மெஸன்ஜர்
தயாரிப்பு : பி.வி.கே.பிலிம் பேக்டரி
இயக்கம் : ரமேஷ் இலங்காமணி
நடிப்பு : ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா, பாத்திமா, லிவிங்ஸ்டன்
இசை : அபுபக்கர்.எம்.
ஒளிப்பதிவு : பாலகணேசன்.ஆர்
வெளியான தேதி : அக்டோபர் 31, 2025
நேரம் : 2 மணிநேரம்
ரேட்டிங் : 2 / 5
லவ் பெயிலியர் ஆன ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவர் பேஸ்புக் பக்கத்தில் ஒரு ஆறுதல் மெசேஜ் வருகிறது. அவரை அதிலிருந்து தடுக்கிறது. அடுத்தடுத்து மெஸன்ஜர் மூலமாக ஒரு இளம் பெண் அவருடன் பேசுகிறார். நம் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டே இருப்பது போல பேசுகிறாரே? யார் இவர் என டவுட்டான ஹீரோ அவரை பற்றி விசாரித்தால், 'அந்த பெண் விபத்தில் இறந்து போய்விட்டாரே' என்று தகவல் வர, பதறுகிறார். போலீஸ் லிவிங்ஸ்டன் உதவியுடன் அந்த பெண்ணின் கிராமத்துக்கு சென்று விசாரிக்கிறார். அப்போது அந்த பெண் தன்னை பேஸ்புக் மூலம் காதலித்தது ஹீரோவுக்கு தெரிய வருகிறது. அந்த காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உயிருடன் இல்லாத அந்த பெண்ணை திருமணம் செய்ய நினைக்கிறார். பேஸ்புக் மெஸன்ஜர் மூலமாக இருவரும் குடும்பம் நடத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. அதெப்படி என்பது படத்தின் கரு.
பேய் கதையையும், பேண்டசியும் கலந்து ஒரு மாறுபட்ட கதை சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். அதாவது பேயுடன் குடும்பம் நடத்தும் ஹீரோ என்ற புது கான்செப்டில் கதை நகர்கிறது. அவர்களுக்கு இடையேயான தொடர்பு மொழியாக பேஸ்புக் மெஸன்ஜர் இருக்கிறது. அந்த பேய் காதலன், குடும்பம், மாமியாருடன் அந்த வழி பேசுகிறது. கடைசியில் என்ன பிரச்னை வருகிறது என்ற ரீதியில் படம் போகிறது.
காதலனாக, பேய் காதலியை நம்பி திருமணம் செய்பவராக, அதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பவராக வருகிறார் ஹீரோ ஸ்ரீராம் கார்த்தி. பேய் ஆக வரும் பாத்திமா பிளாஷ்பேக் காட்சிகள், அவரின் காதல் சீன்கள், விபத்து காட்சிகள் உருக்கம். ஹீரோவின் முன்னாள் காதலியாக வரும் மனிஷாவும் சில சீன்களில் ஓரளவு நடித்து இருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் லிவிங்ஸ்டன், குடும்பத்தினர், நண்பர்கள் என பலர் நடித்தாலும் மெஸன்ஜர்தான் முக்கிய கேரக்டர்.
அதிலும் பல ஆவி சீன்கள் காமெடியாக போகிறது. ஆகவே, பேய் பயம் இல்லை. ஒரு கட்டத்தில் பேய் பதறுவது, மயங்கி விழுந்த மாமியாரை காப்பாற்ற போராடுவது, கணவருடன் கோபப்படுவது ஆகியவை புதுசாக இருந்தாலும், ரசிக்கும்படி இல்லை. பேயுடன் திருமணம், பர்ஸ்ட் நைட் சீன் கொஞ்சம் சுவாரஸ்யம். ஆனால், குழந்தை பெறும் சீன், விஞ்ஞானப்பூர்வமாக சொல்லப்பட்டாலும் கதைக்கு செட்டாகவில்லை. ஹீரோவின் ஆபீஸ், நண்பர்கள் சீன் போர். இசை, ஒளிப்பதிவில் பெரிய பிளஸ் இல்லை.
ஒரு பேண்டஸி பேய் கதையை சிந்தித்த இயக்குனர். அதை சுமாரான நடிகர்கள், சுமாரான திரைக்கதையால் ரொம்ப சுமார் ஆக்கி இருக்கிறார். கதையில் பேய் பயமும் இல்லை. காதலும் இல்லை. யாரும் இதுவரை சொல்லாத மாறுபட்ட கதையை சிந்தித்த இயக்குனர், அதை சொல்லும் விதத்தில் திணறி இருக்கிறார்.
மெஸன்ஜர் - பேயை திருமணம் செய்து, குழந்தை பெறும் பேண்டசி கதை. ஆனா, உயிர் இல்லாத ஆவி படம்.