உள்ளூர் செய்திகள்

அதர்ஸ்

தயாரிப்பு : கிராண்ட் பிக்சர்ஸ்
இயக்கம் : அபின் ஹரிஹரன்
நடிப்பு : ஆதித்ய மாதவன், கவுரிகிஷன், அஞ்சுகுரியன், முனிஸ்காந்த்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : அரவிந்த்சிங்
வெளியான தேதி : நவம்பர் 7, 2025
நேரம் : 2 மணிநேரம் 13 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5

ஒரு வேன் விபத்து குறித்து விசாரணை நடத்துகிறார் போலீஸ் அதிகாரியான புதுமுக ஹீரோ ஆதித்ய மாதவன். டாக்டரான ஹீரோயின் கவுரி கிஷன் தான் பணிபுரியும் ஆஸ்பிட்டலில் நடக்கும் ஒரு முறைகேடு குறித்து கேள்வி கேட்கிறார். இந்த இரண்டு பிரச்னைகளும் ஒரு இடத்தில் சந்திக்கின்றன. இதற்கு பின்னணியில் ஒரு பெரிய மெடிக்கல் கிரைம் இருப்பது தெரிய வருகிறது. சமூகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் அதிக அளவில் உருவாக வேண்டும் என்று நினைக்கும் சஸ்பென்ஸ் வில்லன் பின்னணி. அப்படி அவர் செய்ய காரணம் என்ன என்பதை, ஒரு மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குனர் அபின் ஹரிஹரன்.

ஒரு வேன் விபத்தில் இருந்து கதை தொடங்கிறது. அதில் சிலர் இறக்குகிறார்கள். அது குறித்து விசாரிக்கும்போது, ஆதரவற்றோர் இல்லங்களில் நடக்கும் சில முறைகேடுகள் ஹீரோவுக்கு தெரிய வருகிறது. அதற்கு காரணமானவர்களை ஹீரோ தேடும்போது மெடிக்கல் கிரைம் தெரிய வருகிறது. அதை தீவிரமாக விசாரிக்கும்போது இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன. பல திருப்பங்கள் நிகழ்கின்றன. இப்படிப்பட்ட மெடிக்கல் முறைகேடுகள் நடக்குமா என்று பதறும் ஹீரோ, அந்த வில்லனை தேடுகிறார். அவனோ கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறான். அடுத்து என்ன நடக்கிறது என்ற விறுவிறு திரைக்கதையில், இதுவரை யாரும் சொல்லாத, ஒரு விஷயத்தை கையில் எடுத்து ஒரு சமூக பிரச்னையையும் பேசியிருக்கிறார் இயக்குனர்

புதுமுகம் ஆதித்ய மாதவன் போலீஸ் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். விசாரணை காட்சிகளில் கோபம் காண்பிக்கிறார். வில்லனை கண்டுபிடிக்கும் காட்சிகளில், கிளைமாக்சில் ஆர்வம் காண்பிக்கிறார். புதுமுகம் என்பதால் சில இடங்களில் திணறவும் செய்கிறார். டாக்டராக வரும் கவுரி கிஷன் அந்த கேரக்டராக மாறி இயல்பாக நடித்து இருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அழகாகவும் இருக்கிறார். இவர்களை தவிர, இன்னொரு போலீஸ் அதிகாரியாக வரும் அஞ்சு குரியன், போலீஸ் ஆக வரும் முனிஸ்காந்த் ஆகியோரின் நடிப்பும் ஓகே. அஞ்சு குரியனின் அந்த கிளைமாக்ஸ் சண்டை செம. ஆனாலும் காமெடி என்ற பெயரில் முனிஸ்காந்த் செய்வது சித்ரவதை.

பல படங்களில் காமெடியனாக வந்த நண்டு ஜெகனுக்கு இதில் வில்லத்தனமான வேடம். அதில் அவர் பாஸ் ஆகி இருக்கிறார். அவர் கெட்டப், நடிப்பு ரசிக்க வைக்கிறது. சின்ன வேடத்தில் வந்தாலும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மனதில் நிற்கிறார். இவர்களை விட படத்தில் ஸ்கோர் செய்து, 'யாருப்பா இது' என கேட்க வைத்து இருப்பவர் ஆரம்பத்தில் அப்பாவி மெக்கானிக் ஆக வந்து, பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனாக போலீசில் நடித்து, கடைசியில் தனது உண்மையான முகத்தை காண்பிக்கும் மூர்தான். அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனங்களும், ஒவ்வொரு மேனரிசமும் சபாஷ் போட வைக்கிறது. சமூகத்தில் புறக்கணிக்கப்படும் ஒரு பிரிவுக்காக அவர் பேசும் வசனங்கள், கேட்கும் கேள்விகள் மனதை உலுக்குகிறது. கிளைமாக்சில் அரை மணி நேரம் அவர் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சமீபகால தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட கேரக்டர் வந்தது இல்லை.

விபத்து, விசாரணை, மெடிக்கல் பிரச்னை என முதற்பாதியில் கதை மெதுவாக நகர்கிறது. என்ன சொல்ல வருகிறார்கள். எதை நோக்கி கதை போகிறது என்ற சலிப்பு ஏற்படுகிறது. ஆனால், வேதா என்ற வில்லன் கேரக்டர் என்ட்ரி ஆனவுடன் கதை சூடுபிடிக்கிறது. அடுத்தடுத்த காட்சிகளால் படமும் வேகமாகிறது. அந்த கேரக்டர் குணம், பின்னணி, கோபம்தான் படத்தின் பெரிய பிளஸ். கிளைமாக்சிலும் அந்த கேரக்டருக்கு பெரிய தண்டனை கொடுக்காமல், ஒரு சமூக பார்வையுடன் கதையை நகர்த்தியிருப்பதும் அதர்ஸ் படத்தை கவனிக்க வைக்கிறது. அதேசமயம், அந்த கேரக்டரின் கொலை வெறி, தன்னை மாதிரி மற்றவர்கள் மாறணும் என்று நினைப்பதை, மாற்று திறனாளிகளை குறி வைத்து துன்புறுத்துவதை சினிமா என்றாலும் ஏற்க முடியாது.

போலீஸ் கதையில் ஹீரோ, ஹீரோயின் காதல் பெரிதாக ஒட்டவில்லை. சில விசாரணை காட்சிகளின் நீளம் போரடிக்கிறது. டக்கென முக்கியமான கருவுக்கு வராமல் எங்கேயோ சுற்றி, கடைசியில் அந்த விஷயத்துக்கு வருவது அயர்ச்சி. கிளைமாக்ஸ் சண்டைகாட்சியில், சேசிங்கில் ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் திறமை தெரிகிறது. பல காட்சிகளுக்கு தனது இசையால் உயிர் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

திருநங்கைகள், திருநம்பிகளை புறக்கணிக்ககூடாது. அவர்களின் கோபம், உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். ஆண், பெண் தவிர, அதர்ஸ் என்ற இனம் இருக்கிறது. அவர்கள் குரலை நாம் கேட்க வேண்டும் என்ற நல்ல பதிவாக அதர்ஸ் வந்துள்ளது. அதேசமயம், அதை மெடிக்கல் கிரைம் திரில்லர் கதையாக சொல்லியிருப்பதால் கொலை, பழிவாங்கல், ரத்தம், மெடிக்கல் வன்முறையையும் கூடுதலாக சேர்த்து இருக்கிறார்கள். சினிமா என்பதால் அதையெல்லாம் மறந்துவிட்டு விழிப்புணர்வு, நல்ல கருத்தை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளலாம்.

அதர்ஸ் - ஆண், பெண் நடித்த 'அதர்ஸ்' குறித்த, சமூக அக்கறையுள்ள மெடிக்கல் திரில்லர்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !