வட்டக்கானல்
தயாரிப்பு : எம்பிஆர்பிலிம்ஸ், ஸ்கைலைன் சினிமாஸ்
இயக்கம் : பித்தாக் புகழேந்தி
நடிப்பு : துருவன் மனோ, ஆர்.கே.சுரேஷ், மீனாட்சி கோவிந்தராஜன், வித்யா பிரதீப்,
ஒளிப்பதிவு : எம்.ஏ.ஆனந்த்
இசை : மாரீஸ் விஜய்.
வெளியான தேதி : நவம்பர் 7, 2025
நேரம் : 2 மணிநேரம் 10 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
கொடைக்கானல் மலைப்பகுதியில் வட்டக்கானல் என்ற பகுதியில் விளையும் போதை காளான் பின்னணியில் உருவான பழிவாங்கும் கதை. காளான் விற்பனையில் வெயிட்டாக சம்பாதிக்கும் அந்த ஏரியா ரவடி ஆர்.கே.சுரேசுக்கு துருவன் மனோ(பாடகர் மனோ மகன்), கபாலி விஷ்வா, விஜய் டிவி சரத் என 3 மகன்கள். காளான் சண்டையில் தனது கணவனை இழந்த வித்யா பிரதீப், அதற்கு காரணமான ஆர்.கே.சுரேசை கொல்ல துடிக்கிறார். காளான் விளையும் 200 ஏக்கர் நிலத்துக்காக மீனாட்சி கோவிந்தராஜனை மிரட்டுகிறார் ஆர்.கே.சுரேஷ். மீனாட்சி கோவிந்தராஜனை காதலிக்கிறார் துருவன் மனோ. இந்த 3 விஷயங்களுக்கும் என்ன தீர்வு. இதற்காக நடக்கும் சண்டையில் யார் பலி ஆகிறார்கள் என்பது வட்டக்கானல் கதை.
போதைக்காளான் விற்பனை, அதற்காக நடக்கும் அதிகார மோதல், பழிவாங்கல்தான் முக்கியமான கரு என்றாலும், அதில் காதல், பாசம், துரோகம் கலந்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஆர்.கே.சுரேசும், அவர் மகனாக வரும் துருவன் மனோவுக்குதான் படத்தில் அதிக காட்சிகள். கொஞ்சம் வயதான தோற்றத்தில் வில்லத்தனம் கலந்து மிரட்டியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். அவரின் நெகட்டிவ் ஷேடு, அதிரடி நடவடிக்கை, பிளாஷ்பேக் காட்சிகள் ஓகே. ஆனால், பல சீன்களில் இயல்பை மீறி ஓவர் சினிமாத்தனத்தில் நடித்து இருப்பது மைனஸ். பாடகர் மனோ மகன் துருவன் குடித்துக்கொண்டே இருக்கிறார். ஒரு சில சீன்களில், வசனத்தில் கவனிக்க வைக்கிறார். மற்றபடி, பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி நடிக்கவில்லை. அவர் காதலியாக, வாய் பேச முடியாத கேரக்டரில் வரும் மீனாட்சிகோவிந்தராஜன் மட்டுமே படத்தில் ஒரே ஆறுதல். அவரின் கார், அப்பா பாசம் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஓரளவு ரசிக்க முடிகிறது. பாடலிலும் அவர் அழகு.
பிளாஷ்பேக்கில் வரும் ஆடுகளம் நரேன் சீன்கள் பல படங்களில் பார்த்து, புளித்தது. அவர் மனைவியாக வரும் வித்யா பிரதீப்புக்கு அந்த கேரக்டர் செட்டாகவில்லை. கிளைமாக்சில் மட்டும அதிரடியாக வந்து சில விஷயங்களை செய்து மனதில் நிற்கிறார். ஹீரோயின் அப்பாவாக பாடகர் மனோவும், அவர் மனைவியாக வினோதினியும் சில நிமிடங்கள் வருகிறார்கள். அந்த பாசக்காட்சிகள் டச்சிங். மற்றபடி ஏகப்பட்ட நடிகர்கள் வருகிறார்கள், ஏதோ வசனம் பேசுகிறார்கள், சண்டைபோடுகிறார்கள். எதுவும் ஒட்டவில்லை. ஏதோ சொல்ல நினைத்து, எதையோ எடுத்து இருக்கிறார் இயக்குனர் பித்தாக் புகழேந்தி.
போதை காளான் குறித்த கதை, ஆனால், அது குறித்த விரிவான விஷயங்கள், காளான் பாதிப்பு குறித்த வலுவான காட்சிகள் இல்லை. எதுக்கு சண்டைபோடுகிறார்கள், யார் போடுகிறார்கள், என்ன நடக்கிறது என பல இடங்களில் குழப்பம். கொடைக்கானல் மலைப்பகுதியை கண்ணுக்கு இதமாக காண்பிக்கிறது ஏம்.ஏ.ஆனந்த் கேமரா, இசை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதற்பாதியில் திரைக்கதை மைனஸ். இடைவேளைக்குபின் சில திருப்பங்களால் சூடுபிடிக்கிறது. மீண்டும் தொய்வு. கடைசியில் ஆர்.கே.சுரேஷ் சண்டை, சில டுவிஸ்ட், அவரின் முடிவு மட்டுமே மனதில் கொஞ்சம் நிற்கிறது. அந்த பத்துநிமிட காட்சிகள்தான் படத்துக்கு உயிர். போதைக்காளான் பற்றி படம், பாடகர் மனோ மகன் நடித்திருக்கும் படம், ஆர்.கே.சுரேஷ் இருக்கிற படம் . ஏதாவது இருக்கும் என்று சென்றால் டன் கணக்கில் ஏமாற்றம்.
வட்டக்கானல் - தலைப்பு, கதைக்கருவெல்லாம் ஓகே. ஆனா திருப்தியான படமாக உணர முடியல