உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / டைஸ் இரே (மலையாளம்)

டைஸ் இரே (மலையாளம்)

தயாரிப்பு ; நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் & ஒய் நாட் ஸ்டுடியோஸ்
இயக்கம் ; ராகுல் சதாசிவன்
நடிப்பு ; பிரணவ் மோகன்லால், ஜிபின் கோபிநாத், சுஷ்மிதா பட், ஜெயா குரூப் மற்றும் பலர்
இசை ; கிறிஸ்டோ சேவியர்
ஒளிப்பதிவு ; ஷேனாத் ஜலால்
வெளியான தேதி ; அக்டோபர் 31, 2025
நேரம் ; 1 மணி 55 நிமிடம்
ரேட்டிங் ; 3.25/5

ஏற்கனவே மம்முட்டியை வைத்து 90களின் துவக்க காலகட்டத்தில் நடைபெற்ற மாந்திரீக பின்னணியில் ‛பிரம்மயுகம்' என்கிற ஹாரர் படத்தை கொடுத்த இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கியுள்ள படம் என்பதால் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதை அவர் இதில் ஈடு கட்டி இருக்கிறாரா ? பார்க்கலாம்.

கோடீஸ்வரரின் மகனான பிரணவ் ஒரு ஆர்கிடெக்ட். பெற்றோர் அமெரிக்காவில் இருக்க, இவர் மட்டும் கேரளாவில் பிரமாண்ட பங்களாவில் தனி ஆளாக வசிக்கிறார். ஒரு நாள் தான் காதலித்து ஒதுக்கிய தனது முன்னாள் காதலி தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்கிற தகவல் வருகிறது. அந்த வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்து வருகிறார் பிரணவ். வரும்போது அங்கிருந்து அந்தப் பெண்ணின் ஹேர் கிளிப் ஒன்றை ஞாபகார்த்தமாக எடுத்து வருகிறார். அன்றைய தினம் இருந்து தினசரி இரவு அமானுஷ்ய நிகழ்வுகள் அவரது வீட்டில் நடக்கின்றன. பிரணவ் ஆவி ஒன்றால் கடுமையாக தாக்கப்படுகிறார்.

தன்னுடைய முன்னாள் காதலி தான் ஆவியாக தன்னை தாக்குவதாக நினைக்கும் பிரணவ், காதலியின் பக்கத்து வீட்டுக்காரரான ஜிபின் என்பவருடன் சேர்ந்து இதன் பின்னணியை ஆராயத் துவங்குகிறார். இடையில் தன்னை மிரட்டுவது ஒரு பெண்ணின் ஆவி அல்ல, ஆணின் ஆவி என்பது அவருக்கு தெரிய வருகிறது, ஒரு வழியாக அந்த ஆண் யார், அவருக்கும் தனது முன்னாள் காதலிக்கும் என்ன தொடர்பு, தன்னை எதற்காக அந்த ஆவி மிரட்டுகிறது என்பதை இருவரும் சேர்ந்து கண்டுபிடித்து அதை அழிக்க முயற்சிக்கின்றனர். அந்த தேடலின் பின்னணியில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அது என்ன ? தன்னுடைய பிரச்னைக்கு பிரணவ் தீர்வு கண்டாரா என்பது மீதிக்கதை.

எந்நேரமும் சீரியஸ் ஆக இருக்கும், தன் இஷ்டப்படி வாழ்க்கையை வாழும் பணக்கார வீட்டுப் பிள்ளை கதாபாத்திரத்தில் பிரணவ் மோகன்லால் கனகச்சிதம். பொதுவாக இது போன்ற ஹாரர் படங்களில் கதாநாயகர்களைத் தவிர மற்றவர்கள் தான் ஆவிகளின் தாக்குதலுக்கு ஆளாவார்கள். கதாநாயகன் கிளைமாக்ஸில் தான் ஆவியிடம் சிக்குவார். ஆனால் இதில் ஆரம்பத்தில் இருந்தே கதாநாயகன் தாக்குதலுக்கு ஆளாவது ஆச்சரியம். அந்த காட்சிகளில் மிக இயல்பாக நடித்திருக்கிறார் பிரணவ். அதிலும் கிளைமாக்ஸில் அந்த வயதான பெண்மணியுடன் நடத்தும் போராட்டம் பதைபதைக்க வைக்கிறது.

கதாநாயகி என்கிற பெயருக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் சுஷ்மிதா பட். ஆம்.. படம் முழுவதும் வெகு சில இடங்களில் போட்டோக்களிலும் ஒன்றிரண்டு ரிலீஸ் வீடியோக்களிலும் மட்டுமே வந்து செல்கிறார். பிரணவை தாண்டி அவருக்கு உதவியாக கூடவே சுற்றும் பக்கத்து வீட்டுக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜிபின் கோபிநாத், அவரும் பயந்து நமக்கும் பயத்தை கடத்துகிறார். பிரணவை சந்திக்க வரும் இறந்து போன பெண்ணின் தம்பிக்கு ஏற்படும் முடிவு எதிர்பாராத அதிர்ச்சியை தருகிறது. இவர்களை தவிர படத்தின் முக்கிய திருப்புமுனையாக எல்சம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயா குறூப் கடைசி பத்து நிமிடங்களில் நம்மை மிரட்டி விடுகிறார்.

ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை எந்த அளவுக்கு உதவியாக இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு கிறிஸ்டோ சேவியரும் தன் பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஷேனாத் ஜலால் பிரம்மாண்டமான பங்களாவில் அமானுஷ்ய காட்சிகளை பிரமிப்பாக படமாக்கி இருக்கிறார்.

வழக்கமான ஒரு இளம்பெண் தற்கொலை, அதன் பின்னால் நாயகனுக்கு அமானுஷ்ய மிரட்டல்கள், அதன் பின்னணியில் ஒரு காரணம், அதில் ஒரு சஸ்பென்ஸ் என ஹாரர் படங்களுக்கே உண்டான டெம்ப்ளேட்டை தான் இந்த படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். காற்று பலமாக அடிப்பது, விளக்குகள் திடீர் திடீரென அணைந்து எரிவது என கிளிசே காட்சிகளும் உண்டு. என்றாலும் இந்த படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகள் நிச்சயம் படத்திற்கு பிளஸ் பாயிண்ட் என்றுதான் சொல்லலாம்.

செத்துப்போன பெண்ணுக்கு பதிலாக இன்னொருவர் ஆவியாக பழிவாங்குகிறார் என்கிற திருப்பத்தை விட கிளைமாக்ஸில் இடம்பெறும் இன்னொரு டுவிஸ்ட் யாரும் எதிர்பாராதது. அந்தவகையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர படத்தையும் தொய்வில்லாமல் நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர் ராகுல் சதாசிவன்.

டைஸ் இரே ; இறந்த காதலியின் முன்னாள் காதலனை பழிவாங்க துடிக்கும் ஒருதலை காதலனின் ஆவி



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !