உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / ராம் அப்துல்லா ஆண்டனி

ராம் அப்துல்லா ஆண்டனி

தயாரிப்பு : அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோஸ்
இயக்கம் : ஜெயவேல்
நடிப்பு : பூவையார், சவுந்தரராஜா, வேல.ராமூர்த்தி, அஜய், அர்ஜூன்.
இசை : டி.ஆர்.கிருஷ்ண சேத்தன்
ஒளிப்பதிவு : எல்.கே.விஜய்
வெளியான தேதி : அக்டோபர் 31, 2025
நேரம் : 2 மணிநேரம் 02 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5

திருவள்ளூர் மாவட்ட பள்ளியில் படிக்கும் ராம், அப்துல்லா, ஆண்டனி என்ற 3 நண்பர்கள் ஒன்றிணைந்து, தொழிலதிபர் வேல.ராமூர்த்தி பேரனை கடத்துகிறார்கள். அவனை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்து, ஓடையில் வீசுகிறார்கள். அந்த வழக்கை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் தீனா, உண்மையை அறிந்து ஒரு கட்டத்தில் 3 மாணவர்களையும் கைது செய்கிறார். அந்த கொலைக்கான காரணம் என்ன? வழக்கில் இருந்து 3 பேரும் விடுதலை ஆனார்களா? மாணவர்கள் போட்ட திட்டம் நடந்ததா? என்பது ஜெயவேல் இயக்கிய இந்த ராம் அப்துல்லா ஆண்டனி கரு.

பள்ளி மாணவர்கள் பின்னணியில் ஒரு கொலை கதை என்பதை, ஒரு வலுவான சமூக சீர்திருத்த கருத்துடன், விழிப்புணர்வு கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். 3 மாணவர்களாக பூவையார், அஜய், அர்ஜூன் ஆகியோர் புது மேனரிசத்துடன், பல சீன்களில் அழுத்தமான நடிப்பை தந்து இருக்கிறார்கள். அதிலும் பூவையார் டான்ஸ், எமோஷனல் நடிப்பு டாப். நட்பு விஷயத்திலும், அம்மா பாசத்திலும் அவர் பீல் பண்ண வைக்கிறார்.
திருக்குறள் ஆர்வலராக வரும் அஜய், அப்துல்லாவாக வரும் அர்ஜூனும் பல சீன்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர்களாக வரும் ஜாவா சுந்தரேசன், வினோதினி, தலைவாசல் விஜய், கிச்சா ரவி ஆகியோரும் பாசத்தில் உருகி இருக்கிறார்கள். அதிலும் கேன்சர் பாதிக்கப்பட்டவராக வரும் பூவையார் அம்மா ஹரிதாவுக்கு ஸ்ட்ராங்கான கேரக்டர். அதை உணர்ந்து அவரும் உருக்கமாக நடித்து இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட சீன்கள் படத்துக்கு பெரிய பிளஸ். வழக்கமான வில்லனாக வந்து சவுண்டு விடுகிறார் வேல.ராமமூர்த்தி

இரண்டாவது ஹீரோவாக, சாதாரண போலீஸ் ஆக வரும் சவுந்திராஜாவும் இடைவேளைக்குபின் நன்றாக நடித்து, முக்கியமான கேரக்டராக மாறுகிறார். வில்லத்தனமான போலீஸ் என்ற பெயரில் சேட்டைகள் செய்கிறார் தீனா. கலெக்டர், பள்ளி ஆசிரியர், போலீஸ்காரர் என மற்றவர்களின் நடிப்பும் ஓகே. அதிலும் அந்த போலீஸ்காரர் குரல் புதுசு.

3 மாணவர்கள் சேர்ந்து செய்யும் கொலை, போலீஸ் விசாரணை, மாணவர்களின் பயம் என முதற்பாதி ஓடுகிறது. அடுத்த பாதியில்தான் அந்த கொலைக்கான காரணம், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் பூவையார் சந்திக்கும் சோகம் என கதை மாறுகிறது. புகையிலையால் பாதிக்கப்படும் மாணவர்கள், அதை தடுக்க என்ன செய்கிறார்கள். அதை எப்படி கச்சிதமாக செய்கிறார்கள் என்ற கரு ஓகே. ஆனால், பல இடங்களில் நாடகத்தனம் வருவதும், காட்சிகளில் உண்மை தன்மை குறைவதும் படத்தின் ஓட்டத்தை குறைக்கிறது. பட்ஜெட் காரணமாக பல சீன்கள் இழுத்தடிக்கப்பட்டு இருப்பது புரிகிறது. திருவள்ளூர் மாவட்ட பின்னணி, மாணவர்கள் வாழ்க்கை, போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளை அழகாக காண்பிக்கிறது எல்.கே.விஜய் கேமரா. ஆரம்பம் முதல் கடைசிவரை பின்னணியில் இசையில் பிரித்து இருக்கிறார் புதுமுக இசையமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ணசேத்தன். அவரின் ஆர்வம் படத்தை ரசிக்க வைக்கிறது.

முதற்பாதி வேகமாக நகர்ந்தாலும், பிற்பாதியில் கொஞ்சம் போராடிக்கிறது. கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சிகள், திருக்குறள் போட்டி, வில்லன்களின் அடாவதி ஆகியவை சுமாராக இருக்கிறது. 3 மாணவர்கள் இப்படி செய்வார்களா? புகையிலைக்கு எதிரான போராட்டத்துக்கு கொலை தீர்வா? கலெக்டர் அதிகாரம் என்ன போன்ற பல கேள்விகளுக்கு விடை இல்லை. இன்னும் அழுத்தமான சீன்கள், இன்னும் கொஞ்சம் பரபரப்பான திரைக்கதையில் இதை சொல்லியிருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும்

ஆனாலும், பெரிய ஹீரோக்களே புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை ஸ்டைலாக நினைக்கும் இந்த கால சினிமாவில், புகையிலைக்கு எதிராக சினிமாவில் குரல் எழுப்பி, அதை நட்பு, மதங்களை கடந்து விழிப்புணர்வு கதையாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு கரம் கொடுக்கலாம்.

ராம் அப்துல்லா ஆண்டனி : 'தம்'க்கு எதிரான நல்ல கரு. ஆனா, வீரியம் குறைவு



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !