உள்ளூர் செய்திகள்

ஆரோமலே

தயாரிப்பு : மினி ஸ்டூடியோ
இயக்கம் : சாரங் தியாகு
நடிப்பு : கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத்கான், வி.டி.வி.கணேஷ்
இசை : சித்துகுமார்
ஒளிப்பதிவு : கவுதம் ராஜேந்திரன்
வெளியான தேதி : நவம்பர் 7, 2025
நேரம் : 2 மணிரேநம் 07 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

ஒரு பள்ளி மாணவன், கல்லுாரி மாணவன், வேலைக்கு செல்லும் இளைஞனின் காதலை சொல்லும் கதை என ஒரு வரியில் சொன்னாலும், 3 மாறுபட்ட காதலை, ஹீரோவின் ஆர்வக்கோளாறு, சரி, தவறுகளை, உண்மையான காதலை யூத்புல்லாக சொல்லும் கதை இது. முதல் நீ, முடிவும் நீ, சிங்க், தருணம் படங்களில் நடித்த கிஷன் தாஸ் ஹீரோவாக நடிக்க, இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் மகள் ஷிவாத்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். நடிகர் தியாகு மகன் சாரங் தியாகு இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார்.

பள்ளியில் படிக்கும் சக மாணவியை காதலிக்க ஆரம்பிக்கிறார் கிஷன் தாஸ். அவரும் தன்னை காதலிக்கிறார் என நினைக்கிற வேளையில் 'நீ என்னை தொந்தரவு பண்ணாதே, பிளீஸ்' என்று ஒரு பர்த்டே பார்ட்டியில் முகத்திற்கு நேராக அந்த பெண் சொல்லிவிடுகிறார். கல்லுாரியில் படிக்கும்போது இன்னொரு மாணவியை காதலிக்க, அதுவும் புஸ். அப்புறம் படிப்பை முடித்துவிட்டு ஒரு மேட்ரிமோனியல் கம்பெனியில் வேலைக்கு சேருபவர், அங்கே மானேஜராக இருக்கும் ஷிவாத்மிகாவுடன் சில விஷயங்களில் முரண்படுகிறார், சண்டை போடுகிறார். அவரையும் ஒரு கட்டத்தில் காதலிக்க, அவரோ சில காரணங்களால் பிரிகிறார். ஷிவாத்மிகாவை தேடி அலைகிறார் கிஷன்தாஸ். ஹீரோவின் 3வது காதலாவது சக்சஸ் ஆனதா? என்பதை இன்றைய இளைஞர்கள் மனநிலையில், இன்றைய காலகட்ட காதலாக ஆரோமலேயை எடுத்து இருக்கிறார் இயக்குனர். விண்ணை தாண்டி வருவாயா பாடலில் வரும் வரி ஆரோமலே. இதற்கு என் அன்பே என அர்த்தம். காதலின் பிரிவை சொல்லும் பாடல் அது.

பள்ளி மாணவன், கல்லுாரி மாணவன், இளைஞன் என 3 கெட் அப்புகளில், 3 விதமான மாறுபட்ட மனநிலையில் சிறப்பாக நடித்து இருக்கிறார் கிஷன் தாஸ். அதிலும் எடை குறைத்து, பள்ளி மாணவனாக அவர் நடித்து இருப்பது ரொம்பவே ரசிக்க வைக்கிறது. அந்த கலகல பள்ளி காட்சிகள் படத்துக்கு பிளஸ். கல்லுாரி போர்ஷன் ஓகே. இளைஞனாக வருகிற காட்சிகள்தான் படத்தில் அதிகம் வருகிறது. அதிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனாலும், சில இடங்களில் எக்ஸ்பிரஷன் டல். நடிக்க வேண்டிய இடங்களில் மிஸ் பண்ணிவிட்டு, ஒரே மாதிரி சோக முகத்தை காண்பிக்கிறார். மற்ற 2 ஹீரோயின்கள் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். படத்தில் அதிகம் வருகிற ஷிவாத்மிகா நடிப்பும், அவரின் கேரக்டர் பின்னணியும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஹீரோ காதலை சொல்கிற காட்சி, கிளைமாக்சில் மிரட்டியிருக்கிறார்.

இவர்களை தவிர, ஹீரோ அப்பாவாக வருகிற ராஜா ராணி பாண்டியன், அம்மா துளசி, வயதான காலத்தில் பெண்தேடும் வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் சினிமாதனம் இல்லாமல் நடித்து இருக்கிறார். தனது சின்ன வயது காதலை, அதன் பாதிப்பை சொல்கிற இடங்களில் துளசியும், அம்மாதான் முக்கியம், திருமணம் முக்கியமல்ல என்று உருகிற இடங்களில் வி.டி.வி.கணேசும், மகன் மீது அன்பு செலுத்துகிற இடங்களில் ராஜாராணி பாண்டியனும் கலக்கியிருக்கிறார்கள்.

ஹீரோ நண்பனாக வரும் ஹர்ஷத்கான் காமெடி, குறும்புகள், ஒன்லைன் ஜோக் படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஹீரோயின் தாத்தாவாக ஒரு சில சீன்களில் வந்தாலும் காத்தாடி ராமமூர்த்தி தனது அனுபவ நடிப்பால் தனி முத்திரை பதித்து இருக்கிறார். இப்படி பல கேரக்டர்கள் படத்துக்கு பலம் சேர்த்து இருக்கின்றன. பாடல்காட்சி, பள்ளி காட்சிகளில் கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவும், பின்னணி இசை, காதல் பாடல்களில் சித்துவின் இசையும் ஆராமலேவை இன்னொரு கட்டத்துக்கு எடுத்து செல்கிறது.

கவுதம் மேனன் உதவியாளர் இயக்குனர் சாரங் என்பதால் பல இடங்களில் அவரின் குருநாதர் தாக்கம், டச்சிங் தெரிகிறது. குறிப்பாக, சிம்புவின் வாய்ஸ்ஓவர் சரியான தேர்வு. பள்ளி, கல்லுாரி காட்சிகள் வேகமாக நகர்ந்தாலும், மேட்ரிமோனியல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் தொய்வு. அதை இன்னும் எளிமையாக, விறுவிறுப்பாக எடுத்து இருக்கலாம். ஏன் காதலர்கள் பிரிகிறார்கள் என்பதற்கு வலுவான காரணங்கள் இல்லை. சோகமான, காதல் தோல்வி காட்சிகள் ஹீரோவுக்கு செட்டாகவில்லை. இடைவேளைக்குபின் திரைக்கதையில் குழப்பம், விறுவிறுப்பு குறைவு.

இது என்ன காதல், இதில் என்ன சொல்ல வருகிறார்கள் புரியலையே, இந்த கால இளைஞர்கள் கேரக்டரை புரிஞ்சுகிட முடியலையே என இளமையை கடந்தவர்கள் கேட்பார்கள். அட, இதுதான் காதல், இதுதான் பீலிங். செமயாக இருக்குது என யூத் ரசிப்பார்கள்.

ஆரோமலே - கொஞ்சம் அழகான காதல் கதை, ஆனா, அழுத்தமாக இல்லை.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !