமயம் சிவாஜி மாதிரி, அந்த கால நடிகர்கள் மாதிரி தெரிந்தாலும் நடிப்பில் தனி முத்திரை பதித்து பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார். தன்னை வளர்த்துவிட்ட சமுத்திரக்கனியுடன் செட்டில் மோதுகிற சீன், ஹீரோயினை காதலிக்கும் சீன், நீளமான வசனங்களை உணர்ச்சிபூர்வமாக பேசுகிற சீன், குறிப்பாக கிளைமாக்சில் கேரக்டரை உணர்ந்து ரசித்து நடித்து இருக்கிறார். அவருக்கு பல விருதுகள் நிச்சயம்.
அடுத்தாக, தான் வளர்ந்துவிட்ட ஒரு நடிகன் தன்னை மதிக்கவில்லையே என்ற கோபத்தில் பொங்குபவராக 'அய்யா' என்ற சீனியர் இயக்குனர் வரும் சமுத்திரக்கனியும் பல இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். அவரின் கெட்அப், சின்ன, சின்ன ரியாக்ஷன் அருமை.
யாருப்பா இந்த ஹீரோயின் என கேட்கும் அளவுக்கு பல இடங்களில் மனதை அள்ளுகிறார் பாக்யஸ்ரீ. சினிமா செட்டில் அவர் பேசுகிற வசனங்கள் சாவித்ரியை நினைவுப்படுத்துகிறது. துல்கருக்கும், அவருக்குமான காதல் சீன்கள், சமுத்திரனிக்கனி, அவருக்குமான பாச சீன்கள் படத்தின் பிளஸ். என்ன இடைவேளைக்குபின் அவருக்கான காட்சிகள் குறைவு. இந்த மூவரை தவிர, இடைவேளைக்குபின் இன்ஸ்பெக்டராக வரும் ராணாவும் ஒரு வித நக்கல் டோனில் வழக்கை துப்பறிகிறார்.
அந்தகால சினிமா என்பதால் ஹீரோ உதவியாளராக வரும் வையாபுரி, உதவி இயக்குனராக வரும் கஜேஷ் நாகேஷ் (அண்ணா, அண்ணா அவர் அழைப்பதே அழகு) , துல்கர் மனைவியாக வரும் காயத்ரி, பணக்கார மாமனாராக வரும் நிழல்கள் ரவி, போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன், ஸ்டூடியோ அதிபர் ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலரும், அப்போதைய உடை, கெட் அப்பில் வந்து அசத்தி, தங்கள் பங்கிற்கு நடித்து ரசிக்க வைத்து இருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள், கருப்பு வெள்ளை டோனில் இருப்பதால் நடிகர்கள் சின்ன சின்ன முக அசைவுகள், எக்ஸ்பிரஸனை தெளிவாக ரசிக்க முடிகிறது.
கமர்ஷியல் சினிமா, கலர்புல் சினிமா மத்தியில், கறுப்பு வெள்ளை சினிமாவை, அந்தகால கதையை யோசித்த இயக்குனரை, அதற்காக நேர்த்தியாக செட் அமைத்துக் கொடுத்த கலை இயக்குனர் ராமலிங்கத்தை பாராட்டலாம். குறிப்பாக, அந்த உலகிற்கே, அந்த ஸ்டூடியோ செட்டிற்கே அழைத்து சென்ற டேனி சஞ்செஸ் லோபெஸின் ஒளிப்பதிவை, ஜானு சந்தர் இசையை தட்டிக்கொடுக்கலாம். பாடல்கள் ஓகே ரகம்
அந்த காலத்தில் நடக்கும் கதை என்பதால், பலரின் நடிப்பு ஓவர் டோஸ் ஆக இருக்கிறது. துல்கர் கூட சில இடங்களில் நடித்து கொட்டுகிறார். வசனங்களும் பழைய ஸ்டைல். இதெல்லாம் இன்றைய தலைமுறைக்கு புரியுமா? குறிப்பாக, ஸ்டூடியோ, முதலாளி, செட், குரு பக்தி இதெல்லாம் அவர்களை கவருமா? என்ற கேள்வியும் எழுகிறது. படத்தின் நீளம் பெரிய மைனஸ். துல்கருக்கும், சமுத்திரக்கனிக்கும் என்ன பிரச்னை? அவர்களுக்குள் என்ன உறவு, ஏன் சண்டை போடுகிறார்கள் என்பதை தெரிவதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. அப்புறம் கொலை, ராணா துப்பறிவு காட்சிகள் என நீள்கிறது. யார் கொலை செய்து இருப்பார்கள் என்று ராணா கண்டுபிடிக்கும் சீன்கள் ஓகே. கிளைமாக்ஸ் எதிர்பாராதது. ஆனால் அதை இன்னும் அழுத்தமாக, வேறு கோணத்தில் எடுத்து இருந்தால் இன்னும் ரசித்து இருக்கலாம். சண்டை போட்டு பிரிந்த இயக்குனர், ஹீரோ எப்படி சேர்ந்தார்கள் என்பதற்கு வலுவாக விஷயங்கள் இல்லை.
ஈகோ மோதல், ஒரு கட்டத்தில் கொலை, திரில்லர் என நகர்வது நல்ல திரைக்கதை. இரண்டையும் கிளைமாக்சில் இணைந்து, எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசுங்க, பேசி தீருங்க என்ற நல்ல கருத்தை சொல்லியிருக்கிறார். கறுப்பு வெள்ளை ஆங்கில படங்கள் பார்க்கிற பீலிங் வருகிறது. ஆனால், 1950களின் நடிகர்கள் சாயல் இல்லாமல், எந்த உண்மை சம்பவங்கள் பாதிப்பு இல்லாமல், நிஜ விஷயங்களை தழுவாமல் அந்த கால கதை சொன்னது சின்ன ஏமாற்றம். படத்தின் நீளம், சில வசன காட்சிகள், அதீத நடிப்பு படத்தை பின்னோக்கி இழுக்கிறது. அந்த கால ஆங்கில படம் பார்த்த பீலிங் இருக்கிறது. ஆனாலும் தேவையில்லாத சீன்கள், செயற்கை தனமான நடிப்பு, சுவாரஸ்யம் இல்லாத சில விஷயங்களால் படம் பல படங்களில் போரடிக்கிறது
காந்தா : துல்கர் சல்மானுக்காக, பாக்யஸ்ரீக்காக பார்க்கலாம்... கொஞ்சம் பொறுமை இருந்தால்...!