கிறிஸ்டினா கதிர்வேலன்
தயாரிப்பு : ஸ்ரீலட்சுமி ட்ரீம் பேக்டரி
இயக்கம் : SJN.அலெக்ஸ் பாண்டியன்
நடிப்பு : கவுசிக்ராம், பிரதீபா, கஞ்சா கருப்பு, ஆரோல் டி. சங்கர்
ஒளிப்பதிவு : பிரகத்முனியசாமி
இசை : என்.ஆர்.ரகுநந்தன்
வெளியான தேதி : நவம்பர் 7, 2025
நேரம் : 2 மணிநேரம் 15 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
கல்லுாரியில் தன்னுடன் படிக்கும் கிறிஸ்டினா(பிரதீபா)வை ஒரு தலையாக காதலிக்கிறார் ஹீரோ கதிர்வேலன்(கவுசிக்ராம்). அப்போது தங்கள் நண்பர்களின் பதிவு திருமணத்துக்கு இருவரும் சாட்சிகளாக கையெழுத்து போடுகிறார்கள். அவர்களின் திருமண சான்றிதழில் தவறு ஏற்பட, பெயர் குழப்பதால் இவர்கள் திருமணம் செய்ததாக சான்றிதழ் வருகிறது. கிறிஸ்டினாவுக்கு இன்னொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன நிலையில் இந்த சான்றிதழ் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அடுத்து என்ன நடக்கிறது. கிறிஸ்டினா, கதிர்வேலன் தடைகளை மீறி சேர்ந்தார்களா என்பது இந்த படக்கரு
ஒரு சின்ன அஜாக்கிரதை எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும், அதனால், இரண்டு தரப்பில் எவ்வளவு பிரச்னைகள் என்பதை காதல் கலந்து சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குனர். புதுமுகங்கள் நிறைபேர் நடித்து இருப்பது படத்தின் பிளஸ். அதுவே, படத்தின் மைனஸ் ஆகவும் இருக்கிறது.
ஹீரோயிசம் அதிகம் இல்லாமல், ஓவர் பில்டப் இல்லாமல் கும்பகோணத்து கிராமத்து இளைஞனாக தனது வேலையை சரியாக செய்து இ ருக்கிறார் ஹீரோ கவுசிக்ராம். ஹீரோயின் பிரதீபாவை ஒரு தலையாக காதலிக்கிற இடங்களில், நண்பர்களுக்கு உதவி செய்கிற இடங்களி்ல் கொஞ்சம் கவனிக்கப்படுகிறார். கிளைமாக்ஸ்க்கு முன்பு தனது காதலி ஆஸ்பிட்டலில் இருக்கும்போது, அவருக்காக டாக்டரிடம் கெஞ்சுகிற சீனில் ரொம்பவே கவனிக்கப்படுகிறார். மற்றபடி, பெரிதாக ஈர்க்கவில்லை. ஹீரோயினாக வருகிற இன்ஸ்டா பிரபலம் பிரதீபா படத்துக்கு பிளஸ்தான். அவரின் இயல்பான முகம், கண்கள், நடிப்பு, வசனங்கள் அருமை. இன்னும் அவருக்கான சீன்களை அதிகரித்து இருந்தால் படம் இன்னும் நன்றாக வந்து இருக்கும். இன்னொரு காதல், அவர்களின் திருமணம், மோதல் என கதை வேறு பக்கம் செல்வதும், காட்சிகளில் கோர்வை இல்லாதததும் போராடிக்க வைக்கிறது
கஞ்சா கருப்பு சில சீன்களில் வந்து போகிறார். ஹீரோ, ஹீரோயின் நண்பர்களக வருபவர்கள், இரண்டு குடும்பத்து உறவினர்கள் நடிப்பு ஓகே. பாதராக வரும் ஆரோல் டி. சங்கர் கவனிக்க வைக்கிறார். கும்பகோணம் சுற்று வட்டார பகுதிகளை, ராமேஸ்வரத்தை அழகாக காண்பிக்கிறது பிரகத் முனியசாமி கேமரா. என்.ஆர்.ரகுநந்தனின் இசை இதமாக இருக்கிறது. ஆனாலும், அதிகம் ரசிக்கும்படி இல்லை. திருமண சான்றிதழில் பெயர் குழப்பம், வக்கீல் சீன்கள், நண்பர்கள் சீன் மட்டும் ஓகே. இயல்பான கல்லுாரி, கிராமத்து காட்சிகள், சினிமாத்தனம் இல்லாத பலரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஆனால், மற்ற சீன்களில் அழுத்தம் இல்லை. ஏனோதானோ திரைக்கதை இருப்பதும், புதுமுக நடிகர்களின் நடிப்பும் மைனஸ்.
ஹீரோயின் காதல், ஹீரோயின் பார்வை ஆகியவை தெளிவாக சொல்லப்படாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. திருமண நிச்சயதார்த்தம் வரை செல்லும் ஹீரோயின் மனம் மாறுவது ஏனோ? காதல் கதையில் இன்னொரு வக்கிர கதை வந்து, கிளைமாக்சில் முடிகிறது. காதல் கதைகளில் இது புதிது. அதை சரியாக சொல்லவில்லை. ஹீரோயின் சம்பந்தப்பட்ட அந்த கிளைமாக்ஸ். அவருக்காக உருகும் ஹீரோவின் நடிப்பு மட்டுமே மனதில் நிற்கிறது.
கிறிஸ்டினா கதிர்வேலன் - காதலை ஏதோ புதுமாதிரியாக சொல்ல முயன்று சொதப்பி இருக்கிறார்கள்