உள்ளூர் செய்திகள்

ஆர்யன்

தயாரிப்பு : விஷ்ணு விஷால் ஸ்டூடியோ
இயக்கம் : பிரவீன்.கே
நடிப்பு : விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானஸா சவுத்ரி
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : ஹரீஷ் கண்ணன்
வெளியான தேதி : அக்டோபர் 31, 2025
நேரம் : 2 மணிநேரம் 16 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5

ஒரு புகழ் பெற்ற டிவி டாக் ஷோ 'லைவ்' ஆக ஒளிபரப்பபடும்போது, பார்வையாளராக இருக்கும் செல்வராகவன் துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டுகிறார். ஒரு சில விஷயங்களை பேசிவிட்டு, சிலரை கொலை செய்யப்போவதாக சொல்லிவிட்டு, அங்கேயே தற்கொலை செய்து கொல்கிறார். அவர் சொன்னபடியே கொலை நடக்க தொடங்குகிறது. போலீஸ் அதிகாரியான விஷ்ணு விஷால் அந்த கொலைகள் குறித்தும், செல்வராகவன் குறித்தும் துப்பறிகிறார். இறந்து போன செல்வராகவன் அந்த கொலைகளை செய்கிறாரா? அது சாத்தியமா? அதை செய்தது யார்? கொலை செய்யப்பட்டவர்கள் யார்? அது நடக்க காரணம் என்ன? விஷ்ணு விஷால் அதை கண்டுபிடித்தாரா? என்பது பிரவீன் கே இயக்கிய ஆர்யன் படத்தின் கதை.

எத்தனையோ போலீஸ் கதைகள், எத்தனையோ துப்பறியும் கதைகள், எத்தனையோ சைக்கோ திரில்லர் கதைகள் வந்து இருக்கின்றன. ஆர்யன் அதில் கொஞ்சம் வித்தியாசமானது. டிவி ஷோவில் தற்கொலை செய்பவர், அவ்வப்போது வீடியோவில் தோன்றி இவரை கொலை செய்யப்போகிறேன் என போலீஸ், பொதுமக்களுக்கு க்ளூ கொடுத்துவிட்டு, அந்த கொலைகளையும் கச்சிதமாக செய்கிறார். இது எப்படி சாத்தியம் என்பதே படத்தின் வலுவான கரு. இதை புத்திசாலித்தனமான திரைக்தையில், விறுவிறு திருப்பங்கள், பரபரப்புடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர். கொலையாளியாக செல்வராகவனும், அதை கண்டுபிடிப்பவராக விஷ்ணு விஷாலும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். அந்த டிவி ஷோ தொகுப்பாளினியாக வருகிறார் ஹீரோயின் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஹீரோ மனைவி மானஸா சவுத்ரி.

போலீஸ் அதிகாரியாக, கொலைக்கான காரணத்தை கண்டுபிடிப்பவராக தனது கேரக்டரை சிறப்பாக செய்து இருக்கிறார் விஷ்ணு விஷால், அவருக்கு, வில்லனுக்கும் இடையேயான எந்த சண்டை, போட்டி, சவால் இல்லை. அதுவே படத்துக்கு குறையாக தெரிந்தாலும், மாறுபட்ட திரைக்கதையில் கிளைமாக்ஸ் உட்பட பல இடங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார். என்ன, படம் முழுக்க ஒருவித இறுக்கமான முகத்துடன் வருவது அவருக்கு செட்டாகவில்லை. அவருக்கும், மானஸா சவுத்ரிக்குமான காதல், விவகாரத்து இதெல்லாம் கதைக்கு தேவையில்லாத விஷயங்கள். கதையுடன் , இதெல்லாம் எங்கேயாவது செட் ஆகும் என்று நினைத்தால் அதுவும் ஏமாற்றமே? டிவி தொகுப்பாளினியாக வரும் ஷ்ரத்தா நடிப்பு, காஸ்ட்யூம் பியூட்டிபுல்.

வில்லனாக வரும், இறந்துபோய் கொலைகள் செய்யும் செல்வராகவன் கேரக்டர்தான் படத்துக்கு பெரிய பிளஸ். டிவி ஷோ காட்சிகளில் அவர் பேச்சு, செயல்பாடுகள், இயல்பான நடிப்பு ஓகே. ஆனால், அப்புறம் அவர் காணாமல் போகிறார். அவ்வப்போது வீடியோவில் பேசுகிறார். பொதுவாக சைக்கோ கொலைகாரர்கள் சில செயல்களால், சில வில்லத்தனத்தால் மிரட்டுவார்கள், பயத்தை காண்பிப்பார்கள். செல்வராகவன் அதை செய்யவில்லை. அவருக்கான பின்னணி, அவர் செயலுக்கான காரணங்கள் வலுவாக சொல்லப்படவில்லை. சரி, இன்னொரு போட்டி டிவியில் வேலை செய்யும் கருணாகரன் ஏதாவது செய்வார். அவருக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்கும் என நினைத்தால் அதுவும் சப்.

வில்லன் கேரக்டரில் இருக்கும் அழுத்தம், செல்வராகவன் நடிப்பிலும் மிஸ்சிங். வழக்கமான போலீஸ் அதிகாரிகள், வழக்கமான விசாரணை என கதை சென்றாலும், 4 பேரை செல்வராகவன் எப்படி கொல்கிறார். அவர்கள் யார்? என்று வரும் சீன்கள் பரபரப்பு, அதிலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்தில் செல்வராகவன் வீடியோ ஒளிபரப்பபடுவது புதுமை. கொலையாளிகள் பின்னணி, அவர்கள் கொல்லப்படும் விதத்தை டீடெயிலாக காண்பித்து இருப்பது பிளஸ். கடைசி சில நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் திக் திக்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்தை ஸ்பீடு ஆக்கியிருக்கிறது. ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு கொலைக்காட்சிகள், டிவி செட், கிளைமாக்ஸ் வீடு காட்சிகளை சிறப்பாக காண்பித்துள்ளது.

திரில்லர் கதைகளில் ஆர்யன் வித்தியாசமானது. கதை சொன்ன விதமும் புதுசு. ஆனால், கொலைக்கான காரணம்தான் ரொம்பவே வீக். அதை நியாயப்படுத்த டைரக்டர் சொல்லும் காரணங்கள், சீ்ன்கள், வசனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. கொலையாளி சைக்கோவாக இருக்கலாம். அதற்காக இப்படிப்பட்டவர்ளை கொல்வாரா? இதெல்லாம் சரியா? இதில் என்ன லாஜிக். இது புரியவே இல்லையே என்ற பார்வையாளர்களுக்கு எழும் கேள்வி படத்தை பின்னோக்கி தள்ளுகிறது. அந்த காரணத்தை மட்டும் வேறு மாதிரி, இன்னும் கொஞ்சம் புது பார்வையில் சொல்லியிருந்தால் ஆர்யன் இன்னும் உயர்ந்து இருப்பான்

ஆர்யன் : நீங்க நல்லவராக, சமூக ஆர்வலராக இருந்தால் படம் பார்த்தால் பயப்படுவீங்க



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !